பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கான தயார் நிலையில் இராணுவம்: அச்சத்தில் ஒன்றரை லட்சம் மக்கள்


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள குறுகிய நிலப் பகுதி மீது பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை இன்று நள்ளிரவில் அல்லது நாளை அதிகாலையில் தொடங்குவதற்கான முழு அளவிலான தயாரிப்புக்களை சிறிலங்கா படையின் மேற்கொண்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா. சபை, ஜி-8 நாடுகளின் அமைப்பு, வெள்ளை மாளிகை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் பலவும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவை அனைத்தையும் புறக்கணித்திருக்கும் சிறிலங்கா அரசு மற்றொரு பாரிய இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது.

பாரிய படை நடவடிக்கைக்கான முன்னோடியாக முன்னணிக் காவலரண்களை நோக்கி பெருமளவு படையினரும், ஆயுத தளபாடங்களும் நகர்த்தப்பட்டுள்ளன.

இதனைவிட தொடர்ச்சியாக செறிவான எறிகணைத் தாக்குதல்களையும், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களையும் படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் பாரிய படை நகர்வுக்கான தயாரிப்புக்கள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுமாத்தளன் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து வலைஞர்மடம் பகுதி மீது நேற்றைய நாள் தாக்குதலை நடத்திய படையினர் அதனையும் நேற்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

இதனையடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் 12 சதுர கிலோ மீற்றர் பகுதியே தற்போது இருப்பதாகத் தெரிவித்திருக்கும் இராணுவ வட்டாரங்கள், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவிலேயே படையினர் தற்போது உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளையில் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பகுதி மீது பெருமெடுப்பிலான தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் பாரிய இரத்தக்களரி ஒன்று ஏற்படலாம் என மனித உரிமை அமைப்புக்களும் அனைத்துலக அமைப்புக்களும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்ற போதிலும் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று அறிவித்திருந்தார்.

வன்னியில் இருந்து விடுக்கப்பட்ட இறுதி வேண்டுகோள்: இங்கே அழுத்தவும்

Comments