உலகத்தால் கைவிடப்பட்டு தனிமையில் தள்ளப்பட்ட தமிழர்கள் புலிகளைத் தங்கள் பாதுகாப்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளதைப் பொது வாக்கெடுப்பு காட்டுகிறது

ஒபாமாவுக்கான தமிழர்களால் நடத்தப்பட்டு உலகெங்கும் பரவியுள்ள 12,312 தமிழர்கள் பங்குபெற்ற பொது வாக்கெடுப்பு, வன்னியில் ஸ்ரீலங்காப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் வெளியுலகத்தினர் எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும்> தமிழீழ விடுதலைப் புலிகளையே தங்கள் ஒரே பாதுகாவலர்களாக ஏற்றுக் கொண்டு அண்டியிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர்களால் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு, வெளியுலகத்தாரிடமிருந்து வன்னிப் போர்ப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்குண்டுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்ற எந்த உதவியும் வருவதாகத் தெரியவில்லை என்பதை உலகத் தமிழர்கள் கண்ணுறுவதாகவும் காட்டுகிறது.

இந்தப் பொது வாக்கெடுப்பு மார்ச் 18 முதல் மார்ச் 31, 2009 வரை நடத்தப்பட்டு 116 நாடுகளிலுள்ள 12,312 தமிழர்களால் பங்கேற்கப்பட்டது.

வெளியுலகத்தாரிடமிருந்து உதவி எதையும் எதிர்பாராத நிலையில் தமிழர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகளோடு தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்தப் பொதுவாக்கெடுப்பு அறிவுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் “நலன்புரி மையங்கள்” மீது தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் அதைவிட போருக்கு அப்பால் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அரசின் அங்கமாக இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் இவ்வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாக்கெடுப்பின் முதல் கேள்வி “வெளியுலகம் (ஐ.நா மற்றும் மற்ற நாடுகள்) தமிழர்களைக் காப்பாற்றுவதைத் தேர்ந்து கொண்டு அதை நிறைவேற்ற ஒரு இராணுவப் பிரிவை அனுப்பினால், வன்னியில் ஸ்ரீலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என விரும்புவீர்கள்?” என்பதாகும்.

மிகப் பெரும்பான்மையான (85%) தமிழர்கள் இதற்குப் பதிலாக, இந்தப் பன்னாட்டுப் படையினர் தமிழர்களை வன்னியிலேயே ஒரு பாதுகாப்புப் பகுதியில் பாதுகாக்க வேண்டும் எனவும், மற்றும் ஸ்ரீலங்கா அரசை மனிதாபிமான நிறுவனங்களை வன்னிக்கு வர அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும், எனவும் தெரிவித்துள்ளனர்.

குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வெளிநாட்டவரால் நடத்தப்படும் மையங்களுக்குப் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் (12%), ஸ்ரீலங்கா அரசால் நடத்தப்படும் மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் (1%), அல்லது ஒன்றும் செய்ய வேண்டியதில்லை எனவும் (1%-க்கும் குறைவானவர்கள்) தெரிவித்துள்ளனர்.

உலகம் இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு இராணுவத் தீர்வை விட அரசியல் சட்டத் தீர்வை விரும்புகிறதா என்ற கேள்விக்கு (கேள்வி 2) தமிழ் பங்கேற்பாளர்களின் கருத்து பலவிதமாக வேறுபட்டு இருந்தது. பெரும்பான்மையானவர்கள் (44%) உலகம் இலங்கைப் பிரச்சனையில் தலையிடாமல் இருந்து ஸ்ரீலங்கா அரசு புலிகளை ஒடுக்கி இராணுவத் தீர்வைத் திணிப்பதையே விரும்புகிறது என்ற கருதினர்.

கால்வாசிப்பேர் (23%) உலகம் இலங்கை உள்நாட்டுப் போருக்கு அரசியல் சட்டத் தீர்வையே விரும்புகிறது ஆனால் அது ஏற்படும் பொருட்டு ஏதும் செய்வதற்குத் தயாராக இல்லை என்று கருதினர்.

பத்து விழுக்காட்டினர் (10%) பன்னாட்டுச் சமூகம் மனிதாபிமான உதவியை அனுப்ப மட்டுமே ஆயத்தமாக இருக்கின்றது எனவும், ஐந்தில் ஒரு பங்கினர் (23%) பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டை அடைவதையே விரும்புகிறது மற்றும் அதற்காக உண்மையிலேயே உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறது எனவும் கருதினர்.

மூன்றாவது கேள்வி எளிதானது மற்றும் நேரடியானது: பன்னாட்டுச் சமூகம் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா? பாதிக்கும் மேற்பட்டோர் (62%) இல்லை எனப் பதிலளித்தனர்.

அடுத்த கேள்வியில் தமிழ்ப் புலிகளை எவ்வாறு குறிப்பிடுவீர்கள் எனக் கேட்டதற்கு, பெரும்பாலான பங்கேற்பாளர்கள் (85%) “அவர்கள் தமிழர்களை அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலையிலிருந்து காக்கும் ஒரு நியாயமான எதிர்ப்பு இயக்கம்” எனத் தெரிவித்தனர்.

மிகக் குறைவானவர்களே (13%) புலிகளை “தங்கள் குறிக்கோளை அடைவதற்காக வருந்தத்தக்க வழிமுறைகளைப் பின்பற்றக் கூடிய ஒரு நியாயமான எதிர்ப்பு இயக்கம்” எனக் குறிப்பிட்டனர். ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே (0.8%) “அவர்கள் தங்களது செயல்களால் தமிழர்களுக்கு எல்லா இடத்திலும் அவப்பெயர் பெறச் செய்கிறார்கள் ” என்றும் அல்லது “அவர்கள் எந்த நாட்டிலும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதப்படக்கூடிய அடிப்படைவாதக் குழப்பக்காரர்கள்” (0.38%) எனவும் தெரிவித்தனர்.

ஐந்தாவது கேள்வி “அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் தீவிரவாதத்தைப் பின்பற்றும் மற்றும் ஆதரிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். தமிழ்ப் புலிகள் இந்தப் பட்டியல்களில் இடம்பெற வேண்டுமா?” என்று கேட்டது. பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள் (88%) அவர்கள் அவ்விதமாக இடம்பெறக் கூடாது எனவும், புலிகள் ” தமிழ்ப் புலிகள் தங்களது மக்களைத் தகுந்த இராணுவ ரீதியில் பாதுகாக்கும் நியாயமான பாதுகாப்புப் படை” எனவும் குறிப்பிட்டனர்.

பத்து விழுக்காட்டினர் (10%) “பிற நாடுகளின் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் இருக்கக் கூடாது. அவர்களது வழிமுறைகள் பெரும்பாலும் அரசாங்க மற்றும் இராணுவ இலக்குகளையே நோக்கியவை” எனக் குறிப்பிட்டனர். மிகக் குறைவான பங்கேற்பாளர்கள் (1%) “ஆம். கொடுமையான அரச பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுத்து வந்தாலும் அவர்கள் வன்முறையாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள்” எனக் குறிப்பிட்டனர். மிக மிகக் குறைவான பங்கேற்பாளார்களே (0.33%) “ஆம். அவர்கள் தீவிரவாதிகள்” எனப் பதிலளித்தனர்.

ஸ்ரீலங்காவின் “நலன்புரி மையங்கள்” குறித்து தமிழர்கள் மிகத் தாழ்ந்த கருத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் (78%) அவற்றை “அவை தமிழ் மக்களைப் பிடித்து வைத்து அழிக்க நினைக்கும் மரண மையங்கள்” எனக் குறிப்பிட்டனர். இன்னும் 18 விழுக்காட்டினர் (18%) “அவை தமிழ்க் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் சிறைச்சாலை மையங்கள்” எனக் குறிப்பிட்டனர். இன்னும் குறைவானர்கள் “அவை சுகாதாரக்குறைவானதாக இருக்கலாம் ஆனால் பாதுகாப்பானவை” (1%) அல்லது “அவை தமிழ் பொதுமக்கள் தஞ்சமடைந்து, குணமடைய பாதுகாப்பான இடங்கள்” (0.45%) எனவும் குறிப்பிட்டனர்.

இறுதிக் கேள்வியானது, எப்போதாவது தமிழ் ஈழம் அமையும் போது தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் எனத் தமிழர்கள் கருதுகிறார்கள் என்பதாகும். பெரும்பான்மையானவர்கள் (67%) புலிகள் ஆட்சி செய்ய வேண்டும், ஏனென்றால் “அவர்கள் போரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களாட்சியுடனான, பன்மைத் தன்மையை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதாக வாக்களித்துள்ளார்கள்” என்று கருதினார்கள்.

மற்ற பங்கேற்பாளர்கள் புலிகள் ஆள வேண்டும் எனக் கருதுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் புரட்சியை முன்னின்று நடத்தினார்கள் (11%) என்றும், “அவர்கள் தங்கள் இராணுவ அமைப்பைக் கலைத்து விட்டு மக்களாட்சி அமைப்பில் பதவிக்குப் போட்டியிடும் ஒரு அரசியல் அமைப்பாக மாற வேண்டும்” (15%) என்றும் அல்லது “அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட நாட்டின் இராணுவ அமைப்பாக மாற வேண்டும்” (6%) என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கான அழைப்புக்கள் மின்னஞ்சல் பட்டியல்கள், செய்தித்தாள்கள், இணைய தளங்கள், ப்ளாக்குகள் மற்றும் கட்டணம் செலுத்திய விளம்பரங்கள் ஆகியவை உட்பட தீவில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்களைத் தொடர்பு கொள்ள என்னென்ன வழிமுறைகள் உள்ள்னவோ அத்தனை மூலமாகவும் அனுப்பப்பட்டன.

ஒபாமாவுக்கான தமிழர்கள் இணையதள இணைப்புப் பரவல், வாக்கெடுப்பில் உள்ள முறைகள், புவியியல் ரீதியாக உலகத் தமிழர் பரவல் மற்றும் தமிழரிடையே தங்கள் அரசியல் கருத்துக்களைப் பொது இடத்தில் தெரிவிப்பது குறித்து இருக்கும் பயம் ஆகிய அனைத்தையும் கணக்கிலெடுத்துப் பார்த்தும் போது இந்தப் பங்கேற்பு பிரதிநிதித்துமானதாக இருப்பதாகவே கருதுகிறார்கள்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் தங்களது வாக்கெடுப்பு முறை சோதனை மக்கள் தொகை முறையில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு உட்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, கணினி சொந்தமாக இல்லாதவர்கள் இணையதள வாக்கெடுப்பில் பங்கேற்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் பக்கச்சார்பான நிலை கேள்விகளில் உள்ள வார்த்தைகள் மூலமாகவோ அல்லது கேள்விகள் கேட்கப்படும் வரிசை மூலமாகவோ ஏற்படுவதை தவிர்க்க முயன்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பங்கேற்பாளாருக்கும் அவர்கள் வாக்கெடுப்பின் பதில்களோடு சமர்ப்பிக்கக் கூடிய ஒரு தனிப்பட்ட உறுதி செய்யும் குறியீட்டு எண் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் மூல ஒரே பங்கேற்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பங்கெடுப்பதிலிருந்து தவிர்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பை நடத்திய ஒபாமாவுக்கான தமிழர்கள் வாக்கெடுப்பிற்கான தரவு சரிபார்க்க விரும்பும் எவருக்கும் அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பு முடிவுகள் குறித்த மேலதிக விவரங்களை இந்த இணைய முகவரியில் காணலாம் http://www.tamilsforobama.com/poll/result.asp

தமிழர்கள் பெரும்பாலும் வடக்கு-கிழக்கு இலங்கையிலும் மற்றும் தென்னிந்தியாவிலும் வாழக்கூடிய ஒரு இனக்குழுவாகும். இலங்கையில் அவர்கள் சிறுபான்மையினராவார்கள் மற்றும் தற்போது அவர்கள் இனப்படுகொலை எனக் கருதும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். தீவின் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் உயிரைக்காக்கத் தீவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவில் குடியேறிய அல்லது அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்டதாகும்.

இவ் அமைப்பை தொடர்பு கொள்ள, (617) 765- 4394 என்ற எண்ணில் அழையுங்கள், அல்லது தொலைதொடர்பு இயக்குனர், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு என்பவருக்கு உங்கள் செய்தியைத் தெரிவியுங்கள். http://www.TamilsforObama.com

Comments