தமிழகம் வந்தால் சோனியாவுக்குக் கறுப்புக் கொடி: தமிழ் மாணவர் பேரவை முடிவு

காங்கிரஸுக்கு ஓட்டு போடாதீங்க தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா ஆகியோருக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று 'தமிழ் மாணவர் பேரவை' முடிவு செய்துள்ளது.

அப்பேரவையின் மாநிலத் தலைவர் திருமுருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக்கோரி, தமிழகத்தில் 16 பேர் தீக்குளித்து இறந்த பின்பும் அங்கு நடந்து வரும் போரை நிறுத்த மத்திய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது 9 தமிழர்கள் தீக்குளித்து இறந்து காங்கிரசை அப்போது ஒழித்துக் கட்டியது போல், மாணவர்களாகிய நாங்கள் இப்போதும் காங்கிரசை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

முல்லைத்தீவு, பிணத்தீவாக மாறிய போதும் தமிழக அரசும், மத்திய அரசும் அப்பாவி மக்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டணியை எதிர்த்து, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவாக மக்களிடம் நேரடி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

Comments