கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது எறிகணை வீச்சு மேற்கொண்டமை குறித்து அமெரிக்காவில் கலந்துரையாடல்

கனரக ஆயுதங்களாலும் விமானங்களாலும் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்த போவதில்லை என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்தும், இராணுவம் மேற்கொண்டு வருகின்ற எறிகணை வீச்சுகள் தொடர்பில் நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் பொருட்டு, உதவி இராஜாங்க செயலர் ரிச்சட் பவுச்சர், இணைத்தலைமை நாடுகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக, இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போன்று, அமெரிக்கா தமது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புமா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, அது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதுவரையில் சிந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் நிலவரம் குறித்து ரிச்சட் பவுச்சர் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் ரொபர்ட் வூட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தியா போன்ற நாடுகளுடன் கூட்டினைந்து இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரொபர்ட் வூட், அவ்வாறான எண்ணம் இல்லாத போதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் தொலை பேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக ரொபர்ட் வூட் தெரிவத்துள்ளார்.

எந்த நிலையிலும் வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபினமான நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் ரொடர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அரசாங்கம் விசா அனுமதி வழங்க மறுத்தமை குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்;டார்.

Comments