ஈழத் தமிழர்களைக் கொல்ல ரசாயன ஆயுதமா?

ழத் தமிழர் பிரச்னை மீண்டும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் கட்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையை ஆளும் ராஜபக்ஷே அரசாங்கம் அப்பட்டமான இனஅழித்தொழிப்பு போரை நடத்தி வருவது எல்லோரும் அறிந்ததுதான். அதை சிங்களவர்களுக்கான அரசாங்கம் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அண்மையில் 'நேஷனல் போஸ்ட்' என்ற பத்திரிகைக்கு இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அளித்திருந்த பேட்டியில், ''இலங்கையில் சிங்களவர் களாகிய நாங்கள் எழுபத்தைந்து சதவிகிதம் இருக்கிறோம். இந்த நாட்டை ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. மற்றவர்கள் இங்கே வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் எந்தச் சலுகையையும் கேட்கக் கூடாது'' என்று கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், ''மற்றவர்களைவிட தமிழர்கள் வசதியாக இருக்கிறார்கள்'' என்றும் அவர் கேலியாகக் கூறியிருக்கிறார்.

இலங்கையின் இனஅழித்தொழிப்பு போர் இப்போது முக்கிய மான கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு, இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதிகளைத் தாக்கி வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் அது தன்னு டைய பிடியை வலுவாக்கிக் கொண்டுள்ளது. அங்கிருக்கும் இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுக்களைப் பயன் படுத்தி அந்தப்பகுதியில் புலிகளின் செல்வாக்கை இலங்கை ராணுவம் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் புலிகள் இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே நிலைகொண் டிருக்கிறார்கள். அங்கும்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம்முடைய பிரதேசங்களை ராணுவத்திடம் இழந்து வருகிறார்கள். இதை யுத்த தந்திரத்தின் அடிப்படையிலான பின் வாங்கல் என்று சிலர் வர்ணித்தபோதிலும், கிரமமான யுத்தத்தில் (Conventional Warfare) ஈடுபடும் அளவுக்குப் புலிகள் இப்போது வலுவாக இல்லை என்ற கருத்தே பலமாக நிலவுகிறது. இலங்கையின் சிங்கள அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமறுத்து யுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இலங்கையின் வடக்கே உள்ள வவுனியா, முல்லைத்தீவு, கிளி நொச்சி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் இப்போதும் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இதோ ஒருசில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று கொக்கரித்த சிங்கள ராணுவம் அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடிகிறது. அதற்கும்கூட பெரிய அளவில் அது இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலை. இதுவரை நடந்துவரும் யுத்தத்தில் புலிகள் தம்முடைய ராணுவ வலிமையை முழுவதுமாகப் பயன்படுத்தவில்லை. யுத்த முனைகளில் அனுபவம் பெற்ற தேர்ந்த வீரர்கள் புலிகளின் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இனிமேல்தான் போர் உக்கிரமாக இருக்கும் என்று ராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

போரில் பின்வாங்குவதும், முன்னேறுவதும் புலிகளுக்குப் புதிதல்ல. அவர்கள் பலவீன மடைந்து விட்டனர் என்று சிங்கள ராணுவம் எண்ணியபோதெல்லாம்,

திடீர் தாக்குதல் களை நடத்தி சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியதோடு புதிய பிரதேசங்களைப் புலிகள் கைப்பற்றியவரலாறு ஏராளமாக இருக்கிறது. அப்படி இப்போதும்கூட நிகழலாம் என்ற அச்சம் சிங்கள ஆட்சியாளர் களிடம் உள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள யுத்த முனையை மாற்றுகிற விதத்தில் சிங்கள வர்கள் பெரும்பகுதியினராக வாழும் தெற்குப் பகுதியில் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற பயம் சிங்கள மக்களிடமும் பரவ லாக இருக்கிறது.

ராஜபக்ஷே அரசு தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தற்காலிகமாக அமைதிப்படுத்தி வைத்திருந்த போதி லும், இலங்கையின் பொருளாதார நிலை வலுவாக இல்லை. யுத்தம் நீடிக்க நீடிக்க இலங்கைக்குள் அது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இப்போதே அங்கு சுமார் நாற்பது சதவிகிதம் என்கிற அளவுக்கு பணவீக்கம் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அத்தி யாவசியப் பொருட்களின் விலை வானத்தில் இறக்கைக் கட்டிப் பறக்கிறது. அடிப்படை வசதிகள் எதுவும் அங்கே சரியாக இல்லை. எல்லாவற்றுக்கும் யுத்தம் ஒன்றையே சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால், இதை வெகு காலத்துக்குச் செய்யமுடியாது என்பது அவருக்கும் தெரியும். போர் நீடிக்குமேயானால், இலங்கைப் பொரு ளாதாரம் படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்துவரும் அரசியல் குழப்பங்கள் நிச்சயம் இன்னும் மோசமான நிலைமையைத்தான் அங்கு ஏற்படுத்தும். அதனால்தான் சீக்கிரம் போரை முடிவுக்குக் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது.

கருணா குழுவின் பிரிவுக்குப் பிறகு கிரமமான யுத்தத்தை நடத்துவதில் புலிகளுக்குப் போதுமான வீரர்கள் இல்லையென்பது உண்மைதான். என்றாலும், அவர்கள் கெரில்லா போர் முறையில் இன்னும் வலுவாகவே இருக்கிறார்கள். எனவே, சிங்கள ராணுவம் அவ்வளவு எளிதாக கிளிநொச்சியைப் பிடித்துவிட முடியாது. அதனால்தான், அவர்கள் விமானங்களின் மூலம் தமிழர் பகுதிகளில் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என தினந்தோறும் ஏராளமானவர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போரின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக சிங்கள அரசு கூறுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் சேலைகளையும், கிழிந்த துணிகளையும் கொண்டு தாங்களே அமைத்துக் கொண்டுள்ள டென்ட்களில்தான் வாழ்ந்து வருகி றார்கள். அங்கும்கூட அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இலங்கையில் செயல்பட்டு வரும் 'மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (Centre for Policy Alternatives) என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்னால் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. யுத்தம் நடந்து வரும் வவுனியா மாவட்டத்தில் எப்படியெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள ராணுவத்தோடு கூட்டு சேர்ந்துகொண்டு ப்ளோட், ஈ.பி.டி.பி., டெலோ ஆகிய அமைப்புகளுடன், பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோரின் தலைமையிலான ஆயுதக்குழுக்களும் தமிழ் மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இருபத்து நான்கு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். பத்தொன்பது பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

'வெள்ளை வேன் கடத்தல்' என்பது அங்கே பிரபலமாக இருக்கும் ஒரு விஷயமாகும். பட்டப்பகலில் சாலைகளில் சென்று கொண்டி ருப்பவர்களை திடீரென்று வெள்ளை வேன் களில் வரும் கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து வருவது அங்கே சகஜமாகி விட்டது. மேலே சொன்ன ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்த நபர்கள் அண்மையில் செட்டிக்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குச் சென்று அங்கு படித்துக்கொண்டிருந்த சிறுவர்களையெல்லாம் தம்முடைய படைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி பிடித்துச்செல்ல முயன்றபோது, பொதுமக்கள் சேர்ந்து அதை முறியடித்துள்ளனர். ஆட்களைக் கடத்தி ஒருகோடி முதல் பத்து கோடி ரூபாய் வரை பணம் பறிப்பது அந்தப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கள்ளச்சாராயத் தொழிலிலும் இந்த ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சாராயம் காய்ச்சக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த பெண் ஒருவரை, அவர்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அனைத்துவித பாதுகாப்பும் வழங்கப்படுவதாக சிங்கள அரசு கூறுகிறது. ஆனால், முகாம்களுக்குச் செல்பவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி சித்ரவதை செய்வது அதிகரித்துள்ளது. முகாம்கள் என்பவை சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. தலைகீழாகத் தொங்கவிடுதல், தண்ணீருக்குள் அமுக் குதல், நகங்களைப் பிடுங்குதல் போன்ற சித்ரவதைகளுக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப் படுகிறார்கள். சிங்கள ராணுவத்தினர் மட்டு மின்றி, அவர்களோடு சேர்ந்துகொண்டு அட்டூ ழியம் செய்யும் ஒட்டுக்குழுக்களும் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்வதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் அதுபற்றி எவரிடமும் முறையிடக்கூட முடியாத அவலநிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்.

இதற்கெல்லாம் மேலான இடியாக, சிங்கள ராணுவம் இப்போது தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிங்கள விமானங்கள் தமிழர் பகுதிகளில் 'தெர்மோபாரிக்' குண்டுகளை வீசத்தொடங்கியுள்ளன. இந்த குண்டுகள் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி எடுத்து விடும் என்பதுதான் இவற்றின் கொடூர தன்மை. இதனால், மூச்சுத்திணறி மக்கள் செத்துப்போவார்கள். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினர் இப்படியான குண்டுகளை தாலிபன் படையினருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் முற்றாக எரிந்து போகாவிட்டால், அவை சுற்றுச்சூழலில் நஞ்சைக் கலந்து நிரந்தரமான அபாயத்தை உண்டுபண்ணும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படியான ஆயுதங்களை இதுவரை பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது எவரும் பயன்படுத்தியதில்லை. ஆனால் சிங்கள ராணுவமோ, தமிழ் மக்களை அழிக்க இத்தகைய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகத் துவங்கியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இந்திய அரசு இதில் தலையிட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இலங்கையில் தலையிடுவதால் இந்திய அரசுக்குப் பொருளாதார லாபம் எதுவும் கிடையாது. நம் அரியானா மாநிலத்தைவிட மக்கள் தொகையில் சிறிய நாடு இலங்கை. அங்கு வாங்கும் சக்தி கொண்ட மத்தியத்தர வர்க்கம் பெரியதாக இல்லை. மொத்த மக்கள் தொகையில் சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் கொஞ்சம் பொருளாதார வசதியோடு உள்ளனர். எனவே, பொருளாதார நோக்கத்தோடு இந்தியா அங்கே தலையிட முன்வராது.

ராணுவ ரீதியில் இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதனால்தான் இந்திராகாந்தி காலத்தில் இருந்து இலங்கைக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் நாட்களில் இலங்கையில் அமெரிக்கா கால்பதித்து விடக்கூடாது என இந்தியா எச்சரிக்கையாக இருந்தது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் புண்ணியத்தில் இப்போது இந்தியாவே அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக மாறிவிட்டது. அதனால்தான், இலங்கைப் பிரச்னையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பிரதமருக்கு ஆலோசனை தரும் அதிகாரிகள் பெரும்பாலும் தமிழர் விரோத சிந்தனையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஈழத் தமிழர் பிரச்னையை விடுதலைப்புலிகள் பிரச்னையாக மட்டுமே சுருக்கி அதை, ராஜீவ்காந்தி படுகொலையோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கிறார்கள். அதைச்சொல்லியே இந்திய அரசின் அணுகுமுறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்னையை தேர்தல் சதுரங் கத்தில் நகர்த்தப்படும் காயாகப் பார்க்காமல், மனிதாபிமானத்தோடும், அக்கறையோடும் தமிழக அரசியல் கட்சிகள் அணுகுவது உண்மை யானால், அதற்காக ஒருங்கிணைந்து குரலெழுப்ப முன்வரவேண்டும். ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தான் இனஅழித்தொழிப்புக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். சிங்கள ராணுவம் மூர்க்கமான இறுதிகட்டப் போரை தொடங்கியிருக்கிறது. அங்கு தமிழ்ப் பெண்களெல்லாம் கெடுக்கப்பட்ட பிறகு, தமிழர்களெல்லாம் கொல்லப்பட்ட பிறகு இங்கே ஒப்பாரி வைப்பதால் பயன் எதுவுமில்லை. ''நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே மிஞ்ச விடலாமோ'' என்று பிஜித் தீவை எண்ணி பாரதி பாடியது, ஈழத் தமிழருக்காகப் பாடியது போல் உள்ளது!

தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த நாம் இன்னும் கைகளைப் பின்புறம் இறுகக்கட்டி, யாருக்காக காத்திருக்கிறோம்?

Comments