மனங்களை குறிவைத்திருக்கிற போர்

போரை நிறுத்தப்போவதில்லை என்பதில் ராஜபக்ஷ குடும்பம் விடாப்பிடியாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று இலங்கை அரசு கூறுகிறதை உலகத்தின் அதிகாரவாதிகள் முழுமையாக ஏற்றுக்கொண்டு இருப்பதனால் இந்தப் போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளற்று மேலும் தொடருகிறது. வீராவேசத்துடன் படைகளை அணிவகுப்பு செய்து வெற்றிகளை கொண்டு வரும்படியனுப்புகிற போர் மன்னனாக மகிந்தராஜபக்ஷ படைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இன்னொரு மண்ணின்மீது இன்னொரு இனத்தின் மீது படையெடுத்து நிற்கிறோம் என்பதைக் காட்டாமல் சொந்த மக்கள்மீது படையெடுத்து அவர்களை விடுவிப்பதற்கு போரிடுவதாக சிங்கள அரசு குழப்பமான காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் நிரந்தரமான வாழ்வுரிமையும் அதற்கான கனவு வெளியும் போரின் மூலமாக இங்கு முற்று முழுதாக நசுக்கப்படுகிறது.

Rajapakse brothers மனிதாபிமானத்திற்கான படை நடைவடிக்கை

போர் மனிதாபிமானமற்றது. போரினால் உலகம் அன்றைக்கு முதல் மனிதர்களை இழந்து கொண்டிருக்கிறது. மனிதத்திடம் தோற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதையே மனிதாபிமானத்திற்கான படை நடைவடிக்கைகளாக இலங்கை அரசு செய்து கொண்டிருப்பதாக கூறுகிறது. மனிதர்களைக் கொன்று குவித்து அலைத்துக்கொண்டிருக்கிற போர் மனிதாபிமானத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப்படை நடவடிக்கைகளின் இறுதியில் ஒரு மனித இனமே வேருடன் அழிப்பதற்கான முடிவு இருக்கிறது. சிங்கள ஆட்சியுலகத்தின் போர் வெறி, வெற்றிக்களிப்பு, நிலப்பசி என்ற எல்லாவற்றையும் ராஜபக்ஷ மனிதாபிமானத்தின் பெயரால் வென்று கொண்டிருக்கிறார்.

தமிழ் மக்களை விடுவிப்பதற்கான படைநடவடிக்கை என்பது வரலாற்றில் மிகவும் பாவமான வாக்கியமாகும். தமிழர்கள் சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களாலும் படைகளாலும் காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்மக்களின் அரசியலுரிமை மறுக்கப்பட்டு வாழ்நிலம் மறுக்கப்பட்டு சிங்களப் பெரும் தேசியத்தால் விழுங்கப்பட முற்படுகிற நிர்பந்தம் தமிழ் மக்களை இன்னும் துரத்தியபடியிருக்கிறது. சிங்களத்தேசியம் என்பது தமிழ் மக்களது சுய அடையாளங்கள், நலன்கள் ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட திணிப்பாலான வற்புறுத்தலாகும். எனவே ஒரு இனவழிப்பின் கொடூரத்திற்கு மனிதாபிமானம் என பெயரிடப்பட்டிருக்கிறது.

சிங்களவர்களின் குதூகலிப்புக்கள்

சிங்களவர்களை திருப்திப்படுத்த போர் வெற்றிகளை கையளிக்கிற மகிந்த ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தமிழ் மக்களை பெரும் துக்கத்திற்குள்ளாக்கிறார்கள். அடிக்கடி தமிழர் நகரங்களிற்குள் மகிந்தவின் படைகள் நுழைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நுழைவின் பிறகும் மகிந்த சிங்களத்தேசிய தொலைக்காட்சியில் வாழ்த்தும் வெற்றிக்களிப்பும் வெளியிடுகிறார். கைப்பற்றப்பட்ட செய்தியை பொன்சேகா அறிவிக்கிறார். சிங்கள மக்களின் குதூகலிப்புக்களும் சிங்கள படைகளின் குகலிப்புக்களும் வெளியிடப்படுகின்றன. இவை புலிகளுக்கு எதிராக விடுக்கப்படுகிறதாக மட்டும் அமைவதில்லை. தமிழ் மக்கள் தமக்கெதிரான சிங்களவர்களது கூச்சலாகவும் குதூகலிப்பாகவும் கருதுகிறார்கள்.

தமிழர்களுக்கும் சிங்களவர்க்குமான போர் இலங்கை-ஈழ வரலாற்றில் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. துட்டகைமுனு எல்லாளன் என்ற வரலாற்றின் இறுக்கமான அனுபவங்களுடன் ஜனநாயக சோசலிச குடியரசுத்தலைவர்களுடான போர் என்று அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தவும் நிலங்களை ஆக்கிரமித்து கொடிகள் பறக்க விடவுமாக போர் புரிகிறார்கள். அதில்தான் அவர்களின் திருப்தி இருந்து வந்திருக்கிறது. அந்த வரலாற்க்று குணத்தின் அடிப்படையில் போக்கின் கவனத்தில் மகிந்த அரசும் அதன் இராணுவ அமைப்பும் இன்று சிங்கள மக்களுக்கு போர் வெற்றிகளை வழங்கி திருப்திப்படுக்கிறது.

நிலப்பசியின் வெற்றிகள்

மண்ணையும் அள்ளிக்கொண்டு நிலவெளிகளை அடைத்துக்கொண்டு இனவாதத்தின் உச்ச கட்ட வெற்றிகளை மகிந்த அள்ளிக் கொண்டிருக்கிறார். தற்போது ஒரு பெரிய வாழ்நிலத்தில் படைகள் மட்டுமே நிற்கின்றன. அதன் மக்கள் வாழ்வுக்கு நிலமின்றி தவித்து ஒடுங்கிக்கிடக்கிறார்கள். சிங்களப் படைகள் தமிழர்களின் கடைகள், தெருக்கள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், சந்தைகள், நகரங்கள் எல்லாவற்றின் கட்டுமானங்களையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலப்பசிக்கான வெற்றியின் இலக்குகளுக்கு வாழ்வுப்பசி பற்றி புரியப்போவதில்லை. நிலத்துக்கான யுத்தம் தனக்கு ஏற்றபடி விதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. காரணங்களை கற்பிக்கிறது. எந்த இடத்திலும் கண்ணை மூடிக்கொண்டு நிலம் குறித்த பசிக்கு மனிதாபிமானம், விடுவிப்பு போன்ற சொல்லாடல்களை யுத்தத்தரப்பு கூறி நுழைகிறது. நிலப்பசியிடம் வாழ்வுப்பசி தோற்றுக் கொண்டிருக்கிறது. சிங்கள நிலவாதத்திற்கும், இனவாதத்திற்குமான பசியில் வாழ்வுக்கு துடிக்கிற மக்களது நிலம் பலியிடப்படுகிறது. எனவே ஒரு மண்ணோக்கிய யுத்தத்தில் அதனை கையகப்படுத்தகிற வெற்றியின் கூச்சல் ஈழத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இராணுவ வெற்றிகளை தமிழர்களிடம் திணிப்பது

சிங்கள இராணுவ வெற்றிகளையும், வாதங்களையும் தமிழ் மக்களிடத்தில் அரசு திணித்துக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டககளப்பு, திருகோணமலை போன்ற நகரங்களில் வன்னியின் படை நகர்வுகளினை கொண்டாடும் முகமாக சிங்கக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. கடைகளுக்கும், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் சிங்கக்கொடிகள் பொருத்த வேண்டும் என்று கடுமையான உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. அடிமைப்படுத்துகிற பற்களை கொண்ட சிங்கக்கொடியினை மிகுந்த அருவருப்படன் மக்கள் பொருத்தி வாழுகிற நிர்பந்தம் காணப்படுகிறது.

வன்னி நகரங்கள் விழுகிறபோது மகிந்த ராஜபக்ஷ தமிழில் தனது வெற்றியைப் பேசுகிறார். இன்றைய இராணுவ வெற்றிகளையும் அதில் அழிகிற மக்களையும் பற்றிய கவனம் கருத்து போன்றவற்றினை தனக்கு ஏற்ற மாதிரியான அர்த்தத்தை சிருஷ்டிக்கிற இது மாதிரியான மகிந்தவின் உத்திகள் யாராலும் பிரித்தறியப்படாதிருக்கிறது. தமிழர்கள் தோற்க்கடிக்கப்படுகிறார்கள் என்ற நக்கலும் நளினமும் கொண்ட ஜனாதிபதி அந்த இராணுவ வெற்றிகளை தமிழர்களிடத்திலேயே தமிழிலேயே திணித்து தனது நோக்கங்களை கையாண்டு கொண்டிருக்கிறார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான போர்

இரண்டு நாடுகளுக்கான போர் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு இனங்களுக்கிடையிலான போர் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் இனம் வாழ்வுக்குப் போரிடுகிறது. சிங்கள இனம் ஆக்கிரமிப்புக்குப் போரிடுகிறது. இதன் அர்த்தத்தை சிங்களத் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராகக் காட்டுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் யாராகிலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று எந்த தயக்கமும் இல்லாமல் சிங்கள அரசியல் ஜனநாயகவாதிகள் கூறுகிறார்கள். தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகக் காட்டி தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை மெல்ல நசுக்குகிற தந்திரப் புத்தி பழைய தலைவர்கள் மாதிரி மகிந்தவுக்கும் இருக்கிறது.

இன்றைய போர் முழு முச்சுடன் ஈழம் பற்றிய கனவையும் அதற்கான வெளிகளையும்தான் தின்று கொண்டிருக்கிறது. குறிப்பிடப்பட்ட மக்களாகவும் சொற்ப எண்ணிக்கையான பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கப்படுகிற தமிழ் மக்கள் சிங்கள தேசியத்தின் கீழும் ஆட்சியின் கீழும் வாழ கட்டாயப்படுத்தப்படுகிற கடும் போக்கில் இனம் நாடு என்பவற்றை போர் குறி வைத்திருக்கிறது. சிங்கள நாடு ஈழத்தமிழ் நாட்டை தோற்கடித்துக்கொண்டிருக்கிறது. என்றைக்கோ உடைந்துபோன, இலங்கைக்கான பேரினவாதக் கற்பனையில் ஈழத்தை அழித்து எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறார் மகிந்த.

அரச இராணுவத்தின் தமிழ் அரசியல் விசுவாசிகளின் உளவியல்

ஈழத்துக்கான கனவும் வியர்வையும் குருதியும் சிந்தப்பட்ட அதே நேரம் துரோகமும் இழைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் ஈழம் பற்றிய கனவையுடைய மக்களின் மனப்பாங்கை ஆரம்ப காலத்திலிருந்தே சில தமிழ் அரசியலாளர்கள் சிதைத்து வந்திருக்கிறார்கள். சுயநலம் காரணமாக தமது வாழ்வு, பதவி, போகம் என்பவற்றிக்காக நிறையப்பேர் விலை போயிருக்கிறார்கள். இன்று ஈழப்போராட்டம் பல இழப்புக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும்.

இவர்கள் இன்றைய சிங்கள யுத்தத்தை சிங்கள அரசு கூறுகிற மொழியில் கூறுகிறார்கள். இராணுவ வெற்றிகளுக்கான வாழ்த்துக்களையும் அர்த்தங்களையும் சிங்கள வாதங்களுக்கு வலு சேர்க்கிற மாதிரி செய்கிறார்கள். தமிழ் மக்களை துப்பாக்கிகளைக் கொண்டு மிரட்டி இராணுவ வெற்றிகளுக்கு ஆதரவாக திரட்டுகிறார்கள். சிங்கக் கொடிகளை விநியோகிப்பது, சிங்களத் தலைவர்களது கருத்துக்களுக்கு வலுகொடுப்பது என்று தமிழ் இனத்துக்கும் ஈழத்துக்கும் துரோகம் செய்தபடியிருக்கிறார்கள்.

மக்கள் பின்னணி இல்லாத இந்த தரப்புக்கள் தமது அரசியல் வாழ்வு இலாபங்களுக்காக செய்கிற பிரசாரங்கள் காது கொடுக்க முடியாதிருக்கிறது. பலியெடுக்கப்படுகிற மக்கள் பற்றிய செய்திகளை சிங்களத் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஊடகங்கள் சொல்லுகிற மாதிரி சொல்லி உன்மையை மறைத்து வருகிறார்கள். சதைகளால் துண்டு துண்டாகிக் கொண்டிருக்கிற மக்கள் பற்றி எந்த வருத்தமுமற்று புலிகளை தோற்கடிப்பதற்கான தமது ஒரே போக்கை தீவிரமாகிக் கொண்டு மகிந்த ராஜபக்ஷவிற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனவாதத்திற்கு சிறியளவிலும் வித்தியாசமற்ற இந்த விசுவாசிகளிடம் மக்களுக்கு எதிராயிருக்கிற போரை கொண்டாடுகிற போக்கு தலைகொண்டு நிற்கிறது.

யுத்தத்தை கையாளுகிற ஊடகங்கள்

யுத்தம்மீது கொண்டிருக்கிற கவனத்துக்கு சமமான கவனம் ஊடகம் மீதும் சிங்கள அரசு கொண்டிருக்கிறது. தனது ஊடகங்களில் எந்நேரமும் வெற்றிச் செய்தியை வெளியிடுகிறது. வன்னிப்படை நடைவடிக்கை என்ற களநிலவரத்தை தெரிவிக்கிற செய்திகளை வெளியிடுகிற பகுதிகளை உருவாக்கி போர் நிலைகளில் இருந்து செய்திகள் வழங்கப்படுகின்றன. அங்கு கைப்பற்றப்பட்ட பதுங்குகுழிகளையும், பாடசாலைகளையும், கோயில்களையும், வீடுகளையும், விடுதலைப்புலிகளின் சடலங்களையும் காட்டிக்கொண்டிருக்கிறது.

எதையும் கைப்பற்றாத ஒரு நாளில் எதாவது ஒன்றைக் கைப்பற்றிய மாதிரியான செய்தியை உருவாக்கி வெளியிட்டுக் கொள்கிறது. போர் வெற்றிகளாலான செய்திகளையும் இராணுவ போக்கினாலான நகர்வுகளையும் சிங்கள மக்களுக்கு ஊட்டுவதற்கான வழிகளாக அரச ஊடகங்களை இலங்கையரசு கையாண்டு வருகிறது. அத்தோடு தம்மால் வழங்கப்படுகிற செய்திகளைத்தான் தனியார் ஊடங்களும் வெளியிட வேண்டும் என்று கூறுகிறது.

வன்னிப்போரில் கொல்லப்படுகிற மக்கள் பற்றிய செய்திகளை தனியார் ஊடங்கள் வெளியிடுவதில் அரசால் நெருக்கடி கொண்டு வரப்பட்டிருக்கிறது. கொல்லப்படுகிற மக்களது காட்சிகளை வெளியிடுவதற்கான அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறவேளை நிலங்களை கைப்பற்றியதன் பின்னரான வெற்றி அறிவிப்புக்களை எல்லா ஊடகங்களிலும் நிரப்பியபடியிருக்கிறது, இலங்கை அரசு.

இந்தியா தொடுத்திருக்கிற போர்

இந்தியாவின் அசுரத்தனமான மௌனத்தில் எத்தனையோ சூழ்ச்சியின் வடிவங்கள் உறைந்திருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களது ஒட்டுமொத்த விருப்பத்தை முற்றாக நிராகரித்து இலங்கையரசை பலப்படுத்தி வருகிறது, இந்தியா. வெறும் கவலை தெரிவிப்புக்களால் காலத்தை கடத்திக்கொண்டு தமிழ் மக்கள் மீது குவிந்திருக்கிற யுத்தத்தின் பங்காளியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்றைய போர்க்களம் இந்திய ஈழயுத்தம் என்கிறதாக எதிர் நிற்கிறது. தமிழ் மக்கள்மீது அக்கறையிருப்பதாக சிறிய சொல்லளவில் காட்டுகிற இந்திய அரசு ஒரு தமிழரின் பலிக்கும் நியாயத்தையோ அக்கறைப்பாட்டையோ காட்டியதில்லை.

ஈழப்போரின் உண்மையான பிரச்சினையை கண்டுகொள்ள சிறிதளவேனும் முன்வரவில்லை. காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசும் படைகளும் கொன்று வருகிறது என்றால் அதன் பின்னணியில் இந்திய அரசும் படைகளும் இருந்து வந்திருக்கின்றன. புலிகளைத் தோற்கடிப்பதற்கான வெறியை மகிந்த ராஜபக்ஷ பெருமளவில் வர்ணித்துக் காட்டுகிறபோது இந்திய தனது மௌனத்தால் அதை வர்ணித்துக் கொண்டிருக்கிறது. பிராந்தியத்தின் இராணுவ அரசியல்நாடாக தன்னை ஈழப்பிரச்சினையில் பாவிக்கிற இந்தியா ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை ஒருபோதும் முன்வைத்திருக்கவில்லை.

இன்றைய இந்தியாவின் கொடு மௌனத்தில் வன்னி மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றைத்தனமான தனது போக்கினால் அழிக்கப்படுகிற மக்கள் குறித்து எந்த கவனத்தையும் இந்தியா வெளியிடாதிருக்கிறது. மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிற குண்டுகளில் பாதிக்கு மேலானவை இந்தியாவினுடயவை என்றிருக்க இந்தியா ஏற்படுத்துகிற காயங்களுடன் இன்னும் எமது மக்கள் இந்தியாவிடம் போர் நிறுத்தம் கேட்டபடியிருக்கிறார்கள். இலங்கை போரை நிறுத்த இந்திய அரசிடம் வற்புறுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். முதலில் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும்.

உலகத்தின் இராணுவ அரசியற் போட்டிகளால் இலங்கையுடனான அதிகாரக் கோட்பாட்டில் தன்னை நிறுத்திக் கொள்ளுவதற்காக இந்தியா பகிரங்கமாகவே, புலிகளுக்கு எதிரானதாக சொல்லாடப்படுகிற போரை நடத்தி ஆதரவு செய்து கொண்டிருக்கிறது. போரை நிறுத்துவதற்காக தமிழ் நாட்டுக்கு காட்டி புறப்படுகிற பயணங்களின் மூலம் போர்களத்தின் நிலமைகளை மகிந்தவிடம் நேரில் கண்டறிந்து சொல்லுகிறது, அத்தோடு இராணுவ நகர்வுகளை மேலும் முன்னேற்றுகிறது. இந்திய இராணுவம் போர்க்களத்தில் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது.

Chencholai கைப்பற்றப்படுகிற சனங்கள்

நிலங்களை கைப்பற்றுவதன் மூலமாக சிங்கள மக்களை திருப்திப்படுத்துகிறதால் போரை உலகமெங்கிலும் வாழுகிற தமிழ்மக்கள் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். நிலத்துக்குரிய மக்களை விரட்டி விரட்டி அதனை கையப்படுத்திக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. நிலத்துக்குரிய மக்கள் புலிகளின் பின்னால் சொல்லுகிறதால் வெறும் நிலத்தை கைப்பற்றத்தான் முடிகிறது. மனிதாபிமானம் விடுவிப்பு என்பவற்றை போரின் நோக்கமாக குறிப்பிட்டபடி நிலத்துக்குரிய மக்களின் அலைச்சலுக்கும் பலிக்கும் சிங்கள அரசு காரணமாகிக் கொண்டிருக்கிறது.

மண்ணைக் கைபற்றுகிற வெறித்தனமான போரில் மக்கள் பெருந்துயரங்களை அனுபவிக்கிறார்கள். கொடுங்கோலரசு என்று மனிதாபிமானம் இருக்கிறவர்களால் திட்டப்படுகிற, எச்சரிக்கப்படுகிற, எதிர்க்கப்படுகிற சிங்கள அரசு போரை தற்போது சனங்களை கைப்பற்றுவதற்கு கையாளுகிறது. அந்தப்பகுதிகளில் மக்களை வாழவிடாமல் செய்து அவர்களை வெளியிலெடுப்பதறகு அவர்களை தாக்குதலுக்குள்ளாக்கிறது. காயங்களை ஏற்படுத்தியும் வெளியிலெடுக்கிறது. கிட்டத்தட்ட நாலரை லட்சம் வரையான சனங்களில் இதுவரை கிட்டத்தட்ட நாற்பதாயிரத்துக்கு உள்ளான சனங்களே வெளியேறியிருக்கிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு வரையிலான மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.

வன்னி மக்களுக்கான முகாம்களில் பயங்கரங்கள் நிகழுகின்றன. யாரும் அறியாதபடி கொலைகளும் வல்லுறவுகளும் நடக்கின்றன. இனக்களைவின் கொடுமை இடம்பெறுகிறது. அவர்களை உறவினர்கள் சென்று பார்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பற்றிய தகவல்கள் தெரிவிப்பதற்கு மறுக்கப்படுகிறது. இனச்சிறையாக வன்னி முகாங்கள் உருவெடுக்கின்றன. மக்களை விடுவிப்பதற்கான யுத்தமாக சிங்கள அரசு கூறியிருப்பதும் இன்று மக்களை சிறைவைத்திருப்பதும் கேள்விகளற்ற நடவடிக்கையாக நடக்கிறது. எமது மக்களின் பெருநிலத்தை சிறையிலடைத்த மகிந்தராஜபக்ஷ மக்களை சிறையிலடைக்க துடித்துக் கொண்டிருக்கிறார்.

மனங்களைத்தான் இந்தப்போர் குறிவைத்திருக்கிறது.

ஈழம் குறித்திருக்கிற மனங்களைத்தான் மகிந்தராஜபக்ஷ அழித்துக் கொண்டிருக்கிறார். ஈழம் பற்றி தமிழர்கள் பேசமுடியாதபடி மனங்களை வதைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ் ஈழம் குறித்து எழும்பிய நிறையப்பேரை அதற்கு எதிரானவர்களாகவும் தனது குறிக்கோளை எட்டுகிற வழியாளாகவும் கையாளுகிறார். பலரை அழித்துக்கொண்டிருக்கிறார். சுய அதிகாரம் உள்ளவர்களாக தமிழர்கள் வாழக்கூடாது அவர்களுக்கான மண்ணும் தனித்த அடையாளங்களும் இருக்கக்கூடாது என்று பேரினவாத கருத்தூட்டத்துடன் இனவழிப்பை மகிந்த ராஜபக்ஷ என்ற சிங்கள குடும்பம் நிறைவேற்றி வருகிறது.

தமிழ் மக்களால் சிங்கள ஜனநாயக தேசிய வரலாற்றின் தொடக்க காலத்திலருந்தே புறக்கணிக்கப்பட்டு வருகிற சிங்கள பெருந்தேசியத்துக்குள், தமிழ் மக்களை இழுத்து நசித்து கொல்லுவதற்கு இன்று மகிந்தராஜபக்ஷ போரிட்டுக் கொண்டிருக்கிறார். வெறித்தனமான கருத்துக்களாலும், சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளாலும் தமிழ் மக்களின் மனதை பல்வேறு விதங்களில் அழித்துக்கொண்டு இருக்கிறது சிங்கள இனம். சிங்கள பேரினத்துக்கான புத்தி தமிழ் மனங்களை ஊடுருவி பிரித்து தனது நோக்கங்களை கையாளுகிறது.

உலகத்தை தமிழர்களின் முன்பாக நிறுத்தி சிங்கள அரசால் இன்றைக்கு நிகழ்த்தப்படுகிற போர் தமிழ் மக்களை எல்லாவிதத்திலும் பயமுறுத்துகிறது. இப்பொழுதுக்கு தப்பித்து வாழ்தல் போதும் என்கிற மாதிரியான வாழ்நிலையை உருவாக்கி ஆயுதங்களால் மிரட்டி எதுவும் பேசாத மௌனிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான மனதின் முன்பாக உலகத்தின் கொடுமையான ஆயுதங்களும் அதிகாரமும் திரண்டு நிற்கிறது. மக்களுக்கு முற்றிலும் எதிரான பெருந்தேசியம் அதிகாரங்களை விரித்து விரித்து மனங்களை குறிவைத்தழிக்கிறது.

ஜனநாயகத்தலைவர்களாக காட்டுகிற இந்த அதிகாரங்களின் கதிரைகளுக்கு கீழாக முழு வன்முறையாளர்களும் ஒளிந்திருக்கிறார்கள். ஆயுதங்களால் எல்லாவற்றையும் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முன்பாக முழு வன்முறைகளும் குவிந்திருக்கின்றன. மக்கள் ஆசைப்படுகிற உலகத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறவர்களால் நிமிடத்துக்கு நிமிடம் அழிந்து கொண்டிருக்கிற எமது மக்களை அவர்களே காப்பாற்றுவார்கள் என்று கெஞ்சி கேட்டு காத்திருப்பது மிகவும் முட்டாள்தனமாயிருக்கிறது.

மனங்களை குறிவைத்திருக்கிற இந்தப் போர் தமிழர்களின் மனதையும் இனத்தையும் அழித்து சிங்கள பெருந்தேசியத்தை விரித்துக்கொண்டிருக்கிறது.

- தீபச்செல்வன் (deebachelvan@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Comments