இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை
இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் சர்வதேஅரசியற்களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.
அந்தவகையில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு அடித்தளமாக விளங்குவது லண்டன் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இங்கு நடத்தப்பட்ட வெகுஜனப் போராட்டத்தில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இது கனடாவில் நடத்தப்பட்ட பேரணி மூலம் முறியடிக்கப்பட்டது. பின்னர் கடந்த சனிக்கிழமை லண்டனில் நடத்தப்பட்ட மற்றொரு வெகுஜனப் போராட்டம் மூலம் அதையும் முறியடித்திருக்கின்றார்கள்.
லண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உயிர்களை தியாகம் செய்யும் அளவிற்கு வேகுண்டெழுந்திருக்கிறது. அதில் முருகதாசன் என்னும் இளைஞர் தன்னை ஆகுதியாக்கி புலம்பெயர் மக்களின் போராட்டத்தின் எழுச்சிக்கு வலுச்சேர்த்திருக்கின்றார்.
அதன் விளைவே இன்று விருட்சமாகி நிற்கின்றது. லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் கடந்த 6ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் பிரித்தானிய நõடாளுமன்றத்தின் முன்னால் அணிதிரண்டு திடீரென அந்த வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதனால் அங்கு காவல்துறையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் பிரித்தானிய காவல்துறையினரால் அவர்களை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் தமது வேலைகளையும் விட்டுவிட்டு அங்கு சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்தனர். இதனால் காவல்துறையினர் செய்வதறியாது தவித்தனர். இது இவ்வாறு இருக்க மறுநாள் செவ்வாய்க்கிழமை (07.04.09) அதிகாலையில் மக்கள் தம் காலைக் கடன்களையும் வேறு வேலைகளையும் கவனிப்பதற்காக கலைந்தனர். இதனால் அங்கு 1500 வரையான மக்களே இருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினர் காலை எட்டு மணியளவில் அந்த நாடாளுமன்ற வீதிக்கு விரைந்த காவல்துறையினரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கிருந்த மக்களின் மீது தடியடிப்பிரயோகம் செய்தனர். இதனால் பல மக்கள் கை, கால் முறிவுகளுக்கும் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
இருந்தும் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லவில்லை. அடிவாங்கியும் நகராது இருந்தனர். காவல்துறையினருக்கு வேறுவழி தெரியவில்லை. உடனே அவர்கள் ""நாங்கள் உங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை ஒதுக்கித் தருகின்றோம் அதற்குள் இருந்து உங்கள் ஆர்ப்பாட்டத்தினைத் தொடரலாம்'' என்று கூறியடுத்து மக்கள் அவ்விடத்தை விட்டகன்று நாடாளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்திலிருந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நோர்வேயிலும், பிரான்சிலும் மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர்.
இருந்தபோதும் அவர்களை காவல்த்துறையினர் அங்கிருந்து அகற்றிவிட்டனர்.
இது இவ்வாறு இருக்கையில் அன்று மாலை (07.04.09) 5 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவகுமாரவேல் சிவதர்சன், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்களும் சாகும் வரை நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதற்கு ஆதரவாக பல உறவுகள் இரவு பகலாக அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் நான்கு நாட்களாகியும் வீடு செல்லாது அங்கேயே படுத்துறங்கி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு வழங்கியதனை காணமுடிந்தது.
இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் சந்தித்ததனைத் தொடர்ந்து அவர்கள் நீர் மட்டும் அருந்தி தமது உண்ணாவிரதப போராட்டத்தினை மேற்கொண்டனர். இருந்த போதும் பிரித்தானிய இளையோர் அமைப்பு, உண்ணாவிரதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செரோன் மக் டொனால்ட்டினால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சிவகுமாரவேல் சிவதர்சன் என்பவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10 ஆம் திகதி கைவிட்டார். அதாவது, உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிரித்தானிய அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பிற்கும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் அழைத்து செல்லும் என செரோன் மக்டொனால்ட் வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்தே சிவதர்சன் போராட்டத்தைக் கைவிட்டார்.
ஆனால் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களிடம் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்திருப்பதற் கான காரணத்தை வினாவியபோது தமது கோரிக்கைகளை நிறைவேற்றாதவிடத்து உண்ணாவிரதத்தை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று கூறி பிடிவாதமாக இன்றுவரை தொடர்கின்றார். ஆறு தமிழ் மாணவர் பிரதிநிதிகளை பிரித்தானிய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைத்துச் செல்லதாக வாக்குறுதி அளித்தும் இன்றுவரை அவர்களை அழைத்துச் செல்லவில்லை.
அதற்கான தயார்ப்படுத்தல்களில் மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் கடந்த 11ஆம் திகதி மாபெரும் கண்டனப் பேரணிக்கு பிரித்தானியவாழ் மக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பேரணி சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் என்பாங்மென்ற் என்ற நிலக்கீழ்த் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து கிட்டத்தட்ட 4 மைல்களையும் தாண்டி ஹைட்பாக்கோணர் என்னுமிடத்திலுள்ள மைதானத் திடலில் முடிவடைந்தது.
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1,25,000 மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேரணியில் 200,000 ற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் காவல்துறையினரோ 1,50,000 இற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்றால் என்ன சும்மாவா? அதுவும் லண்டனின் இதயம் எனப்படும் பகுதியில் நடத்தப்பட்ட ஊர்வலமல்லவா அது. முன்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது போலவே தரைக்கீழ் தொடருந்து நிலையங்கள் பல மூடப்பட்டன எங்கும் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
எங்கும் படுகொலைகளைக் கண்டிக்கின்ற பதாதைகளும், சர்வதேச நாடுகள் இனப்படுகொலையை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பதாøககளும், பிரித்தானிய அரசு ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகின்ற பதாகைகளும் அங்கு காணப்பட்டன.
அவர்கள் புலிக்கொடியையும் தாங்கியிருந்தனர். தரைக்கீழ் தொடருந்துகளிலிருந்து வந்தவர்கள் தாங்கிவந்த புலிக்கொடிகளை காவல்துறையினர் பறித்தனர். இருந்தும் பலர் புலிக்கொடிகளை ஏந்தியிருந்ததை காணமுடிந்தது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சிலரை நான் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களைப் பதிவாக்கினேன்.
அந்தவகையில் இனப்படுகொலையைக் கண்டித்து சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவன ஈர்ப்புக்காக ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள தன்சானிய நாட்டில் உள்ள உயர்ந்தமலையாக விளங்கும் கிளிமஞ்சாரோ மலையில் ஏறிவிட்டுவந்த கீரன் அரசரட்ணம் அதற்கான காரணத்தைக் கூறும் போது ""கிளிமஞ்சாரோ மலை உள்ளிட்ட மிகப்பெரும் நிலப்பரப்பு முன்பு கென்யா நாட்டிற்குச் சொந்தமாக இருந்தது.
அதனை மனித நேய நல்லெண்ண அடிப்படையில் கென்யா தன்சானியா நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.
தற்போது இது தன்சானிய நாட்டிற்குரியது.
எனவே மனிதநேயத்திற்கு உதாரணமான உயர்ந்த சிகரமாக விளங்குவது இந்த கிளிமஞ்சாரோதான். ஆகவே மனித நேயத்தின் அன்பளிப்பான கிளிமஞ்சாரோ மலையில் ஏறிநின்று தமிழர்கள் இழந்த இறைமையை மீண்டும் எம்மிடம் தரும்படி கேட்பதுதான் நியாயமானதும், பொருத்த மானதும் கூட. இதுவே உலகின் கண்ணை உறுத்தும்' இதற்காகவே நான் கிளிமஞ்சாரோ மலையில் ஏறினேன் '' என்றார்.
நியூகாம் பிரதி மேயர் போல்சத்தியநேசன் கருத்துக்கூறும் போது மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய அரசுக்கு இலங்கைப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை உள்ளது என்றும், அவர்கள் உடனடியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். அவர்கள் பயங்கரவாத அமைப்பு அல்ல. அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு பின்நிற்கக் கூடாது என்றும் இதற்கு யசீர் அரபாத்தை உதாரணமாகக் கொள்ளலாம் என்றார்.
பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சபாநாதன் கருத்துக்கூறும்போது கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பேரணியின் பின்னரே பிரித்தானிய அரசு பிரித்தானிய தமிழர் பேரவையை அழைத்துப் பேசியதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மிகப்பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார்.
அத்துடன் "வணங்காமண்' என்னும் கப்பல் விரைவில் முல்லைத்தீவின் கரையைத் தட்டும் என்றார். வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வது மனிதாபிமானம் அற்றது. எனினும் மக்கள் வேறுவழியின்றி விதிகளை மறித்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டிருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் நண்பி மினி அவர்கள் கருத்துக்கூறும் போது தனக்கு பரமேஸ்வரனை ஒரு வருடத்திற்கு மேலாகத் தெரியும் என்றும் அவரது உடல்நிலை எப்பவும் மாறுபடலாம் என்றும் தெரிவித்தார்.
அவர் எழுத்துமூலம் தன் அனுமதியின்றி தனக்கு கட்டாயமாக உணவோ அல்லது மருத்துவ உதவிகளோ செய்யச் கூடாது என்று காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார் என்றும் தமிழ் இளையோர்கள் என்றும் இவருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் இவர் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேறாது உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறினார்.
இந்த நேரத்தில் மேலும் சில விடயங்களையும் பதிவு செய்யவேண்டும் என நினைக்கின்றேன். 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளச் சென்றவேளை நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு உதவியாக வெறும் இருபது மாணவர்களே இருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரித்தானிய காவல்துறையினர். அந்த மைதானத்தில் உள்ள புற்கள் உங்கள் ஆர்ப்பாட்ட மூலம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புற்களைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்தனர். இருந்தும் மக்களை அந்த புற்றரைகளுக்கு அப்பால் இருந்து உண்ணாவிரதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளுமாறும் கூறினர்.
முன்னர் 400 பேர் மட்டும் இரவு பகலாக அங்கு தங்கியிருக்க அனுமதித்த காவல்துறையினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி முதல் வெறும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனையோர் அங்கு வந்து உண்ணாவிரதியைப் பார்த்துவிட்டு அகன்றுவிடவேண்டும் என்றும் கூறினார்.
இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றுவரை அதைத் தொடர்கின்றனர். காவல்துறையினர் மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் யாரும் ஒலிபெருக்கி பயன்படுத்தமுடியாது என்று அறிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 4000 இற்கும் அதிகமான மக்கள் ஈஸ்டர் விடுமுறையான திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் வெகுண்டெழுந்து மீண்டும் வீதியைத் தடைசெய்தனர். அன்றையதினம் விடுமுறை என்றதனால் பல காவல்துறையினர் கடமையில் இல்லை.
இதனால் அவர்கள் ஒருகணம் சங்கடப்பட்டாலும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களும் மக்களை எதுவும் செய்யவில்லை. இரவு 9 மணியளவில் பிரித்தானிய மாணவர்களின் பணிப்பின் பேரில் மக்கள் தாமாகவே வீதியை விட்டகன்று வாகனங்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட்டனர்.
இது குறித்து ஒரு காவல்துறை உறுப்பினர் கூறும்போது ""நீங்கள் உங்கள் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து குளிரில் உறைகிறீர்கள். ஆனால் நானோ இந்த ஈஸ்ரர் விடுமுறையில் மனைவி மக்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் இங்கு வந்து உறைகிறேன்'' என்றார்.
இவ்வாறு இரவு பகலாக மக்கள் இங்கு தங்கியிருந்து 12 நாளாகவும் தொடரும் பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவளிக்கின்றனர். இவர்களின் உணர்வை தமிழ்த் தேசிய உணர்வை எண்ணி காவல்துறையினரே திகைத்திருக்கின்றனர் என்றால் பாருங்கள்
-அ.மயூரன்-
Comments