போர் சுமக்கும் மகிந்தவுக்கு எதிராக தமிழினத்தின் வேர் சுமப்போம்

தமிழ்மக்களின் சதைகளாலும் பிண்டங்களாலும் செய்த வெற்றிக்கோப்பையை காண்பித்து சிங்கள தேசத்தின் புதுவருடத்தை மகிந்த அரசு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறது. தானும் தனது படைகளும் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பை ஏதோ தான் தமிழ்மக்களுக்கு செய்த பெரும் கைங்கரியமாக உலகெமெலாம் அறிவித்துள்ள மகிந்த அரசு, அதனை தனது அரசியல் நலனுக்கு லாவகமாக பயன்படுத்தவும் தவறவில்லை.

பாதுகாப்பு வலயத்திற்குள் தினமும் கொன்று குவிக்கப்படுகின்ற மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று உலகமே ஏங்கி தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழ்மக்கள் தொடர்பில் எந்தக்கவலையும் இல்லாத இரு அரசியல் தலைவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்றால், ஒருவர் மகிந்த மற்றையவர் தமிழக முதல்வர் கருணாநிதி.

இந்த வெறித்தனமான தமிழ் எதிர்ப்போக்குகள் ஒருபுறமிருக்க, மேற்குலகத்தின் நகர்வுகளை உற்றுநோக்கினால், அதன் மனச்சாட்சி இன்னும் சாகவில்லை என்ற மகிழ்ச்சியான சமிக்ஞை தொடர்ந்து தெரிந்தவண்ணம் உள்ளது. அதுதான் தமிழ்மக்களின் கலங்கரை விளக்காகவும் எரிந்து கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழினத்தின் விடிவு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டிய ஒன்று என்ற எண்ணத்தை அடிமனதில் கொண்ட பல நாடுகள், அதனை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் எவ்வாறு சேர்த்துக்கொள்வது என்ற சங்கடத்தில் காத்திருக்கின்றன.

இன்னும் சில நாடுகள் சர்வதேச சார்பு அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டிருந்து விட்டால் பிரச்சினைகளுக்கு தனித்து முடிவெடுக்கவேண்டிய தேவையிராது என்ற ஒரு முடிவுடன் இருந்துவிட்டு தற்போதெல்லாம் பகிரங்கமாக தமிழர் போராட்டம் பற்றிய வெளிப்படை அறிக்கைகளுடன் தமது பழைய கொள்கைகளில் இருந்து வெளியே வந்திருக்கின்றன.

அவ்வாறாக இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர் போராட்டம் ஏதோ ஒருவகையில் எல்லாத்தரப்புடனும் சம்பந்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் இவ்வாறு மாற்றம் அடைந்துள்ள - இன்னமும் மாற்றம் அடைந்தவாறுள்ள - சூழ்நிலையை சிங்கள ஆட்சியாளர்களின் பிராசாரப்போர், இராஜதந்திரப்போர், அரசியல் போர் ஆகியவற்றுக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பது இன்னமும் தொக்கி நிற்கின்ற மிகப்பெரிய கேள்வி.

தமிழீழ விடுதலைப் போரின் களம் என்பது இன்றைய தினத்தில் இடம்பெயர்ந்து விட்டது. அது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் கைகளில் முற்று முழுதாக வந்துவிட்டது. இதனை இன்னமும் உணராதவர்களாக இருக்கலாமா? எல்லாமும் சொல்லித்தான் தெரிய வேண்டியவையா? 30 வருட கால சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துள்ள மக்களுக்கு சில விடயங்கள் சொல்லாமலே புரியவேண்டிய முதிர்ச்சி வரவேண்டாமா?

இதுதான் செயற்பட வேண்டிய காலம். எமது இனத்தின் விடுதலையை ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்தும் ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியிலிருந்தும் முற்றாக விடுவித்து தமிழ்மக்களின் இலட்சியத்தை முழுமை பெறவைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

கால காலமாய் தமிழினம் கண்டுவந்த அனுபவம் இது. இந்த சிக்கலுக்குள்ளிருந்து விடுதலையை விடுவித்துக்கொள்ள தமிழினம் புதிய வியூகங்களின் ஊடாக தனது போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மனித உரிமைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் உயர்நிலையில் வைத்துப்பேணும் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழின விடுலைக்கான வேட்கையை இந்த நாடுகளிடம் சாத்வீக ரீதியில் எடுத்துக்கூற வேணடிய மிகப்பெரும் பங்கும் அதற்குரிய தார்மீக கடப்பாடும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் உள்ளது.

தமிழின விடுலைப் போராட்டம் என்பது எவ்வளவு தூரம் உலகமயமாகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதற்குரிய சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் காலத்தின் நீளம் அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இதற்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பதற்கு சரியான ஒரு உதாரணம் ஒன்று வருமாறு-

அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து, இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால், இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக் காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன், இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்கு அடுத்த நாள், வீரச்சாவடைந்த அமெரிக்க இராணுவத்தினரை நினைவு கூரும் நாள்.

அன்றைய நாள் நிச்சயம் ஐ.நா. சபை கூடாது என்பது பென் கூரியனுக்கு தெரிந்திருந்தது. அவரது திட்டத்தின் பிரகாரம் காரியங்கள் நடந்தன.

வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிற்போடப்பட்டது. இந்த இடைவெளிக்குள் வேகமாக செயற்பட்டார் பென் கூரியன். உலகெங்கும் பரந்து வாழ்ந்திருந்த யூத இன மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுத்தார்.

'யூத இன மக்களே! எமது தேசத்துக்கு விடிவு கிடைப்பதற்கான கடைசிச் சந்தர்ப்பம் எமது கைகளுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எமது தேசத்தின் தலைவிதியை முடிவு செய்யும் தீர்மானத்தை எமக்குச் சார்பாக நிறைவேற்ற உங்கள், உங்கள் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுங்கள்" - என்று அவர் கூறினார்.

உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் சிலிர்த்தெழுந்தார்கள். தத்தமது நாடுகளிலுள்ள நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார்கள். தனியாக அல்ல. அந்த நாட்டு மக்களையும் அணி திரட்டிக்கொண்டு சென்றார்கள். டென்மார்க் என்றால் அங்குள்ள யூதன் பத்து டெனிஷ் குடிமக்களை அழைத்துக்கொண்டு சென்றான். இவ்வாறு உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சென்று அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களை முற்றுகையிட்டனர்.

'வளங்களை சுரண்டும் எண்ணத்துடன் செயற்பட்டு எமது தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடாதீர்" - என்று உலகெங்குமுள்ள யூதர்கள் தமது தேசபக்தியை பறைசாற்றினார்கள்.

அந்த ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, நிச்சயம் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரபு நாடுகள் எண்ணியிருந்த பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன.

முடிவு: இஸ்ரேல் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விடுதலை வேண்டிப் போரிட்ட யூத இனம் தமக்கான நிலத்தை பெற்றுக்கொண்டது.

உலகெங்கும் வாழ்ந்த யூத இன மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டிய பென்கூரியனின் முயற்சி மகாவெற்றி கண்டது. வல்லரசுகளின் தன்நேச திட்டங்கள் உடைத்தெறியப்பட்டன. அரபு நாடுகளின் சதி தவிடுபொடியானது.

அதாவது, புலம்பெயர்ந்து வாழ்ந்த யூத இன மக்களின் புரட்சி இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு பெரும் அடித்தளமானது.

இத்தகைய ஒரு அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்துக்கு தமிழினம்; இன்று தயாராக இருக்கிறதா? இத்தகைய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டே ஆகவேண்;டிய கட்டாயநிலை தற்போது தோன்றியிருக்கின்றதை தமிழ்மக்களின் அனைத்து மட்டத்தினரும் ஏற்றுக்கொள்ளகொண்டிருக்கின்றன.

அதனை துரிதமாக செயற்படுத்த இனியும் தாமதிக்க முடியாத நிலையை தமிழினம் உணர்ந்;து கொள்ளவேண்டும். போர் சுமக்கும் மகிந்தவுக்கு எதிராக தமிழினதின் வேர் சுமக்கும் இனமாக புறப்படுவதே இன்றைய பணி.

- ப.தெய்வீகன் -

Comments