ஈழ விடுதலைப் போராட்டத்துடன் அறுதியான முறையில் பிணைந்துள்ளோம்: பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ் பிரதிநிதிகள் பிரகடனம்
வட்டுக்கோட்டை தீர்மான உட்கிடக்கைக்கு முரணற்ற வகையில், அரசியல் தீர்வொன்றை நிறைவேற்றம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனைத்துலக சமூகத்திடம் அழைப்பு விடுப்பதாகவும் அப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் சுதந்திரம் என்னும் பெயர்கொண்ட நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்ற இப்பிரகடன மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பதில் நகரபிதாக்களான சேர்ஜ் செட்ரமான், திருமதி ஜிதோன், டேவிட் பார்ப் ஆகியோருடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக டேவிட் ஜோசப்பும், முன்னாள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரான எட்வேட் செபஸ்தியாம்பிள்ளையும் கலந்துகொண்டனர்.
திருமதி சுபாஜினி ராஜ்குமார் பிரெஞ் - தமிழ் மொழிகளில் நெறிப்படுத்திய இம்மாநாட்டில் கி.பி.அரவிந்தன் இப்பேரவையின் நோக்கம் அதன் அவசியம் பற்றி தொடக்க உரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களான எட்வேட் செபஸ்தியாம்பிள்ளை தமிழிலும், டேவிட் ஜோசப் ஆங்கிலத்திலும் தமது சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
பிரகடனங்களை தமிழில் திருமதி திலகவதி பரராஜசேகனும், பிரெஞ்சில் செல்வி சாலினியும் பேரவையின் முன் படித்தளித்தனர்.
தொடர்ந்து இப்பிரகடனம் மீதான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வகையான அரசில் தீர்மானம் ஒன்று வாக்களிப்பு முறையில் ஈழத் தழிழரால் புலம்பெயர்ந்த நாடொன்றில் நடைபெறுவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகடனம் மீதான வாக்கெடுப்பு நிகழ்விற்கு சேர்ஜ் செட்ரமான், திருமதி ஜிதோன், டேவிட் பார்ப், ஆகிய மூவரும் முன்னிலை வகித்து, 67 வாக்குகளும் ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கு வாக்களித்துள்ளது என்ற முடிவினையும் அறிவித்தனர்.
வாக்களிக்கப்பட்ட பிரகடனத்தின் முழு விபரம்:
பிரெஞ்சு வாழ் ஈழத் தமிழர் பிரதிநிதிகளின் பேரவை
பாரிஸ் - 18 ஏப்ரல் 2009.
பிரான்சில் நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கங்களின் வைபவ ரீதியான பிரகடனம்
மானிட வரலாற்றின் ஓட்டத்தில், சுதந்திர சுயநிர்ணய தாகம் கொண்ட மக்கள் தாம் சுய இறைமையுள்ளவர்கள் என்பதை உலகிற்குப் பிரகடனம் செய்து தமது தலைவிதியைத் தாமே சுயமாக நிர்ணயம் செய்யும் சுயாதீனமான அரசநிர்வாகங்களை நிறுவும் நோக்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
1977 இல் சுயநிர்ணய விருப்புக்கொண்ட இலங்கைத் தமிழ் மக்கள் சனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தமது பிரதிநிதிகள் ஊடாக அடுத்துவரும் காலங்களில் தாம் சுய இறைமையுடையவர்கள் என்றும் தமக்கென ஒரு தனி அரசை நிறுவுவதெனவும் உலகிற்குப் பிரகடனம் செய்தனர்.
இப்பிரகடனமே இலங்கையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாகியது.
எமது வரலாற்றின் ஒரு திருப்புமுனையில், பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச்சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நாம், எமக்குள்ள பேச்சுரிமையை உபயோகம் செய்து, கடமையுணர்வை முன்னிறுத்தி, 18 ஏப்ரல் 2009 அன்று பாரிசில் பேரவையாக ஒன்று கூடி, பின்வரும் விடயங்களை வைபவ ரீதியாகப் பிரகடனம் செய்கிறோம்.
"மானிட நிகழ்வோட்ட நகர்வுகளின் போதில், இன்னொரு மக்களுடன் தன்னை இணைத்திருக்கும் அரசியற் தளைகளை அவிழ்ப்பதும், இவ்வுலகின் இறைமையுள்ள தேசியங்கள் மத்தியில், இயற்கையின் நியதிகளும், இயற்கைத் தெய்வமும் வழங்கும் உரிமையின் அடிப்படையில், தனியானதும் சமமானதுமான இடத்தைப் பெறுவதும் ஒரு மக்களுக்கு இன்றியமையாததாகிறது.
மானிடக் கருத்தின்பால் கொண்ட மதிப்பு பிரிவினையை நிர்ணயிக்கும் காரணங்களை இம்மக்கள் பிரகடனம் செய்யும் வண்ணமும் வேண்டி நிற்கிறது.
அனைத்து மானிடர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், வாழ்வு, சுதந்திரம், இன்பத்தேடல் எனும் இன்னபிற உரிமைகளை மீறா இயற்புரிமையாக படைப்பிறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பதையும் நாம் நீரூபிக்கத் தேவையற்ற உறுதியான உண்மைகளாக இறுகப்பிடித்துள்ளோம்.
இவ்வுரிமைகளைக் காப்புறுதி செய்ய அரச நிர்வாகங்கள் மானிடர்கள் மத்தியில் நிர்மாணிக்கப்படுகின்றன. அவற்றின் நியாயமான அதிகாரம் ஆளப்படுபவர்களின் ஒப்புதலிலிருந்தே தோற்றம் கொள்கிறது.
இந்த இலக்கை அழிக்கும் வடிவைப்பெறும் அரச நிர்வாகங்கள் உருவாகும் போதெல்லாம் அதை அழிக்கும் அல்லது மாற்றும் உரிமையும், புதிய அரச நிர்வாகத்தை கோட்பாட்டு அடிப்படையில், உறுதிப்பாட்டையும் மகிழ்வையும் வழங்குமெனத் தமக்குத் தோன்றும் வடிவில் நிர்மாணம் செய்யும் உரிமையும் மக்களுக்கு உண்டு"
என்றவாறு உரைக்கப்பட்டுள்ள ஐக்கிய அமெரிக்கச் சுதந்திரப் பிரகடன நிர்மாணக் கோட்பாட்டின் உட்கிடக்கையை மனதிருத்தி,
26 ஓகஸ்ட் 1976 அன்று பிரஞ்சு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தையும், 10 டிசம்பர் 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தையும் மனதிருத்தி,
14 மே 1976 அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றிய வட்டுக்கோட்டை அரசியற் தீர்மானம் 1977 இல் நடைபெற்ற ஜனநாயக ரீதியான பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்குக்கு விடப்பட்டு இத்தீர்மானம் அவரகள் மத்தியில் 82 வீதமான விருப்பு வாக்குகளை பெற்ற மக்கள் ஆணையாக மாறியது என்பதையும் நிறைவு கூர்ந்து,
பிரான்சில் நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நாம், இத்தேர்தல் தீர்ப்பினால் இலங்கைத் தமிழ் மக்கள் தாம் ஒரு சுதந்திர இனமாக சுயநிர்ணய உரிமையுடன் தனித்துச் செல்லும் விருப்பை தெளிவுற வெளிப்படுத்தினார்கள் என்பதைப் பிரகடனப்படுத்துகிறோம்.
தமது குடியுரிமைச் சமத்துவத்தை வென்றெடுக்கும் நோக்கிலான சாத்வீக, சனநாயக வழியிலான அனைத்துப் போராட்டங்களிலும் இலங்கைத் தமிழர்கள் தோல்விகண்டு, இறுதி வெற்றி வரைக்குமான தளராப் போராட்டத்தை இத்தேர்தலின் மூலம் முன்மொழிந்தார்கள் என்பதை நாம் உலகிற்கு வெளிப்படை அறிவிப்பாக முன்வைக்கிறோம்.
எமது சதோதரர்களான இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசின் கொடுங்கோலாட்சியில் அடக்கப்பட்டு தமது பேச்சுரிமையை முற்றுமுழுதாக இழந்துள்ளார்கள் என்பதனை, பிரான்சில் நிறுவப்பட்டுள்ள தமிழ்ச்சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நாம், கருத்தில் இருத்துகின்றோம்.
அடக்கப்பட்ட அவர்களின் குரலை, அவர்கள் பெயரால், அனைத்துலக சமூகத்திற்கு கேட்கும் வகை செய்தல் நமது உரிமையெனவும், குறிப்பாக அது எமது கடமையெனவும் நாம் பிரகடனம் செய்கிறோம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்து நிறைவேற்றிய மக்களின் பெயரால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் தாய்நிலத்தை ஏதேச்சாதிகார ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கத் தமிழ்ப்படை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்டத்துடன் நாம் அறுதியான முறையில் பிணைந்துள்ளோம் என்பதை நாம் மீண்டும் பிரகடனம் செய்கிறோம்.
1977 இல் ஜனநாயக முறையில் வெளிப்படுத்ப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் சுதந்திர விருப்பு சட்டபூர்வமானதென்பதையும், இன்றும் வலுவுள்ளதென்பதையும் நாம் பிரகடனம் செய்கிறோம்.
நியாமான இவ்விருப்பின் காவலர்களான இருக்கும்படியும், இவ்விருப்பை நிறைவேற்றும் அரசியல் தீர்வை வட்டுக்கோட்டைத் தீர்மான உட்கிடக்கைக்கு முரணற்ற வகையில் நிறைவேற்றம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் அனைத்துலக சமூகத்திடம் அழைப்பு விடுக்கிறோம்.
விவாதத்தையடுத்து ஜனநாயக ரீதியில் மேற்படி பிரகடனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட எமது சங்கங்களினால் ஜனநாயக முறைமையில் தேர்வு செய்யப்பட்ட பிரான்சில் நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நாம், எமது சங்கங்களின் பெயரால், இப்பிரகடனங்களின் கீழ் கையொப்பமிடுகிறோம்.
Comments