சிங்களத்தின் இறுதிப்போர் இரண்டாம் கட்டம்



‘வெற்றிபெறும் படை, முதலில் தன் வெற்ற்றியை நிர்ணயித்துக்கொண்டு அதன்பின் களத்தில் இறங்குகிறது. தோற்கும் படையோ, முதலில் களத்தை முடிவு செய்து விட்டுப் பிறகு வெற்றியைத்தேடுகிறது’. - போர்க்கலை – Art of War நூலில் சீன போர்த்தந்திர நிபுணர் சன்சூ.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ‘இறுதிப்போர்’ என்று அறிவிப்பு செய்தபோது சிங்கள ராணுவம் தனது களம் எது என்பதைத் தீர்மானிக்கவில்லை. 2007-ம் ஆண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சி அவர்களது ‘களமாக இருந்தது’. புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியபோது அடுத்த களம் எது என்பதை ராணுவத்தினரால் கணிக்கக்கூட இயலவில்லை. ஆனால், சிங்களம் களம் காணும் முன்பே, போரின் 95 விழுக்காடு முடிந்துவிட்டது என்று இறுமாப்பாக அறிவித்தது.

புலிகள் முல்லைத்தீவுக்குள் நிலை கொண்டபோது சிங்களம் முல்லைத்தீவுதான் களம் என்று நினைத்து தனது படைத்திறனின் பெரும்பகுதியை அப்பகுதியில் குவித்தது.

ஆனால், புலிகள் தங்கள் களங்கள் எவை என்பதை முன்னமே திட்டமிட்டிருந்தனர். உண்மையில் இதுவரை 12.03.2009 பிற்பகல் 2 மணி) புலிகள் தீர்மானித்த களங்களில் மட்டுமே போர் நடைபெற்று வருகிறது. சிங்கள ராணுவம் புலிகளின் திசை வழியில் மட்டுமே தனது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முல்லைத்தீவுக்குள் நிலைகொண்ட புலிகள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாள் தமது எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கினர். அவர்கள் தேர்ந்தெடுத்த களம் - புதுக்குடியிருப்பு!

முல்லைத்தீவின் எல்லையில் உள்ள புதுக்குடியிருப்பு பெரும் எண்ணிக்கையிலான படையினரால் முற்றுகையிடப்பட்டிருந்தது. படையினர் புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறியபோது 30 பெண் புலிகள் நடத்திய தாக்குதலில் 1000த்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான ஆயுதங்களும் ராணுவத்தளவாடங்களும் புலிகள் வசம் வந்தன. இந்தத் தாக்குதல் பிப்ரவரி 1 முதல் 4-ஆம் நாள் வரை நீடித்தது. இதன்போது படுகாயமடைந்து, தப்பி ஓடிய படையினரின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறிச்சென்றால் புலிகள் அங்கிருந்தும் பின் நகர்வார்கள் என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்திருக்கக்கூடும்.

ஏனெனில், அதுவரை புலிகள் எவ்வித எதிர்த்தாக்குதலும் நடத்தாமல் பின்வாங்கியபடியே சென்றனர். புதுக்குடியிருப்புதான் தங்கள் களம் என்பதைப் புலிகள்தான் தீர்மானித்தனர். அவர்களுக்கு அக் களத்தில் வெற்றி கிட்டியது.

எது களம் என்பதை அறியாமல் அல்லது எதுவும் களமாகலாம் என்ற அச்சத்துடனும் குழப்பத்துடனும் முன்நகர்ந்த சிங்களப்படை பேரிழப்பைச் சந்தித்தது. சீன போர்த்தந்திரங்களில் தந்திரங்கள் என்ற ஒரு சிறு தொகுப்பு உண்டு. இதன் ஒரு விதி, ‘உழைப்பை ஓய்வால் நிரப்பு’ என்பதாகும்.

போர்த்தந்திர அடிப்படையில் இதன்பொருள். ‘போர் நடக்கும் நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுப்பது நன்மை தரும் செயலாகும். எந்த இடத்தில், எப்போது சண்டை நடக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் எதிரிக்கு இது தெரியாதிருக்கட்டும். உங்கள் எதிரி தங்கள் திறன் முழுமையையும் செலவிட்டுத் தீர்க்கட்டும். நீங்கள் உங்கள் திறனைக் காத்து வையுங்கள். எதிரி சோர்ந்து, குழம்பி நிற்கும்போது, நீங்கள் திறனுடனும் சரியான நோக்கத்துடனும் தாக்குங்கள்’.

இவ்விதியிலிருந்து சற்றும் விலகாத நிலையே தமிழீழப் போர்க்களத்தில் காணப்படுகிறது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களப்படையினர், பீரங்கிகள், கவச வாகனங்கள் பல்லாயிரக்கணக்கான எறிகணைகள் அடங்கிய கனரகப் பொருட்களுடன் எது சண்டை நடக்கப்போகும் இடம் என்பதறியாம லேயே தங்கள் தாயகத்திலிருந்து வெகுதொலைவு வந்து நிற்கின்றனர். புதுக்குடியிருப்பைச் சுற்றிலும் நடந்த சண்டைகளைப்பற்றி சிங்கள ராணுவ அமைச்சகம் “விடுதலைப் புலிகள் தமது இறுதி இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். இந்தத் தாக்குதல்கள் புலிகளின் பலவீனத்தையே காட்டுகின்றது” என்றது.

இதே வேளை, புதுக்குடியிருப்பிலிருந்து வெளியான ஒரு தகவல் சிங்கள அரசையே அதிர்ச்சியடையச் செய்தது. புதுக்குடியிருப்பில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களுடன் இணைந்து புலிகளின் விமானமும் தாக்குதல் நடத்தியது என்பதே அச்செய்தி. புலிகளின் விமானம் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியதாகவும் அதைப்பார்த்த படையினர் வெகு நேரம் வரை அப்பகுதியை நோக்கி எறிகணைகள் வீசியதாகவும் கொழும்பு ஊடகங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் நடைபெறும் முன்னர்தான், புலிகளின் விமான ஓடுதளங்களைக் கைப்பற்றிவிட்டதாகச் சிங்கள இராணுவம் பெருமையடித்துக் கொண்டிருந்தது.

மேலும், மிகவும் குறுகலான அந்தப்போர்ப் பகுதியில் ஓடுதளம் இல்லாமல் புலிகளின் விமானம் எப்படி மேலெழுந்தது? மீண்டும் எப்படிப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது? ஆகிய கேள்விகள் இன்றுவரை விடை தெரியாமல் இருக்கின்றன.

இதற்கிடையில், கொழும்பு வேறொரு நெருக்கடியையும் சந்திக்க நேர்ந்தது. புதுக்குடியிருப்புத் தாக்குதலில் படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அரசு தரப்பு வெளிப்படையாக அறிவிக்காததால், வெகுண்டெழுந்த படையினர் குடும்பத்தினர் இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். ஏறத்தாழ 3000 பொதுமக்கள் பங்கேற்ற இப்போராட்டம் சிங்கள அரசின் கடும் தணிக்கைகளையும் கடந்து உலகின் பார்வைக்கு வந்தது. புதுக்குடியிருப்புத் தாக்குதலின் அதிர்வலைகள் எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தின.

“விடுதலைப்புலிகளுடனான போர் இப்போதைக்கு முடியாது. குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு நீடிக்கும்” என்று கருணா அறிவித்தார். சீறீலங்கா தொழிலதிபர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த அறிவிப்பினால் முதலாளியத் தலைமை பீடங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. விரைவில் புலிகளை ஒழித்து விடுவோம்.. பிறகு நீங்கள் தொழில் நடத்தலாம் என்று ராஜபக்சே அரசு, அத்தலைமை பீடங்களுக்கு உறுதியளித்திருந்தது.

கருணாவின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது என்ற அடிப்படையில், புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு சீறிலங்காவில் மங்கிப்போய்விட்டது.

செஞ்சிலுவைச் சங்கம், வன்னிப்பகுதிக்கென 35,000 பிணப்பைகள் (டீழனல டீயபள) தயாரிக்க ஆணை அனுப்பியது. சிங்களப் படையினர் கொல்லப்பட்ட பிறகு, புலிகள் அவர்களது சடலங்களை முறைப்படி செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பர். செஞ்சிலுவைச்சங்கம், பிஷணப்பைகளில், சடலங்களை அடைத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கும். செஞ்சிலுவைச்சங்கம் 35,000 பிணப்பைகளுக்கு ஆணை அனுப்பியதும் சிங்கள ராணுவ அமைச்சகம் கொதிப்படைந்தது. இது சர்வதேச சமூகத்தினர் மத்தியில் சீறிலங்கா குறித்த பீதியை ஏற்படுத்தும் முயற்சி என்றது அமைச்சகம். ராணுவப்பேச்சாளர் உதய நாணயக்காரா ஒரு படி இறங்கி, “முப்பத்தைந்தாயிரம் பிணப்பைகள் தற்கு? மூவாயிரத்து ஐநூறு போதாதா?” எனக்கேட்டார்.

செஞ்சிலுவைச் சங்கமோ, “எங்களுக்குத் தெரியும். தேவை இருக்கிறது, அதனால் ஆணைப்பிறப்பித்துள்ளோம்” என்றது. சிங்கள அதிபர் ராஜபக்சே ஒரு கொழும்பு ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், “பிப்ரவரி 1 முதல் 4 வரை நடந்த சண்டைகளில் ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டது உண்மையே” என்று முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.

இதன்பிறகுதான் இந்தியாவும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலைநாடுளும் போர்நிறுத்தம் குறித்துப் பேசத்தொடங்கின. ஆயினும், இந்நாடுகளால் குறி;ப்பாக இந்தியாவால் ஈழத்தமிழரின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்தால், போர் நிறுத்தம்” என்று அறிவித்தன. இந்த அறிவிப்புகள் வரத்தொடங்கிய போதே, வன்னிப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீது சிங்களப்படை எறிகணைத் தாக்குதல்களையும், விமானத் தாக்குதல்களையும் தொடுத்தது. பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் புதுக்குடியிருப்புச் சண்டைக்குப் பிறகு அதிகரித்துள்ளன. புலிகளைப் போரில் வெல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்ட இந்திய-சிங்கள கூட்டுப்படைத்தலைமை பொதுமக்களைப் படுகொலை செய்வதன் வழி, புலிகளை மிரட்டி சரணடைய வைக்கலாம் என்ற திட்டத்துடன் செயல்படுவதாகவும் இதைப்புரிந்து கொள்ளலாம்.

உண்மையில், தமிழர்களைப் பாதுகாப்புக் கேடயமாகக் கொண்டி ருப்பது இந்தக் கூட்டுப்படைதான் புலிகள் அல்ல என்பதை உணர முடிகிறது. கொழும்பு நகர் சண்டைக் களமாகும் என்பதைச் சிங்கள இராணுவத்தலைமை கனவிலும் நினைத்திருக்காது, வான் கரும்புலிகளின் தாக்குதல்களிலும் களம் எது? நேரம் எது? என்பவற்றைப் புலிகளே தேர்ந்தெடுத்தனர். வான் கரும்புலித் தாக்குதல்களில் சிறீலங்காவின் வரிவிதிப்புத் தலைமை அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது. “புலிகளின் விமானம் குறிதவறி வரிவிதிப்பு அலுவலகத்தில் மோதிவிட்டது” என்றது சிங்களம். “தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேறியது” என்றனர் புலிகள். இந்த முரண்களுக்கு நடுவில் ஒரு முகாமையான செய்தி ஒளிந்துள்ளது.

பொருளாதாரச் சரிவினால் தள்ளாடும் சிறீலங்கா அரசு, கடந்த பிப்ரவரி 20-ம் நாள் பொதுமக்கள் மீது புதிய கடுமையான வரிகளைச் சுமத்தி அறிவிப்பு வெளியிட்டது. தண்ணீர் வரி 100மூ உயர்வு அனுமதியில்லாமல் கால்நடைகள் வெட்டினால் ரூ. 50,000ஃ- அபராதம். ஆகியவை அவ்வரி விதிப்புகளின் கடுமையைக் காட்டும் சான்றுகள். இந்த அறிவிப்புகள் வெளியான பிப்ரவரி 20-ஆம் நாள் இரவு தான் வரிவிதிப்புத்தலைமையகம் வான் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது.

கட்டுநாயக விமானப் படைத்தளம் மீதான வான் கரும்புலித்தாக்குதல் சிங்களத்தின் ராணுவ வலிமையையும், வரிவிதிப்புத்தலைமையகம் மீதான தாக்குதல் அதன் பொருளாதார வலிமையையும் சிதைக்கும் நோக்கில் நடத்தப்பட்டவை எனக்கருதலாம். “சர்வதேச நிதியம் (IMF) உதவி செய்யாவிட்டால், சிறீலங்கா படுமோசமான பின்னடைவை எதிர்நோக்க நேரிடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், லட்சுமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“போர் முடிந்தாலும், சிறீலங்காவில் பொருளாதாரப்போர் ஒருபோதும் முடியப்போவதில்லை” என்று ரனில் விக்ரமசிங்கே கூறினார். “மரபில்லாத வழிவகைகளில் திறமையுள்ளவர்கள் விண்ணும் மண்ணும் போல வேலியிடப்பட முடியாதவர்கள். ஜீவநதிகளைப்போல வற்றாத சக்தியுடையவர்கள், முடிப்பார்கள், தொடங்குவார்கள், மரிப்பார்கள், பிறப்பார்கள், வருஷத்தின் பருவகாலங்களைப்போல”! “மரபுவழி, மரபு அல்லாத வழி - இந்த இரண்டையும் மாறிமாறிப் பயன்படுத்தும் போது பிறக்கும் உத்திகள் பல. இந்த இரண்டின் சேர்க்கையும் முடிவற்ற வட்டங்களாகிச் சுற்றி வருகின்றன. யார் அவற்றைப் பயன்படுத்தித் தீர்ப்பது”. (சன் சூ- போர்க்கலை நூலில்)

விடுதலைப்புலிகள் மரபு வழிப் போர் முறைக்குத் திரும்பிவிட்டார்கள், இனி அவர்களால் குறுகிய பகுதிகளில் இருந்து வெற்றிகரமாகத் தாக்க முடியாது என்று சிங்கள ராணுவ ஆய்வாளர்கள் கணித்தனர். “புலிகள் மீண்டும் கொரில்லாப் போர்முறைக்குத் திரும்புவார்கள், அதனால், இனி அவர்களால் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுத்தக்க வைக்கமுடியாது” என்றும் அவர்கள் ஆரூடம் சொன்னார்கள்.

புலிகள் மரபு மற்றும் மரபில்லாத வழி ஆகிய இரண்டையும் இணைத்துப் புதிய புதிய முறைகளில் சண்டையிடுகின்றனர் என்பதை மார்ச் மாதத் தொடக்க நிகழ்வுகள் அறிவிக்கின்றன. முல்லைத் தீவு -புதுக்குடியிருப்பு களத்தைப் புலிகள் பல்வேறு பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளனர்.

ராணுவம் கைப்பற்றிவிட்டதாக அறிவித்த சாலை, விசுவமடு, தேவிபுரம், கிளிநொச்சி, யாழ் குடாவிலுள்ள பளை, பலாலி ஆகிய பகுதிகள் அனைத்தும் புலிகளின் தளங்களாகியுள்ளன. தேவிபுரம், கிளிநொச்சி ஆகிய இடங்களிலுள்ள பீரங்கித்தளங்களைக் கைப்பற்றிய புலிகள் அத்தளங்களிலிருந்த எறிகணைகளை, எடுத்து படையினர் இருக்கும் திசை நோக்கி சுட்டிருக்கின்றனர்

தேவிபுரம் பீரங்கித் தளத்தில் ஆயிரம் எறிகணைகள் கிளிநொச்சி பீரங்கித்தளத்தில் இரண்டாயிரம் எறிகணைகள் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த எறிகணைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சுட்டு அழித்துள்ளனர் புலிகள்.

இதன்வழி, 1. கைப்பற்றிய ஆயுதங்களை எடுத்துச் செல்வதன் இடர்கள் குறைக்கப்பட்டன. 2. படையினரை நோக்கி ஏறத்தாழ 3000 எறிகணைகள் சுடப்பட்டதால், பெருமளவிலான படையினர் பலியாகியிருப்பர். 3. இத்தாக்குதல்களில் ஈடுபட்டது கேணல் கிட்டு பீரங்கிப் படையணி. புலிகள் தமது பீரங்கிகளை எடுத்துச் செல்லாமலேயே பீர்ங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

மேற்கண்ட தாக்குதல் களின்போது புலிகள் முன்னேறித் தாக்கிய பகுதிகளிலிருந்து ராணுவம் அகற்றப்பட்டுவிட்டது. இப்பகுதிகளை இராணுவத்தினரால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெறும் கொரில்லா தாக்குதல்களில் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்த முடியாது.

புலிகள் இப்போது பிடிக்கும் பகுதிகளைத் தக்க வைத்துக்கொண்டு, மேலும் முன்னேறிச் செல்லும் நிலையில் உள்ளனர் என்று நம்பலாம். “எதிரி ஏறிய பிறகு ஏணியை அகற்றிவிடு!” (36 தந்திரங்கள் தொகுப்பிலிருந்து) இது மிகவும் முகாமையான போர்த் தந்திர விதி. ஏ9 சாலைதான் சிங்களப் படையினர் ஏறி வந்த ஏணி. அந்த ஏணியை இப்போது புலிகள் அகற்றத் தொடங்கியுள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் ஏ9 சாலையில் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதல் களையடுத்து, அச்சாலையில் ராணுவப் போக்குவரத்து உடனடியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

“வாரத்திற்கு மூன்று முறை மட்டும் அதுவும் முன்னறிவிக்கப்படாத நேரத்தில் மட்டும் ராணுவப் போக்குவரத்து நடக்கும்” என்று படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது சிங்களப் படையினருக்குப் பேரதிர்ச்சியைத் தரும் அறிவிப்பு. ஏனெனில், வன்னியைச் சுற்றியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினருக்கான வழங்கு வழி ஏ9 சாலை தான்.

கடல்வழியைக் கடற்புலிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பிப்ரவரி மாதம் இறுதி வாரம் கிபிர் விமானம் வன்னிப் பகுதியில் வீழ்த்தப்பட்டதிலிருந்து, படையினருக்கு வான் வழிப் போக்குவரத்தும் இடர் நிறைந்ததாகியுள்ளது. கிளிநொச்சி, விசுவமடு, பளை, பலாலி வரை புலிகள் நிலைகொண்டிருப்பதால், படையி னருக்கான உணவு, மருந்து, ஆயுதம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கான வழங்கு வழிகள் அனைத்தும் அபாயத்தில் சிக்கியுள்ளன.

பழமையான போர்த் தந்திரங்களில் 48 விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளீயிட்டார் ராபர்ட் கிரீன் எனும் பிரிட்டானியர். அந்த 48 விதிகளிலிருந்து இப்போதைய ஈழக் களமுனைக்குப் பொருத்தமான இரண்டைக் குறிப்பிடுகிறேன். இவற்றிற்கான விளக்கங்களை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

“எதிரியை உங்களைத் தேடி வரச் செய்யுங்கள் - தேவையானால் தூண்டில் போடுங்கள். தற்காப்பு என்ற பெயரில் உங்களைச் சுற்றி பாதுகாவல் கோட்டைகளைக் கட்டிவிடாதீர்கள்! அது உங்களைத் தனிமைப்படுத்திவிடும் - ஆபத்தானது!”

ம.செந்தமிழன்

Comments