சிறைக்கதவுகள் திறக்கட்டும்




பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் சீமான், ம.தி.மு.க.வைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் ஆகியோர் இன்று தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Seeman இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்பு சேரும் உரிமை முதலான பல உரிமைகள் அடிப்படை உரிமைகள் என அழைக்கப்படுகின்றன. எனினும் இவற்றைத் தவறான முறையில் பயன்படுத்தி, எவரேனும் குற்றமிழைத்தால், அவர்கள் மீது அரசு வழக்குத் தொடரவும், குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் அவர்களைத் தண்டிக்கவும், இந்தியக் குற்றவியல் சட்டத்தில் இடமுள்ளது. அப்போது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும், குற்றம் சாற்றப் பெற்றோர் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்பதும் குற்றவியல் சட்ட நடைமுறை.

ஆண்டுகள் பலவாக நம்மை அடக்கியாண்ட வெளளையர்கள், விசாரணைகள் ஏதுமின்றித் தமக்கு வேண்டாதவர்களைச் சிறையில் அடைக்கச் சில தடுப்புக் காவல் சட்டங்களைக் கொண்டு வந்தனர். ஜனநாயகவாதிகள் அவற்றைத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் என அழைத்தனர். கூட்டங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கும் சட்டம், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்டது. 1919 இல் நடைமுறைக்கு வந்த ரெளலட் சட்டம் பற்றி அனைவரும் அறிவோம். அதனை அண்ணல் காந்தியார் தலைமையில் நாடே எதிர்த்தது.

விடுதலை பெற்ற இந்தியாயிலும், ரெளலட் சட்டத்தின் மறு பதிப்புகள் வந்து கொண்டே இருந்தன. 1948 ஆம் ஆண்டில், ‘ஆந்திர மாநிலப் பாதுகாப்புச் சீர்குலைவு ஒழிப்புச் சட்டம்’, அந்த வகையிலான முதல் கறுப்புச் சட்டம் எனலாம். அது தொடங்கி இன்று வரை, அதனையொத்த பல அடக்குமுறைச் சட்டங்கள் வந்துவிட்டன. வந்தவை சில போனதும் உண்டு, போனவை சில வேறு பெயரில் மீண்டும் வந்ததும் உண்டு.

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என ஒன்று வந்தது. அதன் கீழ்தான், 1965 இல் கலைஞர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சட்டம் தான், பிறகு வேறு வேறு பெயர்களில், மிசா என்றும், தடா என்றும், பொடா என்றும் வடிவெடுத்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் 1980 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவும் ஒரு வகைத் தடுப்புக் காவல் சட்டம்தான். எந்த விசாரணையும் இல்லாமல் ஒருவரை ஓராண்டு காலம் சிறையில் வைக்கலாம் என்பதுதான் தே. பா. ச. இதில் பிணை கிடையாது. சிறையில் இருப்பவர்தான் வழக்குத் தொடுத்துக் தன்னைக் குற்றமற்றவர் என்று மெய்ப்பித்து வெளியில் வரவேண்டும். இல்லையேல், ஓராண்டுச் சிறைவாசம்தான்.

இதுபோன்ற சட்டங்களை ஜெயலலிதா போன்றவர்கள் பயன்படுத்துவதில் வியப்பு ஒன்றுமில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கலைஞர், தன் ஆட்சியில் இதனைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது. அப்படியானால், யார் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், அரசு நடவடிக்கையே எடுக்கக் கூடாதா என்னும் கேள்வியில் நியாயமில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று எப்போதும் நாம் சொல்லவில்லை. இந்தியக் குற்றவியல் சட்டத்திலேயே அதற்கான வழிவகைகள் இருக்கும்போது, இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நம் கேள்வி.

ஆபாசமாகப் பேசினால், அவதூறுகளை அள்ளி வீசினால், அவை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர என்ன தடை? சோனியா காந்தியைச் ‘சேலை கட்டிய முசோலினி’ என்று ஒருவர் பேசிவிட்டார் என்பது எப்படித் தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும்? ஜெயலலிதாவை ‘இட்லர்’ என்று நாம் வருணிக்கவில்லையா? அப்படி வருணித்து க. சுப்பு ஒரு நூலே எழுதி, அதனை நக்கீரன் வெளியிடவில்லையா? இவையெல்லாம் தலைவர்களின் மீதான விமர்சனங்கள். அரசியலில் இவற்றைவிடக் கடுமையான பல விமர்சனங்களை நாம் பார்த்திருக்கிறோம். இவை சரியா, தவறா என்பது வேறு. ஆனால், இவற்றிற்கும் தேசப் பாதுகாப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அடுத்தவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படுகிற வகையிலும், மக்களிடையே பெரும் அச்சத்தைக் கிளப்பும் வகையிலும் பேசினால், அங்கே தேசப் பாதுகாப்புக்கு ஊறு வரக்கூடும் என்று கருதலாம். வேடிக்கை என்னவென்றால், அதுபோலப் பேசியவர்கள் மீதெல்லாம் அந்தச் சட்டம் பாயவில்லை என்பதுதான் இன்னொரு பக்க வேதனை.

2003 ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், எல்லோருக்கும் திரிசூலம் வழங்கி, தொகாடியா பேசிய பேச்சு எவ்வளவு ஆபத்தானது. திரிசூலத்தின் ஒரு முனை இஸ்லாமியர்களைக் கொல்லவும், இன்னொரு முனை கிறித்துவர்களைக் கொல்லவும், மூன்றாவது முனை போலியான மதச் சார்பின்மை பேசுபவர்களைக் கொல்லவும் பயன்பட வேண்டும் என்று பேசிய அந்தக் கொலைகாரன் மீது, இன்று வரை சாதாரண வழக்குக் கூடத் தொடுக்கப்படவில்லை.

2007 ஆம் ஆண்டு, ராம்விலாஸ் வேதாந்தி என்னும் ‘கிரிமினல்’ சாமியார், “இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும். நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்” என்று பார்ப்பனத் திமிரோடு பேசினான். அவன் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லயே? சதாரணச் சட்டத்தின் கீழ் கூட இன்று வரை தண்டிக்கப்படவில்லையே. ஆனால் அவன் உருவ பொம்மையை எரித்த, 11 பேர் மீது இன்று வரை புதுவையில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. என்ன நியாயம் இது? இந்த தேசம் யாரைப் பாதுகாக்கிறது, யாரைத் தண்டிக்கிறது?

ராம்விலாஸ் வேதாந்தி, 1984 முதல் விசுவ இந்துப் பரிஷத்தின் தலைமைக் குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் உறுப்பினன். 1990 முதல் ராம ஜன்ம பூமி டிரஸ்ட் உறுப்பினன். உ.பி. மாநிலம், பிரதாப்கர் தொகுதியிலிருந்து பா. ஜ. க. சார்பில் தேரந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினன். இவ்வளவு இருந்தும், அவன் யாரென்றே தங்களுக்குத் தெரியாது என்று ‘யோக்கியர்கள்’ இல. கணேசனும், இராம. கோபாலனும் கூறினர். ஆனால், 2006 தேர்தலில், தி. மு.க - காங்கிரஸ் கூட்டணிக்காக ஊர் ஊராகப் போய்ப் பேசிய திரைப்பட இயக்குனர் சீமானைக் கைது செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியது. கலைஞரும் இணங்கினார்.

காங்கிரஸ் தலைவர்கள், தங்களின் உள்கட்சிச் சண்டைக்கும் கூட, இது போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அதிகாரத்தைக் கொடுத்துப் பார்த்தால் தெரியும், தங்கபாலுவை, ஈவிகேஎஸ் இளங்கோவனும், இளங்கோவனைச் சிதம்பரமும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்து விடுவார்கள்.

தேர்தலில் தனியாய் நின்று பார்த்தால், தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு என்ன என்பது தெரிந்துவிடும். பீகாரில், மூன்று இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கேட்பது ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்று அறிவித்த லாலுவிற்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம் போலிருக்கிறது. கழகங்களின் தயவால் தமிழ்நாட்டில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இனியாவது திருந்த வேண்டும்.

ஜனநாயகவாதியான கலைஞர், தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை ஒரு நாளும் தன் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. சிறைக்கதவுகள் திறக்கட்டும்! அடக்குமுறைச் சட்டங்கள் அழியட்டும்!

சிறையில் சீமானோடு ஒரு சந்திப்பு

ஈழ மக்களுக்காகப் பொதுக்கூட்டத்தில் பேசிய தோழர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், பொருளாளர் அன்புத் தென்னரசன், தலைமைக்குழு உறுப்பினர் எழில். இளங்கோவன், சென்னை மாவட்டச் செயலாளர் மு. மாறன் ஆகியோர் கடந்த 26.03.2009 ஆம் நாள் சிறையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது தோழர் லோகு ஐயப்பன் உள்ளிட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

சுப.வீரபாண்டியன்

Comments