தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள். இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.

தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

- வி.சபேசன் (01.04.09)

Comments