விடுதலைப் புலிகளே தமிழர் பிரதிநிதிகள்: நியூயோர்க் நகர மும்முனை ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் முழக்கம்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் அலுவலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களுடன் நேற்று முடிவுக்கு வந்தது.

நியூயோர்க் மாநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டம் மூன்று நாடுகளின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதிகளின் அலுவலகங்களின் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் திருமதி திலகவதி இராமகிருஸ்ணன், கமலநாதன் வேலுப்பிள்ளை, மணிவண்ணன் ஏகாம்பரம், ஜூலியன் வசந்தராஜா மற்றும் விஜயராஜ் அருளானந்தம் ஆகிய ஐந்து தமிழர்கள் கலந்து கொண்டனர்.







முதலாவதாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் விடுதலைப் புலிகளே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் எனவும் ஈழத் தமிழர்கள் ஒருபோதும் இந்தியாவின் எதிரிகள் அல்லர், மாறாக நண்பர்களே எனவும் முழக்கமிட்டனர்.

இதன் முடிவில் இந்திய தூதரக பிரதிநிதியிடம் மேற்கூறிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்ட மனுவும் கையளிக்கப்பட்டது.







இதனைத் தொடர்ந்து, மெக்சிக்கோ தூதரகம் முன்பாக திரண்ட தமிழர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் முகமாக மெக்சிக்கோவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நன்றி தெரிவித்ததோடு, பாதுகாப்புச் சபையின் புதிய தலைமையை ஏற்கும் மெக்சிக்கோவிடம் இந்தப் பிரேரணையை மீண்டும் கொண்டு வரும்படியும் கோரினர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் மெக்சிக்கோ தூதுவராக பிரதிநிதிகளிடம் மனு கையளிக்கப்பட்டது. அப்போது, சட்டவாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மெக்சிக்கோ ஊடகவியலாளர்களுக்கும் யூனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் ஈழத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, உண்ணாநிலை மேடை அமைந்திருந்த ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் அலுவலகம் முன்பாக அணிவகுத்த மக்கள், கலாநிதி சூசன் றைஸ் அம்மையாரின் செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதோடு, அவரினதும், ஹிலறி கிளிண்டன் அம்மைரினதும், அதிபர் பராக் ஒபாமா போன்றோரினதும் உதவிகளையும் நாடி முழக்கம் எழுப்பினர்.

Comments