உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

காலத்தால் செய்தற்கரிய பேருதவியை நீங்கள் நல்குகின்றீர்கள். தமிழ் உலகம் என்றென்றும் உங்களுக்கு நன்றி கூறி நிற்கும். உலகத்தால் காக்க முடியாத எமது மக்களை நீங்கள் காத்து தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் என்றும் வாழ்வீர்கள் என்று கனடிய தமிழ் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை கனடிய தமிழ் பட்டதாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்னை ஜெயலலிதாவிற்கு,

கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் பணிவான அன்பு வணக்கங்கள்

ஈழத்தமிழர் துயர்கண்டு வெடித்த உங்கள் உணர்வு கண்டு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல்.

ஈழத்திலும் தாய் தமிழகத்திலும் உள்ள எட்டு கோடித் தமிழர்களின் வாழ்க்கையில் உங்கள் பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது.

கடவுள் கூடக் கைவிட்ட ஈழத்தமிழருக்கு உங்கள் அன்புக்கரங்கள் நம்பிக்கையூட்டி நிற்கின்றது.

ஒவ்வொரு தாய் தமிழக உறவுகளுக்கும் ஈழத்தமிழரின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள்.

உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழீழ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக நிற்கின்றீர்கள்.

ஈழத்தமிழராகிய எமக்கு உங்கள் சொல்லின் மேல் அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதைச் சொல்லும் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள்.

மேலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாகவே இதுவரை காலமும் வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் பதவிக்காலத்தில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் தம் வாழ்க்கையை வளம்படுத்த உதவினீர்கள்.

எங்கள் அனைவர்க்கும் "ஈழத்தை அமைப்பேன்" என்னும் உங்கள் கணீர் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எம்மக்கள் பட்ட சொல்லொனா துயரத்திற்கு விடிவாக உங்கள் வாக்கு ஒலிக்கிறது.

"காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது"

எனும் வள்ளுவர் வாக்குக்கேற்ப காலத்தால் செய்தற்கரிய பேருதவியை நல்கி நிற்கின்றீர்கள். உங்களை தமிழ் உலகம் காலம் உள்ள வரை நன்றி கூறி நிற்கும். இந்த உலகத்தால் காக்க முடியாத லட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காத்து தாய்மையின் முழு வடிவமாய் தமிழர் வரலாற்றில் என்றும் வாழ்வீர்கள்.

உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
பணிவன்புடன்

கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகள் அமைப்பு - கனடா.

Comments