தமிழர்களை சிறிது சிறிதாக கொல்வதற்கு சிறிலங்கா பட்டினியை உருவாக்கியிருக்கின்றது: விடுதலைப் புலிகளின் பரப்புரைப் பேச்சாளர்

வன்னியில் உள்ள தமிழ் மக்களை சிறிது சிறிதாக கொல்வதற்கு பசி பட்டினியை ஏற்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசாங்கம், அந்த மக்களை உடனடியாகக் கொலை செய்ய ஆட்லறி எறிகணை மற்றும் வான்குண்டு வீச்சுகளை நடத்துகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

கனடிய தமிழ் வானொலிக்கு (CTR) நேற்று வெள்ளிக்கிழமை அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மூலம் தொடர்ந்தும் மக்களை கொன்று குவிக்கும் நடவடிக்கையிலேயே அது ஈடுபட்டுள்ளது. அதனைவிட தற்போது பெருமளவிலான மக்கள் இராணுவத்தின் நேரடியான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். மக்கள் பகுதிகளைக் குறிவைத்தே இத்தகைய துப்பாக்கிச் சூட்டினை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 தொடக்கம் 75 பேர் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்; 100 தொடக்கம் 150 வரையான மக்கள் படுகாயமடைந்து வருகின்றனர்.

வன்னியில் பங்குனி மாத வெய்யிலின் கொடூரம் மிகக் கடுமையாக இருக்கும். அந்த வெய்யிலுக்கு மத்தியில் கூடார விரிப்பிற்கு கீழ் வசிப்பது என்பது பாண் போறணைக்குள் வசிப்பதற்கு ஒப்பானதாகவே உள்ளது. அந்தளவு கொடூரமான அவலங்களுக்கு மத்தியிலேயே எமது மக்கள் இங்குள்ளனர்.

அதேநேரம் அடிப்படை வசதிகள் கூட இன்றியும் அந்த மக்கள் அவலப்படுகின்றனர். அரசாங்கம் பொருட்களை வன்னிக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறது. மூன்று மாதத்திற்கு பின்னரே அரசு மரக்கறியை அனுப்பியிருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று அந்த மரக்கறிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகின்றனர்.

எனினும் அவை பழுதான நிலையிலேயே காணப்படுகின்றன. அரசாங்கம் வேண்டும் என்றே கழிவுப்பொருட்களை இங்கு அனுப்பியிருக்கின்றது. அரசாங்கம் அனுப்பிய கரட் அழுகிய நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காணப்படுகின்றது.

அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களும் இங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த உணவுப் பொருட்களை அரசாங்கம் தானே அனுப்புவதாக கூறினாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பே இதனை அரசு ஊடாக அனுப்புகின்றது. சிறிலங்கா அரசாங்கம் அதற்கான அனுமதியைத்தான் கொடுக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கம் இங்குள்ள மக்களை சிறிது சிறிதாக கொல்வதற்காக இத்தகைய பசி பட்டினியை ஏற்படுத்திக்கொண்டு, அதேநேரம் உடனடியாக கொல்வதற்கு ஆட்லறி எறிகணை, வான்குண்டு வீச்சுக்களை நடத்துகின்றது.

இதனைவிட குழந்தைகளுக்கு போசாக்கான உணவு கிடைக்காத காரணத்தால் அவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி வகைகள் இங்கு இல்லை. அரசாங்கத்தால் அனுப்பப்படும் மரக்கறிகளும் அழுகிய நிலையிலேயே வருகின்றன. இதனால் முக்கியமாக சிறுவர்களும் முதியவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு உணவே இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. மீன் உண்பவர்களுக்கு மீன் கிடைப்பதும் குறைவு.

ஏனெனில் கடற்றொழிலுக்குச் செல்பவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொலை செய்து கொண்டிருக்கின்றது.

புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில்தான் மக்கள் செறிவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதிகளை பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கம் பிரகடனப்படுத்தியதால்தான் மக்கள் அந்த பகுதிகளில் வசிக்கின்றனர். ஆனால் அந்த இடங்கள் பாதுகாப்பு வலயமாக என்றுமே இருந்தது கிடையாது. தொடரச்சியான எறிகணைத் தாக்குதல்களும் வான்குண்டு வீச்சுகளும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களும் அந்த பகுதிகளில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம், கியூடெக், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகிய அமைப்புகள்தான் இங்குள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற வளங்களை வைத்துக்கொண்டு செய்து வருகின்றனர்.

புதுமாத்தளன் பகுதியில் உள்ள பாடசாலையிலேயே மக்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அங்கு சத்திர சிகிச்சை செய்வதற்குரிய வசதிகளோ அல்லது மருத்துவமனைக்குரிய ஏனைய வசதிகளோ இல்லை. பாடசாலை வகுப்பறைகளில் வைத்துதான் இந்த மருத்துவ சிகிச்சைகளை இங்குள்ள மருத்துவர்கள் தங்களை அர்ப்பணித்த நிலையில் வழங்கி வருகின்றனர்.

பாடசாலைக் கட்டடத்தில் இயங்கும் மருத்துவமனையை பார்வையிட்ட செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். எந்த வசதியும் இன்றி நிலத்தில் வைத்து நோயாளர்கள் பராமரிக்கப்படுகின்றனர். ஒரு கட்டில் கூட அங்கு இல்லை. மருந்துகள் ஏதுமற்ற நிலையிலேயே அங்கு மருத்துவ வசதிகள் இடம்பெறுகின்றன.

அதனைவிட சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான எந்தவித மருந்துகளும் இல்லாத நிலை நீடிக்கின்றது.

எனினும் மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர்.

களமுனையில் எங்களுடைய போராளிகள் மிகக்கடுமையாக போரிட்டுக் கொண்டு இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர். பல நாடுகளின் ஆதரவுடன் போர் நடத்திக் கொண்டிருக்கின்ற சிறிலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பில் எங்களுடைய போராளிகளின் வீரமிகு - அர்ப்பணிப்புள்ள - போராட்டத்தை சகிக்க முடியாமல் உள்ளனர். பெருமளவான இராணுவத்தினரை அவர்கள் இழந்து வருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கம் இன்று பரந்துபட்ட பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இளந்திரையன் குறித்தும் பொய்ப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இளந்திரையன் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேறொரு பணியை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்றார்.

எங்களுடைய போராட்டத்தை மலினப்படுத்துவதற்காக- கொச்சைப்படுத்துவதற்காக- இழிவுபடுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விசமப் பிரசாரங்களை தொடர்ச்சியாக பல இடங்களிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

களமுனைப் போர், பரப்புரைப் போர் என்ற இரண்டு விடயங்களில் புலம்பெயர் மக்கள் பரப்புரைப் போரில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போது அதை மழுங்கடிப்பதற்காக- மக்கள் மனங்களில் ஒருவித சோர்வை ஏற்படுத்துவதற்காக- விசமத்தனமான பிரசாரத்தையும், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காக பிரதேச வாதங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

புலம்பெயர் மக்கள் இன்று நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் அனைத்துலக மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுவருகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு புலம்பெயர் மக்கள் செய்கின்ற போராட்டங்களும் பரப்புரைகளும்தான் காரணம். இந்த நடவடிக்கையை புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாகவும் இன்னும் உத்வேகத்துடனும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் தமிழீழ விடுதலையை விரைவாக அமைப்பதற்கு உதவியாக இருக்கும்.

புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாக தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டு எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை தத்தமது நாடுகளில் உள்ள அரச பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

சீனா, இந்தியா, ஈரான் உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கிக் கொண்டு பின்பலமாக நிற்கின்றன. இந்த சக்திகளுக்கு எதிராகத்தான் விடுதலைப் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா அரசு தனித்து நின்று இந்த போரை நடத்துமாக இருந்தால் அதனை நாங்கள் என்றோ வென்றிருப்போம்.

தமிழ் மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியான தமிழீழத்தை அடைவதற்கான வழிவகைகளை தேசியத் தலைவர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். நிச்சயமாக தமிழீழம் அடைவோம் என்றார் அவர்.

Comments