மூதறிஞர், முத்தமிழ்வித்தகர் தமிழக முதல்வர் கலைஞருக்கு மூன்றுபக்கமும் முற்றுகைக்குட்பட்ட முல்லைத்தீவிலிருக்கும் முந்நூறாயிரம்; தமிழர்களின் சார்பாய் கரிகாலன் எழுதுவது!
சுடுகலன்கள் துப்பும் சுவாலைகளுகக்கிடையிலும், வானமேறிவந்து வட்டமிட்டு வானூர்திகள் போடும் வகைதொகையற்ற குண்டுகளுக்குக் கீழும், மூன்று பக்கமும் எமைச்சூழ்ந்து நிக்கும் அரசபடைகள் முடுக்கிவிடும் எறிகணைகள், மூசிவரும் சிதறல்களுக்கு மத்தியிலும், வெடிகளால் வெட்டுண்டு, விழுப்புண்ணுடனும், வீழ்ந்து வித்தாகிப் போன எம்மவர்களுக்கிடையில், நாம் இப்பொழுது வரையும் உயிருடன் மட்டுமே இருக்கிறோம்.
முதுகிலேற்பட்ட முற்றிய வலிக்கு முள்ளந்தண்டில் தங்களுக்குச் சமீபத்தில் சத்திரசிகிச்சை செய்ததினால் தாங்களும் சற்று உடல்நலக்குறைவிலேயே இருப்பீர்களென ஊகிக்கின்றேன். எனினும் சிகிச்சையின் பலனால் நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன் எனத்தாங்கள் கூறியிருக்கிறீரகள். அவ்வாறே நாமும் மறுபிறவியெடுப்பதற்க்காக, மாணிக்கவாசக சுவாமிகள் கூறியது போல ~~கல்லாய், மனிதராய், பறவையாய், பாம்பாகி பற்றைகளுக்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் தவள்ந்தும் ஊர்ந்தும் உருக்குலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை உலகத்தமிழத் தலைவரென அடையாளப்படுத்திக்கொள்ளும் உங்களுக்கு எடுத்துரைக்கினறேன். எது எவ்வாறாயினும், தங்களின் உடல் நலத்திற்கும் ஈழத்தமிழ்ச்சாதி எங்களின் உயிருக்கும் எப்போதும்; எமையாளும் ஈசனிடம் இறைஞ்சுகின்றேன்.
புவியியல், கேந்திர அமைப்பின்படி இலங்கையும் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் தமிழீழமும் பன்னெடுங்காலமாக தொடர்புபட்டது என்பதும் தொண்மைவாய்ந்ததும் வெளிப்படையுண்மை. முன்னர் ஒன்றாக இருந்த தமிழகமும் தமிழீழமும் கடற்கோள்களால் பிரிக்கப்பட்டதாகவும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் கூறப்பட்ட ஏழ்தெங்கம் என்ற நாடுதான் கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்றும் குறிப்பிடுகிறார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். இன்னும் சிலரோ அழிந்து போன பகுறொளியாற்றும், பன்மலையடக்கமும், அதற்க்குமுன் அழிந்த குமரி, மெமோரியக்கண்டத்தின் எஞ்சிய பகுதிதான் இன்றைய ஈழம் எனவும் அங்கேதான் தமிழ் மொழிதோற்றம் பெற்றதாகவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழகமும் தமிழீழமும் தாய், சேய்யினைப் போல் தொப்பூள்கொடி மூலமான உறவுவின்பால் தொடர்புடையது என்பது மட்டும் உண்மையின் உண்மை என்பது உங்களுக்கு நானுரைப்பது முறையல்ல.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி"
அவ்வாறான தமிழினத்திற்க்கும் தமிழ்மொழிக்கும் தொண்மை வாய்ந்த வரலாறு உண்டு. ஐம்பெரும் காப்பியங்களும் எண்ணற்ற இலக்கியங்களையும் பலநூறாயிரம் பாடல்களையும் தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பும் தமிழ்மொழிக்கு மட்டுமே உடையது. மானத்திற்க்குப் பெயரெடுத்தது கவரிமானினத்தினைப் போல, தன்மானத்திற்க்காக தம்முயிரையே துறந்து சரித்திரம் படைத்தவர்கள் எம்முன்னோர். முழு இந்தியாவையும் நல்லாட்சி செய்து தமெக்கென்று தனிவரலாறு எழுதிவைத்த தமிழரசர்களுள், சேரன் இரும்பொறை செயற்கரிய செயல் வீரன். போரிலே சிறைப்பட்ட போர்க்கைதிக்கு தன் காவலனால் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கத் தாமதமானது தன்னாட்சிக்கும் தன்மானத்திற்குமேற்பட்ட இழுக்கென நினைத்து, பாட்டெழுதி வைத்துவிட்டு தன்னுயிரைத் துறந்தான் மாமன்னன் சேரமான் கணைக்கால இரும்பொறை. தன்னுடைய தீர்ப்புத் தவறாகிவிட்டதே என்பதையுணர்ந்து தன்னுயிரையே துறந்தவன் நீதிவழுவா நெடுவரசன் பாண்டிய நெடுஞ்செழியன். தவறுதலாகத் தேர்ச்சக்கரத்தினால் பசுக்கன்றினைக் கொன்றதற்காக, தன்மகனையே தேர்ச்சக்கரத்தில் நசித்து மரணதண்டனையை நிறைவேற்றினான் மனுநீதிகண்டசோழன். அந்த தமிழரசனின் நீதியும் நேர்மையும் அவனது செங்கோலின் செம்மையையே செப்புகின்றது, அஃகுதே தமிழ்மொழியிலுண்டான பற்றினால் அதை வளர்க்க சங்கம் நிறுவித் தமிழ்வளர்தனர் என்தை முத்தமிழ்வித்தகரான தங்களுக்கு முந்தைய நாள் முளைவிட்ட நான் உரைக்க முயல்வதற்கு மன்னிப்பீகளாக.
"தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்று சால்புறக் கண்ட தமிழ்நாடு"
இமயத்தை வென்று புலிக்கொடி நாட்டிய பெருவீரன் பெருவளத்தான் கரிகாலன்;, பாசனத்திற்காக கல்லணையையும் கட்டி வைத்தான். சேரன் செங்குட்டுவனோ கற்பின் நாயகி கண்ணகிக்கு கற்சிலை எழுப்பினான். தரையில் படர்ந்து கிடந்த முல்லைக் கொடிக்கு தன்தேரையே கொடுத்து, அக்கொடியினை தேரிலே படரவைத்தான்; பண்டைய தமிழ்மன்னன் பாரி வள்ளல். மழை மேகம் கழைகட்ட, மகிழ்ச்சியால் தோகைவிரித்தாடிய மயிலுக்கு, குளிரினால் தான் கொடு கொடுங்கி நடுங்குகின்றது என்றெண்ணி, தான் தோளிலே தரித்திருந்த தன் சால்வையினைக் களைந்து போர்த்தினான் பெருமன்னன் காரி. இவ்வாறு தமிழனுக்கு பரிவும், கொடையும், வீரமும், மானமும்; உயிரோடும் உடலோடும் ஒட்டிய மரபணு போன்றதொன்றாகும்;. வீரத்தினைப் பாட புறநாநூற்றினை விட வேறு எந்தக் காப்பியமும் இங்கில்லை. இந்திய தேசத்திற்க்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசுக்கு எதிராக இந்தியர்கள் எவ்வாறன பேராட்டங்கள் நடத்தினார்கள் என்பதும், அச்சுதந்திரத்திற்க்காக நேதாஜி சுபாஸ் சந்திரபோஷின் தலைமையினாலான ஆயுதப்படையில் நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தமிழர்கள்; என்பதினையும் எவராலும் மறுக்கமுடியாது.
கப்பலோட்டிய தமிழன்பா.வோ.சிதம்பரபிள்ளையை அறியாதவர்களா எவர் உளர்; அவர் வீரம் உலகறியாததா? அத்தைகைய புறநாநூற்றின் தமிழனின வீரத்தினைப் புதுப்பித்துப் புரட்டிக்காட்டி, புதுச்சரிதம் படைக்கும் களம்; இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழீழத்தில் முனைப்புப் பெற்று வருவது நீங்களறிவீர்கள். அன்றை நாளில் தங்களது பிறந்தநாளில் நிதிதிரட்டி தமிழீழத்தில் போராடும் குழுவினலுக்குக் கொடுத்து, தமிழீழம் அமைவதற்க்கான தங்களின் ஆதரவைத் தெரிவித்ததும் வரலாறு, அனைவரும் அறிந்தது. இந்திய இராணுவத்துருப்புக்கள் அமைதிப்படையென்ற போர்வையில் தமிழீழத்திற்க்குள் நுழைந்து, தமிழர்களுக்குப் புரிந்த அழிவையும், தமிழர்களுக்கெதிராக செய்த அடாவடித்தனத்தினையும் எதிர்தவர் நீங்கள். ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியொன்பதாமாண்டு; ஐப்பசி மாதத்தில் இந்திய இராணுவத் துருப்புக்கள் தமிழீழத்தை விட்டு திரும்பப் பெறப்பட்டபோது, அவர்களை வரவேற்க்கும் நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டேன் எனப் பகிரங்கமாக அறிவித்து, அந்நிகழ்வை புறக்கணித்ததும் வரலாறான ஒன்று தான். அதைத் தமிழீழத்தமிழர் உயிருள்ளவரை மறந்துகொள்ள மாட்டார்கள். அதன்பின் ஆயிரத்து தொழாயிரத்து தொன்னூற்றியொன்றில் நடந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலைப்பழியினை இந்தியஉளவுத்துறையினரும் இந்தியமுக்கியஸ்தர்ளும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளிகளின் தலையில் கட்டிவிட்டதும், அதன்விளைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் ஆதரவாக இருக்கின்றீர்களெனக் குற்றஞ்சுமத்தி தங்கள் தலைமையிலான தமிழக அரசினை நடுவனரசு கலைத்து குடியாரசுத் தலைவரின் ஆட்சியில் கொண்டுவந்த வரலாற்றினையும் யார் மறப்பார்கள். அத்தோடு அண்மையில் இடம்பெயர்ந்த ஈழத்தமிழருக்கென நிதி திரட்டி நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்தீர்கள், கூடவே அப்பொருட்கள் நேரடியக எமைவந்து சேரும்படி செய்தீரகள். எத்தனை காலமாயினும் இவற்றையெல்லாம் நாம் மறந்திடோம். செய்நன்றி மறப்பது செந்தமிழர் பரம்பரையிலேயில்லை.. தமிழரின் நன்றியுணர்வுமிக்க நற்பண்டிகைதான் தைப்பொங்கல் என்பதை எவர் மறுத்துரைப்பர். இவையெல்லாவற்றிக்கும் மேலாக பாரிலே தமிளினத்தின் தொன்மை, உண்மையினைப் பறைசாற்றி, அன்னைத் தமிழ்மொழியை செம்மொழியாக்கிய செயற்கரிய செயலுக்கு இத்தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றி பாராட்டக் கடப்பாடுடையது. வான ஓடையில் நிலவுள்ள வரையிலும், நீலமுள்ள கடல்நீருள்ள வரையிலும் காத்திரமான இக்கைங்கரியத்திற்க்கு கலைஞரை காலமெல்லாம் நினைவுகூருவோம்.
"பேரினைச் சிங்களன் மேவினன் ஈழம்..." என சிங்களம் ஈழத்தில் ஊடுருவிச் செய்யும் கொடுமையினையும், கொடூரத்தினையும் இராஜ இராஜசோழன் தன் தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத்தின் வன்முறை கூடிக்கொண்டதே தவிர எள்ளளவும் குறைந்ததாகவில்லை. ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தாறு, ஐம்பத்தெட்டு, அறுபத்தொன்று, எழுபத்திநான்கு, எழுபத்தொன்பது, எண்பத்தொன்று, எண்பத்துமூன்று ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழினஅழிப்பிற்க்கான கலவரங்களையும், அதனால் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துடமையும், சிங்கள வன்முறையாளர்களால் காவுகொள்ளப்பட்ட தமிழுயிர்களும், தாங்களறியாததல்ல. சேர, சோழ, பாணடிய மன்னர்கள் பாதம் பட்டு பண்பட்ட மண்ணிணை சிங்களப்பண்டா பற்றியெரிக்கிறான், பாரதமும் அதற்க்கு எண்ணெயூற்றுகின்றது. இந்தியாவினதும், இதர வல்லரசுகளின் ஆயுத ஆளணி உதவிகளோடு எமது இல்லங்களை அழித்து, எமை இடம்பெயரவைத்து இனப்படுகொலை செய்து, தமிழினத்தை அழித்தொழிக்கும்; இராஜ பக்சேவை மானிட மாட்சிமை போசுவோர் எவராவது ஒருவர் இன்றுவரை கண்டிக்கவில்லை என்பது எமக்கெல்லோருக்கும் கவலையளிப்பதாகவே இருக்கிறது.
திம்பு முதல் ஜப்பானின் ஹக்கோன் வரையான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாங்கள் அறிந்தது, அது இந்திய நடுவனரசின் மௌனச்சம்மதத்துடன் தான் நடந்தது என்பதும் உலகநாடுகளறிந்த உண்மை. உருப்படியான எந்த ஒரு தீர்வையும் வழங்க நினைக்காத சிங்களம், காரணங்களேதும் அன்றி பேச்சுக்களைக் குழப்பி அந்தத் தவறினையும் விடுதலைப் புலிகளிகளின் தலையில் கட்டி தவறான பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டது. தனித்தமிழீழம் அமைந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும், எதிர்காலத்தில் தமிழகமும் தமிழீழமும் இணைந்து அகண்ட தமிழ்நாடு உருவாக்கப்படும் எனச்சொல்லி இலங்கையரசு இந்தியாவை பயமுறுத்தி வருகிறது. இதனாலோ, அன்றித் தமிழ்த்தேசியத்திக்கு ஒரு தனி நாடு உருவாக்க விரும்பாமலோ இந்தியா எம் விடுதலையை, விடாமுயற்ச்சியோடு எதிர்த்தும் வருகிறது. இதன் விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்போம் என்ற வீனான, முடியாத முயற்ச்சியில் உலக வல்லரசுகள் ஒன்று சேர்ந்து இன்று இலங்கை அரசை உசார்படுத்தி, உலக இராணுவத்தளபதிள் வந்து இலங்கை இராணுவத்திற்க்கு பயிற்றுவித்து சக்தியூட்டி, உந்துகின்றனர். அனாலும் அவர்கள் நினைப்பதைச் சாதிக்க முடியவில்லை என்ற சங்கடம் அவர்களுக்கும் உண்டு. எது எவ்வாறாயினும் எங்களின் கொள்கையினையும் வெட்கையினையும் எவராலும் அழித்துவிட முடியாதென்பது என் ஆனித்தரமான கருத்து.
"தந்தை போயினர், தாயாரும் போயினர்; தாமும் போவர்..."
என்றுபாடினர் ஞானக்குழந்தை திருஞானசம்மந்தர். அவ்வாறுதான் இப்பொழுது எம்மினமும் ஒவ்வொருவராக போய்க்கொண்டிருக்கிறோம். சிலவேளைகளில் சிலர் ஒன்றாகவும் போகின்றனர். தாயிற்க்கு முன் மகனும், மகனுக்கு அருகில் அம்மாவும், பாலுக்காக பருதவிக்கும் பாலகரைவிட்டு பத்தினியும், பருவமங்கையரும், சில படுகிழடுகளம், பாசக்கயயிறின்றி பயணமாகிப் போகின்றனரே. புத்தபகவானின்; புத்திமிக்க புத்திரர்களின் செயலினால் கொள்ளி வைத்து குடமுடைக்காமலும், சாம்பலெடுத்து சமுத்திரத்திலிட்டு சடங்கு முடிக்காமலும், அன்றி திருச்சபையில் திருப்பலி ஒப்புக்கொடுக்காமலும் புனித இனத்தின் புதல்வர்களின் புகளுடல்கள் புதைக்கப்படுகின்றது. கடல் நீரைக் கடனெடுத்து எம் கண்களினூடக அழுது தீர்த்தாலும் எம் கவலையும் கரைந்துவிடாது, எமைவிட்டு கடந்துவிடாது. இடம்மாறி இருந்தாலும், புலம்பெயர்ந்து வாழந்தாலும் எம்முறவுகளின் உணர்ச்சியும், எம் நினைவுடனேயே என்றும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.
ஆரியத்திறக்கும் திராவிடத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடும், யுத்தமும், இன்று நேற்றல்ல என்பதை தாங்களறிவீர்கள்.. ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்தைந்தாம் ஆண்டு தமிழகத்திலே ஆரியர்கள் இந்தியினைத் திணித்தபோது ஆர்ப்பரித்தெழுந்து எதிர்த்தது தமிழகம். அரசியல் இலாபமற்ற தன்னலமற்ற தமிழ்த் தலைவர் அண்ணா போன்றோர் அன்றதனை எதிர்த்துப் போராடி வென்றார். அன்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு விரோதமாகவே செயற்ப்பட்டது, ஆனால் அன்று தமிழ்த் தலைவர்களும் தமிழகத்து மக்களும் எத்தனை தியாகங்கள், எத்தனை போராட்டங்கள் முன்னெடுத்து அதனை முறியடித்தனர். தீக்குளித்துத் தியாகம் செய்தவர்களும், தெருவிலிறங்கிப் போராடினார்கள். இன்றும் இவர்களைத் தியாகிகள் எனத் தமிழகம் பூசிக்கின்றது. "இந்தியாவிலே அதிகமாக இருப்பது காகங்கள், அதற்காக காகத்தினை இந்தியாவின் தேசிய பறவையாக்கவில்லையே, இந்தியாவின் தேசிய பறவை மயில் தானே, அதேபோல இந்தியாவில் இந்திபேசுபவர்கள்; அதிகமாக இருப்பதால் தேசிய இனமான தமிழர்களுக்கு இந்தியைத் திணிப்பது முறையல்ல, இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்" என அன்று பேரறிஞர் அண்ணா ஆனித்தரமாகவும் அறிவுபூர்மான அர்த்தத்திலும் கூறினார். இவையெல்லாம் தங்களுக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில் தாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தவர் ஆதலால் அனைத்தும் அறிவீர்கள். அவ்வாறு தான் இலங்கையிலும் பெரும்பான்மைச் சிங்களம், சிறுபான்மை தமிழினத்தினை அடக்கியாள மூர்க்கத்துடன் முனைப்படுகிறது. அன்று அரசியல் இலாபமற்ற தன்னலமற்ற போராட்டத்தினால் வெற்றி கொண்டது தமிழினம். ஆனால் இன்று ஏனோ ஒரே குரலில் போராட முடியாமலிருக்கிறது. ஆனால் அனறு போல் இன்றும் தமிழுணர்வுள்ள தலைவர்களும், வழக்குரைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் எனப்பன்முகமான அனைத்ததுத் தமிழகத்து மக்களும் தெருவிலிறங்கிப் போராடுகிறார்கள். எட்டுக்கும் மேலானவர்கள் தீக்குளித்துத் தியாகம் செய்திருக்கிறார்கள் ஆனாலும் இதனையெதையும் மத்திய, மாநில அரசுகள் மதித்ததாகவோ இல்லை. மாறாக இதையெல்லாவற்றையும் மழிங்கடித்து மறைப்பதற்காகவே மத்திய, மாநில அரசுகள்; முனைப்புடன் செயல்படுகிறது.
"அன்பும் சிவமும் இரெண்டென்பர் அறிவிலார், அன்பும் சிவமும் ஒன்றென்பர்..."
என்று திருமந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார். அவ்வாறானதொரு ஆத்மானந்தமான உண்மைதான் ஈழத்தமிழர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்த வரலாறு. ஈழத்தமிழர்கள் வேறு, தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு என்பது அறிவற்ற, அரசியல் வரலாற்றுச் சூனியமானகருத்து. முப்பது வருடங்களுக்கு மேலாக மரபு வழியில் ஒரு போராட்டம் முனைப்புப் பெற்று முன்னெடுப்பதாயின் சாதாரன பொது மக்களின் தயவின்றி முடியாத காரியமாகும். மக்களுக்காக, மக்களின் உரிமைக்காக, மக்களின் விடுதலைக்காக மக்களோடு இருந்து போராடும் புலிகளை, தமிழ்மக்களிடமிருந்து பிரிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அந்த வீண் முயற்ச்சியில் தான் இலங்கை, இந்திய அரசுகள் கூட்டாக ஈடுபட்டு வருகின்றர். புலிகள் உருவானதும, ஆயுதமேந்திய போராட்டம் ஆரம்பமானதும் அதன் அபரிமிதமான வளர்ச்சியும், அன்றிலின்று இன்றுவரை அரசியலிலுள்ள அனைவரும் அறிவர். ஆக எந்த சக்தியாலும் எம்முரமேறிய உணர்வினையும், எமது உரிமைக்கான போராட்டத்தினையும் இலகுவாக அழித்து விட முடியாதென்பது என்கருத்து.
கடந்த வருடம் ஐப்பசி மாதம் பதின்நான்காம் நாள் தங்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கைப்பிரச்சனையில் நடுவனரசு தலையிட்டு பதின்நான்கு நாட்களில் போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். கூடவே அனைத்துக்கட்சி சாரபாக ஐப்பசி மாதம் இருபத்தியோராம் நாள் தமிழகத்தில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இதை நடுவனரசு நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் தமிழத்தின் பன்னிரண்டு நடுவன் அமைச்சர்கள் உட்பட, நாற்பது நாடாளமன்ற உறுப்பினர்களையும் திரும்பப் பெறப்படுவார்கள் என்பதும் அன்றைய தீர்மானம். ஆனால் இருபத்தியோராம் நாள் கனமழை பொழிந்த காரத்தினால், போராட்டம் இருபத்திநான்காம் நாள் நடத்தப்பட்டது. வரலாறு காணாதளவிற்க்கு மழையின் மத்தியிலும் இச்சங்கிலிப் போராட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து செங்கல்பட்டு வரை நீண்டது. மகிழூந்திலிருந்து கொண்டே இப்போராட்டத்தினைத் தாங்கள் பார்த்துப் பூரித்தோடு தமிழர்களின் உணர்வினைப் புரிந்துகொண்டீர்கள். ஆனால் நடுவனரசு தலையிட்டு இன்றுவரை போர் நிறுத்தம் செய்யவில்லை. போர் நிறுத்தத்தினைப் பற்றித்தங்கள் திருவாய் திறந்து ஒருவார்த்தையேனும் பேசவில்லை, நாற்பது நாடாளமன்ற உறுப்பினர்களைத் திரும்பாப் பெறப்படவுமில்லை. மாறாக கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வீரப்பமுகலி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போரினை ஆதரிக்கின்றது என்றும், கூடவே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வெகுவிரைவில் கைதுசெய்து இந்தியாவிற்க்கு அனுப்பி வைக்கவேண்டும் என இலங்கை அரசினைக் கோருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜியும் அவரின் செயலர் சிவசங்கர் மேனனும் இலங்கைச் சிங்கள இராணுவத்தளபதி சரத்பென்சேகாவுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கிக் கௌரவித்ததுடன், கூடவே இருபத்திமூன்று வருடப் பிரச்சினையை போர் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் தீர்ப்புக்கூறி திருப்திப்படுகின்றனர். இது ஏன் என்று அன்றிலிருந்து இன்று வரையிலும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதை ஆதரிததோ இல்லை பிரஸ்தாபிததோ தாங்கள் எந்தக் கருத்தினையும் அன்றிலிருந்து இன்றுவரை வெளியிடவுமில்லை. ஆக மௌனம் பாதிச் சம்மதந்தானே? அதன் பின்னும் தமிழக சட்டசபையில் இன்று உடனடிப் போர்நிறுத்தம் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மார்கழி நாலாம் நாள் அனைத்துக் கட்சித்தலைவர்கள் புடைசூழ பிரதமரைப் பார்க்க புதுடில்லி எழுந்தருளினீர்கள்;. அங்கு பிரதமருடன் பேசும்போதும் தங்கபாலுவும் தமிழ் உணர்வுள்ள தலைவர்களும் பெரிய தில்லுமுல்லுப்பட்டனர்கள் என்பது தங்கள் கண்கண்டது. தங்களுக்கு என்ன வாக்குறுதி தந்தார்; பாரதப்பிரதமர்? உடனடியாக பிரணாப்பை இலங்கைக்கு அணுப்புவதாக உத்தமர் உறுதியளித்தார். ஆனால் மதி கெட்ட மன்மோகன் சிங் செய்தது என்ன? யாருக்காக இந்த பித்தலாட்டம், யாருக்காக இந்த தீர்மானம்? யாருக்காக இந்த பிதற்றல்கள் என்று எதையும் எவராலும் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. அனால் ஆளும் காங்கிரஸ் கட்சி போரினை ஆதரிக்கின்றது என்பது மட்டும் வெளிப்படை உண்மை. ஆக அந்த யுத்தத்திற்க்கு மிண்டுகொடக்கும் நடுவனரசில் தாங்களும் பங்கெடுத்து வருவதால் தாங்களும் அதை ஆதரிக்கிறீரகள் என்பதும் சற்றேனும் சந்தேகமில்லாத சத்தியம்.
ஐந்தாவது தடவையாகவும் தமிழகத்தின் முதல்வராக தங்களை முற்படுத்திய தமிழகத் தமிழர்களுக்கும் தாங்கள் தந்த மதிப்பும் உபகாரமும் என்ன? அன்றொருநாள் சட்டசபையில் "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை" என்றுரைத்தீர்கள். ஆனால் உண்மையில் கன்னியாகுமரி மட்டுமல்ல, தமிழகத்தின் கரையோரமெல்லமே தங்களுக்கு தொல்லைதான். பொதுவாக எங்கெல்லாம் கடற்கரையோரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மீனவர்களிருப்பார்கள். தமிழகத்தில் எங்கெல்லாம் மீனவர்களிருக்கிறார்களே, அங்கெல்லாம் தங்களுக்கு தொல்லைதான். தமிழர்களையழித்து தம் இறையாணமையைக் காக்கும் இலங்கைச்சிங்கள அரசின் படைகளால் தான் தங்களுக்கிந்தத் தலைவலி. இற்றைவரைக்கும் தொழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்;களின் உயிர்கள் இலங்கையின் இறையாணமைக்குப் பலியிட்டுப் படைக்கப்பட்டுவிட்டது. தங்களை தமிழகத் தலைவராய் அவைக்கு அனுப்பிய தமிழகத்து தமிழர்களைக் பாதுகாப்பதுதான் தங்களின் தலையாய கடமையாக இருக்குமென நான் நினைக்கிறேன். இதுபற்றி எண்ணற்ற தடவைகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு, மனுக்கொடுத்து, நீதி கேட்டதற்க்கும் போராட்டங்கள் நடத்திப் புரியவைத்ததற்க்குத் தாங்கள் கூறிய, ஆலோசனை, தீர்வு மீனவர்களெல்லோருக்கும் நடுவனரசால் அடையாள அட்டை வழங்கப்படுமெனவும், அதைக்கடல் செல்லும் மீனவர்களெல்லாம் எடுத்துச்சென்று, எந்தப்படையினராவது அண்மிக்கும்போதோ இல்லை நெருங்கிச்சோதனை செய்யும்; போதோ காண்பிக்கப்படவேண்டுமென்பது தங்கள் எண்ணம். அனால் எப்படைகளாவது அண்மித்தோ, அன்றி நெருங்கிவந்து சோதனைசெய்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று சுடுகணைகளால் துளாவும் போது இவ்வடையாள அட்டைகளை எவ்வாறு அவர்கள் காண்பிப்பது என்பதைத் தாங்கள் எடுத்துரைக்கவில்லையே, சுடுகணைகளிலிருந்து வரும்தணல்களுக்கு கண்களுண்டா? இவ்வடையாள அட்டைகளைக்காண்பதற்க்கு; இப்பிரச்சினைக்கு இதனைவிட வேறுதீர்வில்லையா? உலகத்தின் எப்பாகத்திலும், எந்நாட்டிலும் மூக்கைநுளைத்து முண்டியடிக்கும் இந்திய உளவுத் துறையினரிடமும் இக்கடல் ஏழைகளின் துயர்துடைக்க எவ்வளியுமில்லையா? ஐயா மூதறிஞரே, தங்களின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பாமரமக்களான மீனவரைக்காப்பாற்ற் அச்சட்டத்தில எங்காவது ஒரு இடமில்லையா? தயவுகூர்ந்து மீனவத் தமிழனையும் மனிதனாய் நினைத்து நிரந்தரத்தீர்வு ஒன்றை நிலைநிறுத்துவீராக.
பராசக்தி திரைப்படத்திற்க்கு தாங்கள் எழுதிய தணல்பறக்கும், காத்திரமான வசனத்தினால் தங்கள் தமிழுரைக்கும், கவிதைக்கும் தங்கள்பால் ஈர்க்கப்பட்டவன் நான். பராசக்தி முதல் பாசக்கிளிகள், அதையும் தாண்டி உளியின் ஓசை வரையா திரைப்படங்களுக்கு உங்களின் கதையமைப்பையும், அதன் வார்த்தைப் பிரயோகத்தினையும், வரிகளின் வைராக்கியத்தையும் வார்த்தைக்கு வார்த்தை இன்றுவரை இரசித்திருக்கிறேன். கூடவே கலைஞர் தொலைக்காட்சியிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை பத்து மணிக்குத் தோண்றி தமிழருவி கவிதை முழக்கஞ் செய்கின்றீன்கள். இந்த முதிர்ந்த வயதிலும் மிக அழகாக, ஆனித்தரமாகத் தமிழை உச்சரித்துரைக்கின்றீரகள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு..ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த போது தங்களுக்கே உரித்தான அறிவுடை அழகிய செந்தமிழில் இரங்கல் செய்தியினைத் தெரிவித்து தமிழன் என்ற உணர்வினைத் தெரிவித்தீர்கள். ஆக திரைப்படத்திற்க்கு வசனமெழுவதிலும், தொலைக்காட்சியில் கவிதை முழங்குவதுடன் தங்களின் தமிழ்ச்சேவை முடிந்து விடுமா? தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்க்கவி படித்ததுடனும், ஈழத்தமிழருக்கென நிதி திரட்டி நிவாரணம் வழங்குவதடனும் தமிழீழத்தமிழர்களுக்காகத் தாங்கள் செய்யும் இனவுணர்வான சேவையும், தமிழ்த்தலைவரின் பங்களிப்பும் முற்றுப்பெற்றிடுமா? எட்டுக்கும் மேற்பட்டோர் தீக்குளித்து தியாகஞ்செய்து மடிந்த போதிலும் தங்களுக்கு எழாத இனவுணர்வு, எப்பொழுதுதான் எழுந்து எம்கதை கேட்பீரோ, எம்மல்லல் துடைப்ரோ? எண்பத்தைந்து அகவையைக் கடந்த அரும்பெரும் அரசியற்தலைவரின் தூரநோக்குச்சிந்தனை செயலாக்கம் இதுதானா? செல்வாக்கு மிக்க செந்தமிழ்ச் சேனைத்தலைவனின் செயல்வீரம் செத்துவிட்டதா? உலகத்தின் கண்களைப்போல உங்கள் கண்களும் குருடாகி விட்டதா? சர்வதேசத்தின் செவிகளைப்போல் தங்களின் செவிகளும் செவிடாகிவிட்டதா?
நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க பாரததேசம் இப்போது தயாராகின்றது. "பழைய கிழவி, கதவைத்திறவடி" என்பது போல தங்கள் தலைமையிலான திராவிட முனனேற்றக் கழகம், மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கத் தயாராகி விட்டீர்களென செய்திகள் வெளியாகியிருக்கின்றது. ஈழத்தமிழினினத்தை அழிக்க இலங்கை பேரினவாத்தின் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு உறுதுணையாகவும், உற்ற தோழியாகவும் விளங்கும் திருமதி சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முனனேற்றக் கழகம் கைகோர்த்து நிற்க்குமானால், தங்கள் திராவிட முனனேற்றக் கழகத்திற்கு தமிழகத்து தமிழர்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள் எனபதில் எவருக்கும் ஐயமில்லை. தமிழ்விரோதக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்க்கு பூர்வீக நடவெடிக்கையாக தமிழகத்தினையும் தங்கள் அரசு தயார்படுத்திவருகிறது. முன்னேற்பாடாக ஈழத்தமிழரின் விடயத்தை அரசியலாக்கினால் சட்டம் பாயுமெனவும் பயமுறுத்தி வருகிறீர்கள். இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம், என்பதற்க்குப் போட்டியாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பென ஒரு அமைப்பினையும் தாங்கள் அமைத்து, உணர்வுள்ள தமிழ்த்தலைவர்களை கொச்சப்படுத்தி கூடவே அத்தலைவர்களை சலிப்படையும் செயற்பாடுகளை செய்துவருகிறீர்கள். ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக அவர்கள் போராட்டங்களை நடத்த, ரீதியில் சுதந்திரமாக அவர்கள் போராட்டங்களை நடத்த, அதிகாரத்தினைப் பயன்படுத்தி அடக்குகிறீர்கள். தமிழுணர்வாளர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து சிறுமைப்படுத்துகிறீரகள். திருமணவீட்டில் தலைவாரும் சீப்பு எடுத்தொழித்தால், அத்திருமணம் நின்றுவிடுமென நீங்கள் நினைக்கிறீர்கள். அவ்வாறான சிந்தனையிலே தேசிய பாதுகாப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி சீமானையும், மணியும் சிறைப்படுத்தனிர்கள். தங்களினரசு காங்கிரஸ் கட்சியினரின் உத்தரவிற்கினங்கி செயற்படுவது வெளிப்படையுண்மை. ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்தைந்தாம் ஆண்டு தமிழகத்திலே இந்திஎதிர்ப்புப் போராட்டத்திற்க்கும் இந்தக்காங்கிரஸ் கட்சி இன்றுபோல் அன்றும் விரோதமாகவே வினைப்பட்டது. இந்தத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தினைப் பாராபட்சமாகப் பாய்ச்சி, தேர்தல்காலத்தில் தமிழுணர்வாளர்களைச் சிறைப்படுத்தினால், தமிழ்விரோதக்கட்சியான காங்கிரஸ் கட்சிவெண்றிடலாமென தவறாகச் சிந்திக்கின்றீர்கள். தவறு, இதுமுற்றிலும் தவறான சிந்தனையும் செயற்பாடு, ஏனெனில் தேர்தலைச் சந்திப்பதும், தேர்தலில் வாக்களிக்கப்போவதும் தமிழகத்து தமிழ்மக்கள். எவரெவர் எதனைப் போதித்தாலும், தங்கள் மனதிலும், தங்கள் எண்ணத்திலும், சிந்தனையிலும் உள்ளததைத்தான் தமிழ் மக்களை பிரதிபலப்பார்கள். இப்பொழுது எவ்வாறு மனநிலையுள்ளதோ, அதனைத்தான் அவர்கள் தேர்தலில் தீர்த்துக்கொள்வார்கள். ஆக இவ்வாறான வீண்முயற்ச்சிகளில் தங்கள் தலைமையிலான திராவிட முனனேற்றக் கழகமும், தங்களின் அரசும் ஈடுபடாமல் இருப்பது ஆரோக்கியமானதாகவிருக்குமென நானினைக்கிறேன். உங்களின் கண்களைத் திறந்து உலகத்தின் கண்களையும் திறக்க வழிசெய்வீரகளாக, தங்களின் செவிகளை கூர்மைப்படுத்தி எம்குரலை செவிமடுத்து, சர்வதேசத்தின் செவிகளுக்கு எம் செய்திகளைக் கொண்டு சென்று சேர்ப்பீர்களாக. அற்பசுகத்திற்க்காக துரோகஞ்செய்த தமிழீழத்துக் கருணாவா அல்லது, பதவினைப் பெருட்படுத்தாது தமிழர்களுக்கு உதவும் தமிழகத்து முதல்வர் கருணாநிதியா எனத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
அல்லல்பட்டு அடவிகளில் அலையும் ஈழத்மிழினத்திற்க்கு ஆற்றவேண்டிய ஆக்கபூர்வமான முயற்ச்சியினைத் தங்கள் செலவாக்கினையும், அதிகாரத்தினைப்பயன்படுத்தி ஆவணை செய்வீகளாக. அத்தோடு நாம் அடையப்போகும் சுதந்திர நாடான தமிழீழத்தினையும், அதனைப் பெற்றுக்கொள்ளப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கிகரித்து புனித வரலாற்றுப் புத்தகத்தில் தங்கள் பெருமைமிக்க பெயரினையும் பதிவு செய்யுங்கள். இப்புனித பிரகடனத்தினை தாங்கள் பங்கெடுப்பீர்களாயின்;, உண்மையான உலகத்தமிழ்த் தலைவரென உமையுணர்ந்து, உலகத்தமிழினமும், உருவாகும் தமிழீழமும் உயிருள்ளவரை, இவ்வுலகமுள்ளவரை உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசிற்க்கும் நன்றிக்கடனும் விசுவாசமானவர்களாகவும் இருப்போம் என்பதை உறுதியளிக்கின்றேன். சென்னை முதல் செந்தமிழ் நாடாம் கன்னியாக்குமரி வரையுள்ள தமிழ்க்குடிமக்களைக் கட்டியாளும் கனவானே உம் கண் திறந்து, எம்துயர் கண்டு அதைத்துடைத்து, உலகத்து மாந்தரைப்போல் நாமும், நம்தமிழும் வாழ வகை செய்வீராக. வாழ்நாள் சாதனையாளன் என்ற வரம்மிக்க விருதினைப்பெற்ற வித்தகரே, அறிவுபூர்வமாக தூரநோக்கோடு சிந்தித்துச் செயற்ப்பட்டு பெற்ற விருதிற்க்கு பெருமை சேர்ப்பீர்களென வேண்டிக்கொள்கிறேன். தங்களின் இவ்வரியநடவெடிக்கைகள் ஏதிரிலிகளாக்கப்பட்ட எம்தமிழினத்தின் விடிவிற்க்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள்; வெற்றிக்கும் வழிவகுக்கும் என்பது என் கருத்து. காங்கிரஸ் கட்சியுடன் கூட்ணி வைத்து வரலாற்றுத் தவறினைப் புரியாது அகிலம் வியக்கும் அரசியல் தலைவனென அடையாளப்படுத்தி, இனமானத்தமிழன் எனறுணர்ந்து ஈழத்தமிழனுக்கு ஆற்றவேண்டிய ஆக்கபூர்வமான, அபரிமிதமான செயற்பாட்டினை செய்வீர்களாக.
கல்லெறிய சிதறிக்கலையும் காக்கைகள் கூட்டமல்ல நாம், கண்டம்விட்டுக்கண்டம்பாயும் கழுகுகளுமல்ல...
எறிகணையுடன் எக்கணை தாக்கி எத்துயர் வரினும், எம்முயிர் போயினும் எம்மண்ணை விட்டு எங்கும் ஏகிடோம்...
தாக்குதைக் கண்டு தாவும் மந்திக்கூட்டமல்ல நாம், தாவா மானத்தமிழ்ப் புலிக்கூட்டம் எப்போதும் மண்டியிடோம்...
உயிர் தந்த உத்தமரே, உடல் தந்த வித்தகரே, உம்வழிநின்று உரிமை மீட்போம், உம்மீது சத்தியம்...
விலையற்ற இவ்வுயிர் நிலையற்ற இவ்வுடலைவிட்டு நீங்கும் வரை, நில்லாது நம்போர்...
செங்குருதி சிந்தி, எம் குற்றுயிர் போயினும், குறையாது எம்வீரம் குன்றாது கொண்ட கொள்கை...
செற்றவர் மீதினில் சத்தியம் செய்கின்றோம், உமைப்போல் போரிட்டு செத்துப் போவோமே தவிர செருப்பாய் மிதிபடோம்.
நன்றி வணக்கம்,
மீண்டுமொரு மடலில் சந்திப்போம்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
என்றும் பிரியமுடன் தாயகக்கனவுடன்,
தமிழீழத்திலிருந்து கவே. கரிகாலன்.
Comments