விருதுநகரில் அதிமுக, மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்த காங்கிரஸ் அரசின் போக்கு, தீராத மின்வெட்டு ஆகியவை மக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. என்னைக் கைது செய்யத் திட்டம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், அரசின் திட்டம் என்னவெனத் தெரியவில்லை.
ஒருவேளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வரலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. எதையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
நான் பேசியதில் உறுதியாக இருக்கிறேன். பேசி விட்டு மறுக்கும் இயல்பு எனக்குக் கிடையாது. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.
1962-ம் ஆண்டில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா, "பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்று கூறினார்.
ஈழத் தமிழர் பிரச்னைக்காக இதுவரை 12 பேர் தீக்குளித்து விட்டனர். இத்தகைய உணர்வு இளைஞர்களை பொங்கியெழச் செய்யும் என்ற அடிப்படையில் பேசினேன். அதனால், இறையாண்மைக்கு எதிரான பேச்சு என வழக்குப் பதிவாகியுள்ளது.
ஒரு வைகோவை கைது செய்து சிறையில் அடைத்தால், ஓராயிரம் வைகோக்கள் இத் தொகுதியில் சுற்றி வருவார்கள்.
ஜெயலலிதா முடிவில் மத்திய அரசு: மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி உறுதி. தேர்தல் முடிவுக்குப் பின்பு, இந்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக அவர் திகழ்வார் என்பது உறுதி.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊர்களுக்கும் என்னால் இம்முறை வர இயலாது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு அனைத்து ஊர்களுக்கும் வருவேன். உங்கள் ஆதரவோடு இந்திய நாடாளுமன்றம் செல்வேன் என நம்புகிறேன் என்றார் வைகோ.
Comments