இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் முல்லைத்தீவு கரையோரத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கான உணவையும் ஏனைய மனிதாபிமான உதவிப்பொருட்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து தடுத்து வருவதனால் அங்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு வாழும் 40 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 165 ஆயிரம் மக்களும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2 ஆம் நாளில் இருந்து உணவு விநியோகத்தை அரசு தடுத்து வருகின்றது.
கடந்த 11 ஆம் நாளில் இருந்து உள்ளூர் அதிகாரிகள் உலர் உணவுப்பொருட்களை பயன்படுத்தி மக்களின் பட்டினி அவலத்தை குறைப்பதற்கு முனைந்து வருகின்றனர்.
பிரதேச செயலக தகவல்களின் பிரகாரம் மார்ச் மாதத்தில் 1,050 மெற்றிக் தொன் உணவுப் போருட்களே வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், வன்னிப் பகுதிக்கு தேவையான உணவின் அளவு 4,950 மெற்றிக் தொன்களாகும்.
வன்னிப் பகுதிக்கு அனைத்துலக மனிதாபிமான உதவி அமைப்புக்களை தடைசெய்துள்ள அரசு உலக உணவுத்திட்ட அமைப்பினையும் திட்டமிட்ட முறையில் தடுத்து வருகின்றது. இங்கு தோன்றியுள்ள மனிதப்பேரவலம் தொடர்பாக வெளியுலகத்திற்கு தகவல்கள் செல்வதை தடுக்கும் நோக்கத்துடன் அனைத்துலக ஊடகவியலாளர்களையும் அரசு தடுத்து வருகின்றது.
கடல் பகுதியின் ஊடாகவே உணவு விநியோகம் மேற்கொள்ளப்படும் ஒரு நிலை இங்கு காணப்படுகின்ற போதும் அரசு அதனை கடந்த சில மாதங்களாக தடுத்து வருவதுடன், பீரங்கிகள் மூலம் தாக்குதல்களையும் மேற்கொண்டும் வருகின்றது.
அரசு இவ்வாறு உணவு மற்றும் மருந்து பொருட்களை தடுத்து வருவது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என்பதுடன் போர் குற்றமும் ஆகும்.
ஐ.நா.வும் அனைத்துலக சமூகமும் உணவும் மருந்தும் மக்களுக்கு சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஐ.நா. மனிதாபிமான கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுப்புவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments