"போர் விதிகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பாக அனைத்துலக விசாரணை அவசியம்": வலியுறுத்துகின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொதுமக்கள் செறிவாகவுள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது போர்க்காலச் சட்டங்கள் அரசாங்கப்படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மீறப்பட்டிருப்பது தொடர்பாக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சுட்டிக்காட்டியிருக்கின்றது.

"கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் அரச தலைவரின் செயலகத்தால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மைக்கால போர்களின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது" எனவும் நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

"கனரக ஆயுதப் பாவனை, வான்படைகளின் தாக்குதல் என்பன பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பதால் அவற்றின் பாவனையை நிறுத்துமாறு எமது பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என அரச தலைவரின் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவசிக்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வாறு கனரக ஆயுதங்களை சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருப்பதை அரச தலைவரின் செயலகம் ஒப்புக்கொள்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகின்றது.

"கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம் இறுதியாக தன்னுடைய அதிகாரபூர்வமான ஏமாற்று வேலையையும், கொடூரமான இராணுவ தந்திரோபாயத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

"ஐ.நா. பாதுகாப்புச் சபை சிறிலங்காவின் மணலில் தனது தலையைப் புதைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்வதுடன், இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ள துஷ்டபிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியமானதாகும்" எனவும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியிருக்கின்றார்.

அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஐ.நா.சபை உட்பட அனைத்துலக சமூகத்தினரால் கடந்த காலங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது, அதனை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம் தமது தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளன எனவும், பொதுமக்களின் இலக்குகளைத் தாம் தாக்குவதில்லை எனவும் தெரிவித்துவந்தது.

ஏப்ரல் 23 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், "பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் மிகவும் மெதுவாகவே மேற்கொண்டு வருகின்றோம். எமது படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் துப்பாக்கிகளையும், தனிப்பட்ட ஆயுதங்களையும் மட்டுமே பயன்படுத்துகின்றார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களையும், வான்வெளித் தாக்குதல்களையும் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள், படங்கள், செய்மதிப் படங்கள் உட்பட பல ஆதாரங்கள் உள்ளன. 2009 ஜனவரிக்குப் பின்னரான காலப்பகுதியில் சுமார் 6,400 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 13,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா.வின் அறிக்கை ஒன்றிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பல நாட்களாக உணவு இல்லாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், தற்போதும் அரசாங்கத்தின் 'வடிகட்டல்' (screening) நடவடிக்கைக்காக காத்திருக்கும் நிலையிலும் பாரிய உணவு, குடிநீர், இருப்பிட வசதியீனங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருக்கின்றது.

"அரசாங்கத்தின் இந்த 'வடிகட்டல்' மற்றும் பதிவுசெய்தல் நடைமுறைகளைத் தொடர்ந்தே 'நலன்புரி நிலையங்கள்' என அரசாங்கத்தால் தெரிவிக்கப்படும் தடுப்புக்காவல் முகாம்களுக்கு மாற்றப்பட்டு தடுத்துவைக்கப்படுவார்கள்" எனவும் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments