தமிழினப் அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்சில் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

கனடாவில்...

கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்

உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.

பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.

பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020

ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925

ஜேர்மனியில்...

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையைத் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜேர்மனி வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக இன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் தமிழினப் படுகொலையை உடன் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

எனவே யேர்மன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு எமது பலத்தை ஜேர்மனிய அரசிற்கு எடுத்துக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு: (49) 1633125311

பிரான்சில்...

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரான்சில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நேற்று திங்கட்கிழமை மாலையில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்றலில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தெரிய வருவதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் போர்நிறுத்தம் கோரி பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் வெளிவிவாகர அமைச்சின் முன்றலில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தி வருகின்றனர்.

பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Comments