உறுதியளிக்கும் வரை பிரித்தானிய நடாளுமன்றம் முன் தொடர் போராட்டம்: மகிந்தவின் இனப் படுகொலைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற அமர்வில் தற்போது கலந்து கொண்டிருக்கும் பிரித்தானிய அமைச்சர்கள் அல்லது உறுப்பினர்களில் எவராவது வெளியே வந்து தமது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வரை நாடாளுமன்ற முன்றலில் தொடர்ந்து இருக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து கிளர்ந்தெழுந்த மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.







தமிழ் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்னும் பலர் பிரித்தானியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் நாடாளுமன்ற முன்றலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தற்போது உள்நாட்டு விவகாரம் தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ் மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் நாடாளுமன்றத்தை சூழவுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய காவல்துறையினர் வாகனங்களை நடாளுமன்றத்திற்கு முன்பகுதியில் உள்ள வீதிகளை நோக்கி வரவிடாமல் வேறு வீதிகளினால் திருப்பி விடுகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
















Comments