இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து
மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ஈழத் தமிழரைப் பாதுகாக்க எந்த தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது வானூர்தி மூலமாகவும், பீரங்கிகள் மூலமாகவும் குண்டுகளை வீசி படுகொலை செய்து வந்த சிங்களப்படை தற்போது
பேரழிவை ஏற்படுத்தும் வேதியியல் ஆயுதங்களை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இத்தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 700-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பசீர் அகமது, தமிழருவி மணியன், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன், எழுத்தாளர் தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"கொல்லாதே...கொல்லாதே... ஈழத் தமிழரைக் கொல்லாதே"
"இந்திய அரசே... இந்திய அரசே... இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து"
"செய்யாதே... செய்யாதே... இந்திய அரசே சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யாதே"
என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு இந்தியா அளிக்கும் ஆயுத உதவியை
தடுத்து நிறுத்தக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரை:
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்
நடத்தப்படுகிறது.
விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் வாழும் பகுதியைச் சுற்றி வளைத்திருக்கிறோம். இன்னும் இரண்டு, மூன்று நாளில் அனைவரையும் அழித்துவிடுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார். அவ்வாறு தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்திய அரசும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்வது அம்பலமாகி விட்டது.
சிறிலங்கா அரசின் இனப் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும், உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன. ஆனால் இந்தியா மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தினோம். புதுடில்லி சென்று போராட்டம் நடத்தினோம்.
பா.ம.க. மற்றும் ம.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் முழுவதும் அவையை முடக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத சிறிலங்கா அரசு தற்போது தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட வேதியியல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
புதுக்குடியிருப்புப் போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படத்தை சிறிலங்கா பாதுகாப்புத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களைப் பார்த்தாலே அதில் உயிரிழந்த எவரும் குண்டுவீச்சில் இறக்கவில்லை, வேதி குண்டுகள் வீசப்பட்டதால் உடல் எரிந்து உயிரிழந்திருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1949 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி போரில் வேதி குண்டுகளை பயன்படுத்துவது குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் சிறிலங்கா அரசை மற்ற நாடுகள் கண்டிக்கின்றன.
இந்தியா மட்டும் கண்டிக்கவில்லை. இதற்குமுன் பல நாடுகளில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டித்த இந்திய அரசு இலங்கையில் பயன்படுத்தப்படுவதை
மட்டும் எதிர்க்க மறுக்கிறது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தமிழர்களைப் பாதுகாக்க அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக உள்ளோம்.
இலங்கை இனப்படுகொலையைத் தடுக்க பலரும் போராடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் கலைஞர் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வருன்கிறார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு மக்களிடையே ஆதரவு திரண்டதால், அதற்குப் போட்டியாக இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரணியைத் தொடங்கினார். இலங்கைப் படுகொலையைக் கண்டித்து நான் அறிக்கை விட்டதற்குப் பிறகு இவர் பிரதமருக்குத் தந்தியடிக்கச் சொல்கிறார்.
சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை நான் எழுதி அனுப்பிய பிறகு 10 நாட்களுக்கு மேலாக கிடப்பில் போட்டு நிறைவேற்றினீர்கள்.
புதுடில்லி சென்று போரை நிறுத்தும்படி பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று கூறினேன். அதன்படியே நீங்களும் வந்து பிரதமரைச் சந்தித்தீர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க நீங்களாக எதுவும் செய்யவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக மட்டுமே செயற்பட்டிருக்கிறீர்கள். நாங்கள் இன்று போராட்டம்
நடத்துவதால் நீங்கள் நாளை பேரணி அறிவித்திருக்கின்றீர்கள். முதலமைச்சர் கலைஞர் நினைத்திருந்தால் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
ஆனால், நீங்கள் அதை செய்யவில்லை. என்னால் கதை வசனமும், கடிதமும் மட்டும்தான் எழுத முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது, நான் ஒரு கையாலாகாதவன் என்று நீங்கள் கூறியிருக்கலாம். உங்களது தோல்வியை நீங்களே ஒப்புக்கொண்டு உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் இராமதாஸ்.
Comments