வன்னியில் இருந்து திருமலை வருவோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய பரிதாபம்: ஐ.சி.ஆர்.சியின் சத்திரசிகிச்சை நிபுணர் கவலை

முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பலருக்கு வெடிகுண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் அவயவங்களை துண்டிக்க வேண்டிய பரிதாபநிலை நிலவுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் ஹேர்மன் இதனைத் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உத்தியோகபூர்வத் தகவல் அறிக்கையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது. திருகோணமலைக்கு அழைத்து வரப்படும் இந்த நோயாளர்கள் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கேள்வி: புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளர்களின் நிலைமையை எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

பதில்: அவர்களது மருத்துவம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதைக் காண முடிகின்றது. புதுமாத்தளன் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அவர்கள் பணி புரியவேண்டிய மிகவும் கடினமான சூழ்நிலையை கருத்திற்கொள்ளும்போது மிகப் பெரிய உன்னதமான பணியை ஆற்றுகின்றனர்.
நடப்பதற்கு முடியாத நிலையில்....

எனினும், அப்பகுதியில் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், திருகோணமலைக்கு வரும் நோயாளிகள் மிகவும் களைப்படைந்தவர்களாகவும், பலவீனமானவர்களாகவும், நடப்பதற்குக்கூட முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

கேள்வி: புதுமாத்தளனிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடம் என்ன வகையான காயங்களைக் காண்கிறீர்கள்?

பதில்: வெடிகுண்டு சிதறிய காயங்கள் காரணமாக அனேகமானவர்களின் அவயங்களை அகற்றவேண்டியுள்ளது. உடலின் வேறு பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கும் சிகிச்சையளித்துள்ளேன்.

கேள்வி: புதுமாத்தளனில் பெரும் எண்ணிக்கையான நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் இருப்பதை கருத்திற்கொள்ளும்போது, அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?

பதில்: செஞ்சிலுவைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பலில் குறிப்பிட்டளவு இடமேயுள்ளதால், தேவைகளை அடிப்படையாக வைத்து யாரை முதலில் வெளியேற்றுவது என்பதை தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

புதுமாத்தளனில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதை தீர்மானிக்கிறோம். உள்ளூர் அதிகாரிகளின் இணக்கத்துடனேயே ஒவ்வொரு வெளியேற்றமும் இடம்பெறுகின்றது என்றார்.

Comments