வணங்கா மண்ணைத் தடுக்க தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை

வன்னியில் தொடரும் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வணங்கா மண் என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்படத் தயாராகியுள்ள அதேவேளையில், இந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தனது கடற்படையை விழிப்பு நிலையில் வைத்துள்ளது.

வன்னியில் போரின் கொடுமையாலும் பட்டிணியாலும் வாடிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உதவவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்தே உணவு மற்றும் அத்தியவாசிய மருந்துப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும், பொது அமைப்புக்களும் பெருமளவு நிவாரணப் பொருட்களை வன்னியில் உள்ள தமிழர்களுக்காகக் கொடுத்து உதவியுள்ளன.

நிவாரணப் பொருட்களைத் தாங்கிய இந்தக் கப்பலை வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசிடமிருந்து ஏற்பாட்டாளர்கள் இதுவரையில் பெற்றுக்கொள்ளாத போதிலும் கூட, இந்தப் பொருட்களை வன்னியில் உள்ள மக்களுக்கு அனுப்பிவைப்பதற்கான உடன்படிக்கை ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அர்ஜூனா எதிர்வீரசிங்கம்.

இந்தக் கப்பல் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்குள் வன்னியை நோக்கிய தமது பயணத்தை தொடங்கும் எனவும் தெரிவித்த அர்ஜூனா எதிர்வீரசிங்கம், கப்பல் எப்போது புறப்படும் என்ற நாளினை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

இதேவேளையில் மக்களுக்கான நிவாரண உதவி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்காக 2,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று வன்னியை நோக்கிப் புறப்படவிருக்கின்றது என கடற்படைக்குத் தகவல் தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தயாராகுமாறு கடற்படையினரை விழிப்பு நிலைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் கொழும்பில் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் சிறிலங்கா கடற்பகுதிக்குள் இந்தக் கப்பல் பிரவேசித்தால் அதன் மீது தாக்குதலை நடத்துமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்துவரும் நாட்களில் சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படை அதிகபட்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments