சென்னையில் சோனியாவை சந்திக்க உண்ணாவிரதப் பெண்கள் தீர்மானம்!

ஐந்து கட்டங்களாக நடைபெறும் இந்திய பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டவாக்களிப்பு கடந்தவாரம், நக்சலைட்டுகளின் தாக்குதலில் பதினெட்டுப்பேரின் உயிர்ப்பலியுடன் அரங்கேறி, அடுத்த கட்டத்துக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் மற்றைய மாநிலங்களைப் போன்று தமிழ் நாட்டிலும் ஆரம்பித்திருக்கும் நிலையில், தங்களது கட்சிகளின் எதிர்காலத் திட்டங்கள், கொள்கைகள், செயற்பாடுகளை கட்சித் தலைவர்கள் மக்களுக்கு விளக்காமல், தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது ஒருவர் புழுதிவாரி தூற்றுவது உச்சக் கட்டத்தில் நடக்கிறது. தேசிய ரீதியில் பிரதமர் வேட்பாளர்கள் எல்.கே.அத்வானியும் மன்மோகன்சிங்கும் வார்த்தைக் கணைகளால் தினஞ் சண்டை போட, மாநில அளவில் தமிழ்நாட்டில் அறிக்கைப்போரும் கவிதைக் கணையும் தினமும் மூண்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரசாரக் கூட்டங்களில் பரபரப்பு ஏற்படுத்தி, செதிகளில் இன்று முந்திரிக் கொட்டையாக முதன்மை வகிப்பது "காலணிக் கலாசாரம்தான்!'

நாடு முழுவதிலுமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 16இல் நடைபெற்ற போது பீஹார், ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸா ஆகிய நான்கு மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து தேர்தல் அதிகாரிகள், பத்து துணை நிலை இராணுவத்தினர் உட்பட 18 பேர் பலியானார்கள். இரண்டாம் கட்டத் தேர்தல் இம்மாதம் 23இலும், 3ஆம் கட்டம் 30இலும், 4ஆம் கட்டம் அடுத்த மாதம் 7 இலும், கடைசிக் கட்டத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த மாதம் 13இலும் நடக்கிறது. தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் கடந்த 17இல் ஆரம்பமான போதிலும் அதிகமான வேட்பாளர்கள் அட்டமி, நவமி பார்த்து நாளை முதல்தான் தாக்கல் செகிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது அடுத்த மாதம் 16ஆம் திகதிதான் தெரியவரும். என்றாலும் பிரதமர் வேட்பாளர்களாக அவரவர் கட்சி மகுடம் சூட்டிய பா.ஜ.க. அத்வானியும் காங்கிரஸ் மன்மோகன்சிங்கும் பிரசார கூட்டங்களில் தங்களது கூட்டணியின் திட்டங்கள் பற்றியெல்லாம் மக்களுக்கு விளக்குவதை முன் நிலைப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் கடும் சொற்போரில் களமிறங்கி வாக்காளப் பெருமக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறுகின்றனர். இதே நிலைதான் மற்றைய மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களின் கணைகள் இழிவாகவும் பண்பற்ற முறையிலும் சிதறுகின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றார்கள் என்று பொதுக் குற்றச்சாட்டைச் சுமத்தும் கலைஞர் கருணாநிதி, ராமதாஸ் மீது நேரடியாகவே சொல் அம்பு தொடுத்தார். ""ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் கடைசிவரை அமைச்சர் பதவி சுகம் அனுபவித்துவிட்டு கூட்டணிக்கு துரோகம் செதவர் ராமதாஸ். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அணுகுமுறை சரியல்ல என்று கூறி பதவியை இவர்கள் தூக்கி எறிந்திருந்தால் தமிழகம் நம்பியிருக்கும். ஆனால், ராமதாஸின் முக்கிய குறிக்கோள், ஆட்சியில் தி.மு.க. இருக்கக்கூடாது என்பதுதான்.' என்று அறிக்கைவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் மீது பார்வை திரும்பி, ""கம்யூனிஸம் எனக்குப் பிடிக்கும். கம்யூனிஸ்டுகள் அல்ல என்று கல்லில் எழுத்தால் செதுக்கி வைப்பேன்' என்று கவிதைக் கணை தொடுத்திருக்கிறார். இதற்குப் பதிலளித்த ராமதாஸ், ""துரோகி யார் என்பது மே 13இல் தெரிந்துவிடும்! 2002 ஏப்ரலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றுகையில் இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைதுசெய வேண்டும் என்று கோரியபோது, இந்த வீராதி வீரர்கள் சூராதி சூரர்கள் எந்த நாட்டில் இருந்தார்கள் என்று கருணாநிதி கேட்கிறார். சட்டசபையில் அன்று 19 பா.ம.க.உறுப்பினர்களும் கறுப்புச் சட்டை அணிந்து ஜெயலலிதா கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செதனர். இவர்களுடன் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்களும் வெளியேறியிருந்தனர். ஆனால், தி.மு.க.உறுப்பினர்கள் வாபொத்தி மௌனம் காத்து நடுநிலை காத்தனர். தமிழக அரசு நிர்வாகம் இன்று ஸ்தம்பித்து விட்டது' என்று குரல்கொடுத்து, நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை கையிலெடுத்து தெருத்தெருவாக பிரசாரம் செவோம் என்று மார் தட்டினார்.

ஈழத் தமிழர் பிரச்சினை, தேர்தலில் எடுபடாது என்று காங்கிரஸும் தி.மு.க.வும் கணித்தபோதிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இப்பிரச்சினையில் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க ஈழத் தமிழருக்குத் துரோகம் செதுவிட்டதாகவும் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கோரும் சுவரொட்டிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பளிச்சிடுவதுடன் ஈழத் தமிழினக் கொடுமையைச் சித்திரிக்கும் குறுந்தகடுகளும் கிராமங்களில் திரைச் செதியாக காட்சியளிக்கிறது. இது தவிர, இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., அ.தி.மு.க., வைகோ கட்சியினரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையில் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

காலணி கலாசாரம் : அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்மீது சப்பாத்து வீசப்பட்ட சம்பவம் இங்கு "காலணி கலாசாரமாக' உருவம் எடுத்து, தொடர் கதையாக தேர்தல் பிரசாரத்தில் நீடிக்கிறது. ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நடிகர் பவன் கல்யாண் மீது செருப்புடன் அழகிய முட்டையும் வீசப்பட, அரியானாவில் ஓவுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காங்கிரஸ் வேட்பாளர் மீது செருப்பு மழைபொழிய, டில்லியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கியர் ஒருவர் (பத்திரிகையாளர்) பாதணி வீசி பரபரப்பை ஏற்படுத்தி அது அடங்குவதற்குள் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது 35 வயதுள்ள ராமு என்பவர், ""இலங்கைப் பிரச்சினைக்கு முடிவு என்ன? ஈழத் தமிழருக்கு பதில்சொல்!' என்று சத்தமிட்டு ஒரு கட்டையை ப.சிதம்பரம் மீது வீசினார். இதே மாதிரி காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கறுப்புச்சட்டை அணிந்த ஒரு இளைஞர் மேடை அருகே சென்று ""இலங்கையில் போரை நிறுத்து!' என்று முழக்கமிட்டார். பொலிஸார் அவரை கைதுசெதனர். மதுரையில் ஆங்காங்கே, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் "சிக்கியரின் மானம் காக்க சிதம்பரம் மீது செருப்பு வீச்சு, தமிழரின் உயிர்காக்க காங்கிரஸை தோற்கடிப்பீர். சிந்திப்பீர்செயல்படுவீர்' என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. அபேட்சகர்,அமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற "காலணி கலாசாரம்' இப்பொழுது, பிரதமர் வேட்பாளர் நிலைக்கும் தள்ளப்பட்டுவிட்டது! மத்திய பிரதேச மாநிலம் கட்னி எனுமிடத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க.தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட இக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி மீது, பா.ஜ.க. மாவட்ட முன்னாள் தலைவர் ஒருவர், செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்!

பெண்கள் சாகும்வரை உண்ணாவிரம்: பாராளுமன்றத் தேர்தல் சூறாவளி தமிழ் நாட்டில் இவ்வாரம்தான் வீசத் தொடங்கும் அதே நேரம், ஈழத் தமிழின படுகொலைக்கு எதிராக சென்னையில் பெண்கள் ஆரம்பித்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர்நீத்த முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூருக்குச் சென்று இருபது பெண்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். தொடர் உண்ணாவிரதமிருக்க பொலிஸார் அனுமதி மறுக்கவே, ம.தி.மு.க. தலைமை அலுவலகமான "தாயகத்தில்' கடந்த 14ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செவதை நிறுத்து என்றும் போர்நிறுத்தம் அங்கு ஏற்பட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களில் இருபது பெண்கள் சாகும்வரை உண்ணா விரதமிருந்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை இப்போராட்டம் நீடிக்கும் நிலையில் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வரை சாகும்வரை உண்ணா நோன்பிருக்கும் இருபது பெண்களில், சென்னையைச் சேர்ந்த கவிதா (30 வயது), தேனியைச் சேர்ந்த சித்ரா (40) காங்சிபுரத்தைச் சேர்ந்த சசிகலா (30) ஆகிய மூவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, டாக்டர்கள் அழைக்கப்பட்டனர். இப்போராட்டம் நீடிக்குமானால் பலரது நிலைமை மிகவும் மோசமாகும் வாப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் பெண் உரிமைப் போராளியுமான பேராசிரியை சரஸ்வதி நேற்றுமுன்தினம் "தினக்குரலு'க்கு தெரிவிக்கையில், கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழ் உணர்வுடன் துவம்சமாகும் ஈழத் தமிழினத்தைக் காக்கும் ஒரே குறிக்கோளுடன் இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக நீடிக்கிறது என்றும், தினமும் நூற்றுக்கணக்கில் பெண்கள் இங்குவந்து ஆதரவு நல்கிவருகின்றனர் என்றும் இப்போராட்டம் தீவிரமாகும் என்றும் சூளுரைத்தார்.

""சில நாட்களுக்கு முன்னர் எங்கள் குழு டில்லி சென்று பலதரப்பட்ட அமைப்புகளின் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் சந்தித்து ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை ஆதாரபூர்வமான தகவல்களுடன் விளக்கியது. அரசியல் கலப்பற்று தமிழுணர்வாளர்களை மட்டுமே உள்ளடக்கிய எமது குழு, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்து ஈழத் தமிழருக்கு எதிர்பார்ப்பு பற்றி விரிவாகக் கூற இருந்தோம். ஆனாலும் சந்திப்புக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இம்மாதம் இருபதாம் திகதி சென்னைக்கு வரும் சோனியாவை சந்தித்து இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம். எங்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இடமெடுப்பதில் மிகுந்த சிரமப்பட்டோம். கல்யாண மண்டபம் கூட கிடைக்கவில்லை. இறுதியில் "தாயகம்' தெரிவுசெயப்பட்டு, போராட்டம் நீடிக்கிறது' என்றும் பேராசிரியை சரஸ்வதி கூறினார்.

தமிழ் நாட்டில், கொளுத்தும் வெயிலிலும் சூறாவளிப் பிரசாரத்தை இவ்வாரம் ஆரம்பிக்கும் அரசியல் கட்சிகள், ஈழத் தமிழர் பிரச்சினைக்குச் சரியான விளக்கம் கொடுக்காமல் கூட்டத்தை முடிக்க முடியாத சூழ்நிலை இன்று உருவாகியிருக்கும் கட்டத்தில் எதிர்ப்பிரசாரத்துக்கு பதில் அளித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அக்னி வெயில் ஆரம்பிக்கவிருக்கும் அடுத்தடுத்த வாரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கும். கவிதைக் கணைகளும் ஒலிஒளி கிளப்பும்!

- தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா-

Comments