"போரும் நிற்காது; அப்பகுதிக்கு யாரையும் செல்லவும் விடமாட்டோம்:" பிரித்தானியா, பிரான்சிடம் கோத்தபாய

"போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, போர் நடைபெறும் பகுதிக்கு உதவிப் பணியாளர்களை அனுமதிக்கப்போவதும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ உடலமாகவோ பிடிபடும் வரையில் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை" எனவும் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

குறுகிய கால ஒருநாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை கொழும்பு சென்றிருந்த பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளருடனும் பிரான்சின் அமைச்சருடனும் வெளிவிவகார அமைச்சில் தனித்தனியாக நடத்திய பேச்சுக்களின் போதே கோத்தபாய ராஜபக்ச இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.

முப்பது வருட காலத்துக்குப் பின்னர் இறுதியாக பிரபாகரனையும், ஏனைய புலிகளின் தலைவர்களையும் உயிருடனோ அல்லது அல்லது உடலங்களாகவோ கைப்பற்றுவதற்கான தருணம் வந்திருக்கின்றது எனச் சுட்டிக்காட்டிய கோத்தபாய ராஜபக்ச, அதுவரையில் போரை அரசாங்கம் நிறுத்தப்போவதில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், போர் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும், உதவிப் பணியாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த போதே விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து அதன் தலைவர்களை உயிருடனோ உடலங்களாகவோ கைப்பற்றும் வரையில் போரை அரசாங்கம் நிறுத்தப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர், சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் டொக்டர் பீட்டர் ஹேய்ஸ் உட்பட மற்றும் இரண்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து போர்க் கள நிலைமைகளை விளக்கிய கோத்தபாய ராஜபக்ச, வார்த்தைகளை அளந்து பேசவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த போரில் சிறிலங்கா படையினரும் பொதுமக்களுமே உயிரிழப்புக்களைச் சந்தித்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், அதனால்தான் விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பது என அரசாங்கம் தீர்மானித்தது எனக் கூறினார்.

போர்ப் பகுதியில் இருந்து பிரபாகரனையும், புலிகளின் மற்றைய உயர் தலைவர்களையும் பாதுகாத்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் மனிதாபிமான அக்கறைகளை சிலர் வெளிப்படுத்துகின்றார்கள் எனவும் குற்றம் சாட்டிய கோத்தபாய, போர் நிறுத்தம் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கும் பலம் பெறுவதற்குமே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

"இந்தப் போரை நிறுத்தக்கூடிய ஒருவர் இருக்கின்றார் என்றால், அது சிறிலங்காவின் அரச தலைவர் மட்டும்தான்" எனவும் குறிப்பிட்ட கோத்தபாய, பிரபாகரனையும் புலிகளின் ஏனைய தலைவர்களையும் கைது செய்யுமாறு அல்லது அழித்துவிடுமாறு இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்துக்குப் பின்னர் இரண்டு லட்சம் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து படையினர் மீட்டுள்ளதாகவும், இதற்காக படையினர் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்தவில்லை எனவும், ஏனையவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என கோத்தபாய தெரிவித்த போது குறிக்கிட்ட மிலிபான்ட், இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என தனது குரலை உயர்த்தித் தெரிவித்த கோத்தபாய, பி.பி.சி. கூட விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை அதனை உறுதிப்படுத்தாமல் அப்படியே பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த மிலிபான்ட், பி.பி.சி.யின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து தான் இதனைத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டதுடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்து இது தொடர்பாக நம்பகமான தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த கோத்தபாய, "விடுதலைப் புலிகளின் இறுக்கமான பிடியில் உள்ள பகுதியில் இருந்து நம்பகமான தகவல்கள் எதுவும் வரும் என விடுதலைப் புலிகள் அமைப்பைத் தெரிந்த எவரும் நம்பமாட்டார்கள்" என கடுமையான தொனியில் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் அனைத்துலக சமூகத்தையும், மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக விடுதலைப் புலிகளால் புனையப்படுபவை எனவும் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியதுடன், 'ஒரு பயங்கரவாத அமைப்பு சொல்வதை நம்புவதா அல்லது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் சொல்வதை நம்புவதா என்பதை பிரித்தானிய தூதுக்குழுவினரே தீர்மானிக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.

பிரித்தானியத் தூதுக்குழுவினருடனான சந்திப்பையடுத்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குஞ்சாரை அதே இடத்தில் சந்தித்து கோத்தபாய பேச்சுக்களை நடத்தினார். மிலிபான்ட்டின் அணுகுமுறையைவிட குஞ்சாரின் அணுகுமுறை அதிகளவுக்கு இராஜதந்திரமானதாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு ஐ.நா. செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த கோதாபாய, அந்தப் பகுதியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. யாருடைய பாதுகாப்பையும் அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரான்சின் வெளிவிவகார அமைச்சர், அந்தப் பகுதிக்குச் செல்வதற்குத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு செல்வதில் உள்ள ஆபத்தை எதிர்கொண்டு அங்கு செல்வதற்கு தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் அவரையும் (பிரான்ஸ் அமைச்சரையும்) விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துவிடலாம் என எச்சரித்தார். "அதனையிட்டுக் கூட நான் கவலைப்படவில்லை" என இதற்குப் பதிலளித்த பிரான்ஸ் அமைச்சர் குறிப்பிட்டார்.

"விடுதலைப் புலிகள் அமைப்பு உங்களுக்கு என்ன செய்யப்போகின்றது என்பது என்னுடைய பிரச்சினை அல்ல" எனச் சிரித்துக்கொண்டே பிரான்ஸ் அமைச்சரிடம் தெரிவித்த கோத்தபாய, அவ்வாறு நடைபெற்றால் பிரபாகரனை எம்மால் திட்டமிட்டவாறு கைது செய்யமுடியாமல் போய்விடும். அதுதான் எமது பிரச்சினை" எனக் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன ஆகியோரும் இந்த இரு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டனர்.

Comments