இலங்கை தமிழர் பிரச்சனைக்காக அரசியலில் மதிமுக இழந்தது அதிகம்: வைகோ

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக அரசியலில் மதிமுக இழந்தது அதிகம் என்று கூறிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மக்களவை தேர்தலில் வெற்றிக்காக போராடும் அதேநேரத்தில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தார்.

PTI PhotoFILE
சென்னை திருவல்லிக்கேணியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண வரவேற்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டு வைகோ பேசியதாவது:

இலங்கையில் சிங்களப்படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக அங்கிருந்து வரும் தகவல்கள் நெஞ்சை பதறவைக்கின்றன. சிங்களப் படையினர் சுமார் 3 லட்சம் தமிழர்களை நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் அடங்கிய தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் ரசாயனக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

சிங்கள ராணுவம் நடத்தும் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதோடு பணஉதவியும் செய்து வருகிறது. இந்த பணத்தை கொண்டு, பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடைபெறும் போரை தடுத்து நிறுத்தும்படி கடந்த 6 மாத காலமாக குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது தேர்தல் வருகிறது என்றதும், தமிழக மக்களின் ஓட்டுகளை குறிவைத்து, தமிழக முதல்வர் கருணாநிதிகு காங்கிரஸ் தலைவர் சோனியா, கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் கருணாநிதியா போர் நடத்துகிறார். அவருக்கு கடிதம் எழுதுவற்கு?

இலங்கை அரசுக்கும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கும் போர் நிறுத்தும்படி கடிதம் எழுதுவதை விட்டு விட்டு, கருணாநிதிக்கு கடிதம் எழுதி நாடகமாடுவதன் மூலம் தமிழர்களை முட்டாள்களாக்க பார்க்கிறது இந்திய அரசு .

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, தமிழகத்தில் 12 பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். இதில் திமுகவை சேர்ந்த 2 பேரும் உள்ளனர். ஆனால் முதல்வர் கருணாநிதி, அதற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தம்பி முத்துக்குமார் தொடங்கி வைத்த இந்த உயிர் தியாகம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது, எனினும், நம் தமிழ் சகோதரர்களை காப்பாற்ற முடியாத கையாலாகதவர்களாக நாம் உள்ளோம்.

ஈழத் தமிழர் பிரச்சனைக்காக, அரசியல் மதிமுக இழந்தது மிக அதிகம். இதே பிரச்சனையை காரணம் காட்டிதான் கடந்த 1993ல் நான் திமுகவை விட்டு வெளியேற்றப் பட்டேன். இதே காரணத்துக்காக இன்றும் பல சோதனைகளை சந்தித்து வருகிறோம்.

இந்த பிரச்சனையை பேசியதற்காகத்தான் நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி போன்றவர்களை எல்லாம் கைது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். என்றாலும், இதற்காக மதிமுக அஞ்சாது.

தேர்தல் வெற்றிக்காக போராடும் அதே நேரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்காகவும் மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

அதனால், இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments