ஐ.நா. அலுவலகர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்வதற்கான அனுமதியை வழங்க சிறிலங்கா 'கொள்கையளவில்' இணக்கம்
பாதுகாப்பு வலயப் பகுதியில் பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவது தொடர்பாகக் கவலை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்தப் பகுதிக்கு ஐ.நா.வின் மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர், "கொழும்பில் பணிபுரியும் ஐ.நா. அலுவலர்கள் பாதுகாப்பு வலயத்துக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள ஐ.நா. அலுவலர்கள் இங்கு செல்வதற்கான நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதிலும், அந்தப் பகுதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதனைச் சாத்தியமற்றதாக்கி விடலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
"பாதுகாப்பு வலயத்துக்குச் செல்லவிருக்கும் குழுவில் யார் இடம்பெறுவார்கள், எவ்வளவு காலத்துக்கு அவர்கள் அங்கு தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார்கள், அங்கு அவர்கள் எவ்வாறான பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் என்பன போன்ற விடயங்களை முதலில் எமக்குத் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, "அதன் பின்னரே அதற்கான இறுதி அனுமதி எம்மால் வழங்கப்படும்" எனவும் குறிப்பிட்டார்.
Comments