புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் மாத்திரமே வன்னியில் உள்ள ஏனைய தமிழர்களை பாதுகாக்க முடியும்: வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு


[கனடா, ஒட்டாவாவில்...]


[கனடா, ஒட்டாவாவில்...]

புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் மாத்திரமே வன்னியில் உள்ள ஏனைய தமிழர்களை பாதுகாக்க முடியும் என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடத்தில் இயங்கிவரும் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு நேற்று முன்நாள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

அன்புக்குரிய எம் புலம்பெயர் வாழ் உறவுகளே!

தங்களின் போராட்டங்கள் தொடருமானால் சிங்கள வெறியாட்டத்தில் இருந்து எங்கள் மக்கள் காக்கப்படுவர் - ஒர் உருக்கமான வேண்டுகோள்.

கூவி விழும் எறிகணைகளுக்குள்ளும், குண்டு மழைக்குள்ளும், சாவுகள் மலிந்திருக்கும் மண்ணில் இருந்து எழுதுகின்றோம் உங்களுக்கு.

லண்டன் நாடாளுமன்ற முன்றலில் எம் உயிர்காப்புக்காய் உரிமைக்காய் நீங்கள் எடுத்திருக்கும் போராட்டம் பற்றியும் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் பற்றியும் நாங்கள் நன்கு அறிவோம்.

இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் உங்கள் போராட்டங்கள் பற்றியும் அறிந்து மனமகிழ்கின்றோம். "தான் ஆடாவிட்டாலும் தன் தாசை ஆடும்" என்பார்களே. அதனை உங்களின் உணர்வுமிக்க செயற்பாடுகள் ஊடாக பார்க்கின்றோம். இந்த வகையிலும் நாம் உங்கள் பங்களிப்புக்காய் நன்றியுடையவர்களாய் இருக்கின்றோம்.

தான்தோன்றித்தனமாய் தன் படுகொலை வெறியாட்டத்தை நடத்தி எம் இனத்தையே அழிக்கத்துடிக்கும் சிங்கள பேரினவாத அரசு இன்று அனைத்துலக அளவில் பல கண்டனங்களுக்கும் பல அழுத்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதற்கு உங்களின் உயரிய பங்களிப்புக்கள் காரணமாய் இருந்திருக்கின்றன என்ற பெருமையை நாம் அறிவோம்.

இந்நிலையில் உங்கள் தேசத்துடனான ஒட்டுறவுகள் இனிமேல் சரிவராது என்ற எதிரும் புதிருமான இன முரண்பாட்டை சிங்கள இனம் அனைத்துலக அளவில் காட்டத்தொடங்கியுள்ளது.

இப்படிப்பட்ட களச் சூழலில் உங்களின் உயரிய பங்களிப்பை இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம். "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம்" அது போல் உங்களின் தொடர் போராட்டங்கள் ஈழத்தில் எம் இனத்தின் போராட்ட நியாயங்களை உலகின் முன்கொண்டு செல்ல உதவும் என்பதில் ஜயமில்லை.

நாள்தோறும் சிங்களப்படை ஏவுகின்ற எறிகணைகளிலும் குண்டுகளினாலும் நூற்றுக்கானக்கான உங்கள் உறவுகள் செத்து மடிவதை கண்டு இரத்தம் கொதிக்கும் என்பதை நாம் அறிவோம்.

எம் இனத்தை அழித்து வரும் சிங்களப் படைகளை எதிர்த்து நேரடியாக போரிடும் தூர எல்லையில் நீங்கள் இருந்தால் உங்கள் பணி எங்கள் வன்னிக்களத்தில் இருந்திருக்கும் என்பதையும் நாம் உணர்வோம்.

இந்நிலையில் உங்களின் தளம் வேறானது என்பதையும் நாம் அறிவோம். ஆகவே உங்கள் தளத்தில் நின்று எங்களது உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள். அதுவே எங்களை வாழ வைக்கும்.

உலக நிறுவனங்கள் இடம்பெயர்நத மக்களுக்காய் வழங்கி வரும் உணவு நிவாரணங்களைக் கூட அனுமதிக்க மறுக்கும் சிங்கள அரசு தன் சொந்த நாட்டு விடயத்தில் வேற்று சக்திகளின் தலையீடு தேவையில்லை என்கின்றது.

சிங்கள அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுத்தான் இங்கிருந்து பல அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எமது மக்களுக்கான பணிகளையும் கைவிட்டுவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தன.

இதனால் தொடர்ந்தும் பலமுறை இடப்பெயர்வுகளை சந்தித்த எமது மக்கள் நொந்து நூலாகிப் போய் உள்ளார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை புலம்பெயந்து வாழும் உறவுகளின் பலம் இருக்கின்றது என கருவாடு காயும் கடல்கரை மணல் வெயிலில் சிறுவர்களும் குழந்தைகளுமாய் பேரிடர் சுமந்து எம் மக்கள் வாடி வதங்குகின்றார்கள்.

அரிசி ஆயிரம் மடங்கு, தேங்காய் இரண்டாயிரம் மடங்கு, மா ஆயிரம் மடங்கு உயர்வில் உணவுப் பெருட்களின் விலை மக்கள் வாங்கி உண்ண முடியாதளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கின்ற சூழலில் தங்களின் உறவுப்பாலம் தங்களை பிணைத்து நிற்கின்றது.

மரக்கறி வாசனைகளை கண்ணால் கூட காண முடியவில்லை. சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் எள்ளளவுமில்லை. குழந்தைகளுக்கான பால்மாவுக்கும் தடை.

இப்படி பட்டினி போட்டு வதைக்கப்பட்ட தமிழ்மக்களைத் தான் சிங்கள இராணுவம் எறிகணைகளைக் கொண்டும் கொன்று குவிக்கின்றது.

படுகாயமடையும் மக்களுக்கு சிகிச்சை வழங்க மருந்தில்லாத காரணத்தினாலேயே பல பொதுமக்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன.

இப்படிப்பட்ட பல மோசமான மனிதப் பேரவலத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிங்கள அரசு தற்போது இராணுவ வெற்றிகள் குறித்த மிதப்பில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றது.

புலிகளிடம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தாம் மீட்டுவிட்டதாகவும் எஞ்சிய புலிகள் தாம் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்திய இடங்களில் ஒழித்திருப்பதாகவும் கூறித் தமிழினத்தை பூண்டோடு அழிக்க முயல்கின்றது.

இவ்வாறான நிலையில் இங்கு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிங்களப் படைகளால் இன்னும் அதிகமாகத் தாக்கப்படும் சம்பவங்களுக்கு உள்ளாகலாம் என்ற கவலையையும் உங்கள் முன்வைக்கின்றோம்.

ஏனெனில், இதுவரை காலமும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தாம் தாக்குதல்களை மேற்கொள்வதில்லை எனக் கூறிக்கொண்டே நாளாந்தம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த அரசு பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகளை அழிப்பதாய் கூறித் தாக்குதல்கள் நடத்தினால் எத்தனை அப்பாவிகள் கொல்லப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.

இந்நிலை குறித்து உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

இம்மடல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் கூட பொக்கனை, இடைக்காட்டுப் பகுதியில் சிறிலங்காப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களின் குழந்தைப் பிள்ளைகளுக்கான பால் மாவினைப் பெற நீண்ட வரிசையில் நின்ற குழந்தைகள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கனக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயப்பட்ட பொதுமக்கள் தொகையால் புதுமாத்தளனில் இயங்கும் மருத்துவமனை அவலம் நிறைந்த அழுகுரல்களின் காட்சிகளாய் உள்ளது.

இந்நிலை தொடர அனுமதிக்கப்படக் கூடாது. மக்களைக் கொன்று குவித்து எஞ்சியவர்களை அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எடுக்க முயல்கின்றது சிங்கள அரசு.

இப்படிப்பட்ட நிலை குறித்து அனைத்துலகத்தின் கவனத்திற்கு தொடர்ந்து உரைக்கப்பட வேண்டும். இரு துருவங்களாகி விட்ட சிங்கள - தமிழ் இனங்கள் இத்தீவிலேயே சேர்ந்து வாழுதல் இயலாத காரியம் என்ற பேருண்மையை உலக நாடுகள் உணரத்தக்க வகையில் உங்களின் உரிமைக்குரல் போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.

இலங்கைத் தீவிலேயே தமிழனுக்கென்றொரு தனியான நாடு அமைவதே இத்தீவில் அமைதி நிலவிட வழிவகுக்கும் என்ற கருப் பொருளையும் தாங்கியதாய் உங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

வேரோடும் வேரடி மண்ணோடும் ஆழப் பதிந்து விட்ட உங்கள் உறவுகளின் உந்துதல்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இப்போது எங்கள் மனங்களில் நிழலாடுகின்றது.

சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ள பாதுகாப்பு வலயத்தில் கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்காப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத் தாக்குதல்களை நடத்த படைத்தரப்பு ஆயத்தமாகி வருகின்றது.

அவ்வாறு படைத்தரப்பு தாக்குதல்கள் நடத்துமானால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

இந்த இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைத்துலக நாடுகளால் மட்டுமே முடியும். அவ்வாறான நிர்ப்பந்தத்தை அனைத்துலக நாடுகளுக்கு கொடுக்கக்கூடிய பலம் புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கே உண்டு.

தற்போது புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்டும் தொடர்ச்சியான போராட்டங்கள் தொடர வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் போரை நிறுத்தும் வரை நாளாந்தம் தீவிர போராட்டங்கள் முன்னெடுப்பதன் ஊடாக வன்னியில் எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட முடியும்.

இலங்கையில் போரை நிறுத்தி அரசியல் தீர்வு காணப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இலங்கையை மாறி மாறி ஆட்சி புரிந்த சிங்கள அரசுகள் தமிழர்கள் தமது வாழ்வுரிமைகளுடன் வாழ அனுமதிக்கவில்லை.

அரசியல் உரிமைக்காக போராடிய தமிழர்களை இன வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொன்று குவித்திருக்கிறது.

இவ்வாறு இதுவரை சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

எனவே தான் இதனை நாம் இன அழிப்புப் போர் எனக் கூறுகின்றோம். இப்போது கூட போரின் விளைவாக அனைத்தையும் இழந்து நலிவடைந்து பாதுகாப்பு வலயத்துக்குள் வாடி நிற்கின்ற போது அங்கும் அரசாங்கம் கொலையைப் புரிகின்றது.

இது போன்ற சூழல் இலங்கைத் தீவில் சிங்களமும் தமிழும் ஒரே நாட்டின் கீழ் ஐக்கியமாக வாழ முடியாது என்ற உண்மையை உணர்த்தி நிற்கின்றது.

எனவே இந்தச் செய்திகளை அனைத்துலக நாடுகளுக்கு அமைதிப் போராட்டங்களின் ஊடாக சொல்ல வேண்டும். அதுவும் தொடர்ந்து சொல்ல வேண்டும். தங்கள் போராட்டங்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை அனைத்துலக அரங்கில் அங்கீகாரத்தைப் பெறக் கூடியதாக இருக்க வேண்டும்.

உங்கள் போராட்டங்கள் வீச்சுக் கொண்டு உலக நாடுகள் சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்காது போனால் வன்னியில் வாழும் தமிழர்கள் சிங்களப் படைகளின் இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகி மாண்டு போவார்கள் என்ற செய்தி மட்டுமே வெளிவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஈழத் தமிழினம் தமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் ஊடாகவே தமது உரிமையை வென்றெடுக்க முடியும். இதுவே யதார்த்த நிலை.

எனவே, இதற்கு தோள் கொடுப்பது புலம்பெயர் உறவுகளின் தார்மீகக் கடமையாகும். இதனையே அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு தாங்கள் தோள் கொடுக்கும் போது பல கடினமான பாதையில் பயணிக்க நேரிடும்.

இந்த சவால்களை எதிர்கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் போர்வெறியை அடக்க வேண்டும் என வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு புலம்பெயர் எம் இனிய உறவுகளைக் கேட்டுக் கொள்கின்றது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Comments