சிறிலங்காவில் இருந்து நான் ஏன் நாடு கடத்தப்பட்டேன்: விளக்கமளிக்கும் 'த ரைம்ஸ்' ஊடகவியலாளர்

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெரமி என்பவரை கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது. இது தொடர்பான அனுபவத்தினை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

நாடு கடத்தப்பட்ட போது தனக்கு நேர்ந்த அனுபவம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய 'த ரைம்ஸ்' நாளிதழில் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு:

சிறிலங்காவின் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் கடந்த வாரம் எனது கடவுச்சீட்டை பரிசோதித்த குடிவரவு-குடியகல்வுத்துறை அதிகாரியின் முகம் மாறியது.

என்னை அருகில் உள்ள அறைக்கு வரும்படி அழைத்துச்சென்ற அவர், அங்குள்ள கணணி ஒன்றில் எனது தகவல்களை பதிவு செய்த போது "இவரை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்" என்ற தகவலை கணணி தந்தது.

உடனடியாக எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படதுடன், பாதுகாப்புடன் வானூர்தி நிலையத்தில் இருந்த தடுப்பு அறையில் தங்கவைக்கப்பட்டேன், பின்னர் மறுநாள் நான் நாடு கடத்தப்பட்டேன்.

இது எனக்கு ஆச்சரியமானது அல்ல; ஏனெனில் இது எனக்கு முதல் தடவையும் அல்ல; 12 வருட எனது ஊடகத்துறை வாழ்க்கையில் சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம், தென்னாசியா ஆகிய பகுதிகளில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தேன்.

கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நான் ஊடகவியலாளர் நுழைவு அனுமதிக்காக விண்ணப்பித்து வந்த போதும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் போர் தொடர்பான தகவல்களை வெளியிடுவது கடினமானது.

கடந்த இரு வருடங்களாக சிறிலங்கா அரசு சுதந்திர ஊடகவியலாளர்களுக்கான நுழைவு அனுமதியை தடைசெய்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அரசு சில நாள் சுற்றுலாவை மட்டும் மேற்கொண்டு வருகின்றது.

எனவே தான் நான் சுற்றுலாப் பயணிக்குரிய நுழைவு அனுமதி மூலம் செல்ல தீர்மானித்தேன. மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள 150,000 (ஐ.நாவின் கணிப்பின் படி) மக்கள் தொடர்பாக எழுதுவதற்கே நான் முயற்சித்திருந்தேன்.

சிம்பாவே, ரேர்க்மெனிஸ்த்தான், வடகொரியா, பர்மா போன்ற நாடுகளுக்கும் ஊடகவியலாளர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குரிய நுழைவு அனுமதியுடனேயே சென்று வருகின்றனர். நான் ஏன் தடுக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியும்; நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவன் என அரசு எண்ணுகின்றது. இது கேவலமான கணிப்பு.

கடந்த 26 வருட கால உள்நாட்டு போரில் எனக்கு எந்தத் தரப்புடனும் தனிப்பட்ட பழக்கம் கிடையாது.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், அவர்கள் பொதுமக்களை மனித கேடயங்களாக கொண்டிருக்கின்றனர் என்றும் நான் தொடர்ந்து எழுதி வருகின்றேன். மறுவளமாக அரசின் உத்திகளையும் விமர்சித்து வருகின்றேன்.

ஆப்கானில் உள்ள தலிபான் உறுப்பினர்களின் நேர்காணல்களை நான் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றேன். ரஸ்யாவிலும் நான் செச்சினிய பிரச்சினையில் இருதரப்பு தகவல்களையும் வெளியிட்டு வருகின்றேன். சீனாவில் நான் திபெத்திய சுதந்திர செயற்பாட்டர்களையும் நேர்காணல் கண்டுள்ளேன்.

ஆனால் சிறிலங்காவில் நடுநிலமையாக செயற்படுவது கடினமானது; அங்கு உள்ளூர் ஊடகவியலாளராக பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது. கடந்த முறையும் நான் சுற்றுலாப்பயணியாகவே அங்கு பயணித்திருந்தேன்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க தொடர்பாக எழுதுவதற்கு நான் சென்றிருந்தேன்.

அரசின் போரை விமர்சிப்பதனால் தான் படுகொலை செய்யப்படுவேன் என அரைகுறையான பத்தி ஒன்றை தான் இறப்பதற்கு முன்னர் லசந்த எழுதியிருந்தார்.

அரசாங்கம் படுகொலையை மறுத்த போதும் குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை. 2006 ஆம் ஆண்டில் இருந்து அங்கு 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசு வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்களை 3 வருடங்கள் முட்கம்பி வேலி போடப்பட்ட தடுப்பு முகாமில் தடுத்துவைக்க திட்டமிட்டுள்ளதாக ஏனைய ஊடகவியலாளர்களை போல நானும் தெரிவித்திருந்தேன்.

அதற்கு அரசு தனது பதிலை எனக்கு நேரடியாக தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் இந்த திட்டம் ஐ.நாவின் அழுத்தத்தினால் பின்னர் மழுங்கிப்போயுள்ளது.

எனினும் எனக்கு அரசின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்கவிடம் இருந்து கடிதம் ஒன்றும் வந்திருந்தது.

முட்கம்பிகள் என்ற சொல்லை பயன்படுத்தி நான் அந்த செய்தியை உணர்திறன் மிக்கதாக மாற்றியதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார் என அவர் தனது பத்தியில் தெரிவித்துள்ளார்.

Comments