புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் 1,412 படையினர் கொல்லப்பட்டும் 6,123 படையினர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இச்செய்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடாத வகையில் திசை திருப்பும் நோக்கிலேயே புதுக்குடியிருப்பு பகுதியின் மீது படையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்று சிறிலங்கா படைத்தரப்பு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது.
சாள்ஸ் அன்ரனி காயமடைந்த செய்தி கொழும்பில் செல்லிடப்பேசி மூலமான குறும் தகவல்கள் ஊடாக மிக வேகமாக பரப்புரை செய்யப்பட்டது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை வெளியான சகல சிங்கள மற்றும் ஆங்கில நாளேடுகளில் இச்செய்திக்கு முன்பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச மற்றும் தனியார் ஊடகங்களிலும் இச்செய்திக்கு மணிக்கு ஒரு தடவை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான பரப்புரைகளை சிறிலங்கா படைத்தரப்பு செய்வது வழமையானது என கொழும்பில் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய இளைஞர்களை போரில் ஈடுபடுத்திக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டார் என்று இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கூறியிருந்தது.
தற்போதும் இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் சாள்ஸ் அன்ரனி காயமடைந்தார் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த முரண்பாடான தகவல்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று அவதானிகள் கேட்கின்றனர்.
Comments