இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு
சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த ஓர் எதிர்பாராத சிறப்பான முடிவு அது என்ற கருத்து கொழும்பிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அதிகளவாக பேசப்பட்டது.
ஆனாலும், எதிர்வரும் 15 ஆம் நாள் அச்சந்திப்பிற்குச் செல்வதற்கு சென்னையில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் முடிவெடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே இந்தியாவில் தங்கியிருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், பின்னர் அங்கு சென்ற மாவை சேனாதிராஜாவையும் சேர்த்துக்கொண்டு, இலங்கையில் தற்போது இருக்கும் இன்னொரு உறுப்பினரையும் இந்தியாவுக்கு வரவழைத்து இச்சந்திப்புக்குச் செல்ல அவசரப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவே தாம் இந்திய அரசைச் சந்திக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த பழுத்த அரசியல்வாதிகள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
இது தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் அரசியல் அவதானிகள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முதன்மைக் கோரிக்கைகளாக இன்று இரண்டே விடயங்கள் தான் இருக்கின்றன.
(1) தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திரப் போராளிகள். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளில், அந்தப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கப்பட்டு - தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வை நோக்கிய பேச்சுக்கள் விடுதலைப் புலிகளுடனேயே உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
(2) உடனடியானதும் நிரந்தரமானதுமான 'போர் நிறுத்தம்' ஒன்றை ஏற்படச் செய்து சிறிலங்கா படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்களுக்கான நிவாரணமும் நிம்மதியும் உடனடியாகக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
இந்த இரண்டுமே - உலகத் தமிழர் போராட்டங்களின் அடிப்படைக் கோரிக்கைகளாக இன்று இருக்கின்ற நிலையில் -
இக்கோரிக்கைகளை இன்றைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம் ஏற்குமா?...
அல்லது - இக்கோரிக்கைகளை தமிழர் கூட்டமைப்பின் மேற்படி பழுத்த அரசியல்வாதிகளினால் காங்கிரஸ் அரசிடம் ஆணித்தரமாக முன்வைக்க முடியுமா?...
போரை நிறுத்தாமல், இன்றைய தமிழின அழிப்பை முன்னெடுக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது இவர்களுக்குத் தெரியாதா?...
இத்தகைய நிலையில் தமது சுயநலம் கருதிய அரசியல் நகர்வுகளுக்குச் சாட்டாக புலம்பெயர் தமிழர்களை இழுப்பது ஏன்?...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த பழுத்த தலைவர்கள் சிவ்சங்கர் மேனனை சந்திப்பதற்கு எடுத்த முடிவுக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவ்வாறான ஒரு சந்திப்பிற்குச் செல்லுமாறு அவர்களுக்கு எவரும் கூறவும் இல்லை.
தமிழின அழிப்புப் போருக்கு சோனியா காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் அரசாங்கம்தான் காரணம் என்று முழு உலகிற்கும் தெரியும்.
இந்திய காங்கிரஸ் அரசு தமிழர்களைப் பழி தீர்த்து முதுகில் குத்திவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறீக்காந்தாவே பி.பி.சி தமிழோசையிடம் காட்டமாகச் கூறியிருக்கின்றார்.
இத்தகைய ஒரு சூழலில் -
இந்திய அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பின் ஏற்பாட்டுக்கான பின்னணியில் முதல்வர் கருணாநிதியும் இருப்பதாகவும் அறிய முடிகின்றது. அரசியலில் பழுத்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பகடைக்காய்களாக்கி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக இந்திய அரசு ஏதோ செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வழி செய்து, சோனியா காங்கிரசுடனான தனது உறவையும் பலப்படுத்தி சுயலாபம் அடைவது தான் கருணாநிதியின் திட்டம்.
அதற்காகவே இச்சந்திப்புக்கான அவசர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலும், தமிழகத்திலும் வாழும் தமிழர்களுக்குப் புரியாதது அல்ல.
அதேவேளையில் இச்சந்திப்புக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இன்றைய இந்திய அரசாங்கத்திற்கும் முதல்வர் கருணாநிதிக்கும் தாளம் போட்டு, அவர்களுடனான தங்கள் தனிப்பட்ட உறவை மேலும் செம்மைப்படுத்தலாம் என்பது - கூட்டமைப்பின் இந்த பழுத்த தலைவர்களின் ஆசை.
இந்தியாவின் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பை விரும்பாத கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைக் கூட, இச்சந்திப்பிற்கு ஒத்துழைக்குமாறு கூட்டமைப்பின் மேற்படி தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இச்சந்திப்பிற்குச் செல்ல எடுத்திருக்கும் முடிவும், அந்த முடிவுக்கு புலம்பெயர் தமிழர்களை காரணம் காட்டும் செயலும் - உலகத் தமிழர்கள் நடத்தி வருகின்ற தூய்மையான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களது தெளிவான அரசியல் கோரிக்கைகளை மழுங்கடித்து, அவர்களது உணர்வுகளைக் காயப்படுத்தி, தமிழினத்திற்கு இழைக்கும் பச்சைத் துரோகம்," என்று அமெரிக்காவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் சிவக்கும் கண்களுடன் கூறினார்.
"எங்களது உயிர்களையும், எங்கள் போராளிகளது தியாகங்களையும் வைத்து கடந்த ஏழு வருடங்களாக அரசியல் நடத்திய கூட்டமைப்பின் இந்தப் பழம் தலைவர்கள் - தற்போது, இன்றைய இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து எங்களது முதுகில் குத்துகின்றனர்," என்று பிரித்தானியாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவர் துயரத்துடன் தெரிவித்தார்.
"'தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள்' என்ற கோட்பாட்டை முன்வைத்துத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். தற்போது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக தான் நடத்தும் போரை இந்தியா நிறுத்தாத நிலையில், இந்திய அரசாங்கத்துடனான இச்சந்திப்புக்கு கூட்டமைப்பினர் செல்வது, அவர்களுக்கு வாக்களித்த தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்," என்று கொழும்பில் உள்ள தமிழ் கல்விமான் ஒருவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பு முயற்சி பற்றி கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர்கள் பலர் - விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கருத்தின் அடிப்படையில் இச்செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால், அது ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவோ, அல்லது தமிழர்களுக்கு நன்மை எதனையும் செய்வதாகவோ இருக்காது என்று கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கடிதத்தில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டிருந்ததோ அதே காரணங்கள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியாதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
Comments