பாதுகாப்பு வலயப் பகுதிகளில் படையினர் அகோர தாக்குதல்: கடந்த மூன்று மணித்தியாலங்களில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று புதன்கிழமை காலை சிறிலங்கா படையினர் பாதுகாப்பு வலயப் பகுதிகளான பொக்கணை, முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை நோக்கி ஆட்லறி எறிகணைஈ மோட்டார், 40 மி்மீ கனோன் பீரங்கி, ஆர்.பி.ஜி உந்துகணை, 50 கலிபர் மற்றும் கனரக துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்கா படையினரால் தாக்குதல் நடத்தப்படும் இலக்கு (பாதுகாப்பு வலயம்) மிக குறுகிய தூரத்தில் இருப்பதால் படையினர் ஆட்லறி தாக்குதல்களை முள்ளியவளை, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் சாலை ஆகிய தளங்களிலிருந்தே ஏவுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களின்போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இப்பகுதிகளில் அண்மைய நாட்களில் பெய்துவரும் கடும் மழையினால் பதுங்குகுழிகளும் வெள்ளம் நிரம்பியிருப்பதால் இழப்புகள் அதிகரிக்கக்கூடிய வாயப்புகள் உள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.
படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொள்வதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்வதிலும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து காயமடைந்த பொதுமக்களை எடுத்து வராதபடி புதுமாத்தளன் வைத்தியசாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுள்ள வீதியை இலக்குவைத்து 40 மி்மீ கனோன் பீரங்கிகள், ஆர்பிஜி உந்துகணை மற்றும் 50 கலிபர் தாக்குதல்களை நடத்தியவண்ணம் உள்ளனர்.
எனினும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் காயமடைந்தவர்களை உழவு யந்திரங்களில் ஏற்றிக்கொண்டு வெள்ளைக் கொடியைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு செல்கின்றதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப்படுவதனால் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட்டுக்கூற முடியவில்லை. எனினும் இன்று காலை 7.40 மணி தொடக்கம் 10.40 மணி வரையுமுள்ள மூன்று மணித்தியால காலப்பகுதியில் சுமார் 180 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனினும் சிறிலங்கா படையினர் தாக்குதல்களை இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்வதனால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுவரையில் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு இன்று காலை தொடக்கம் இதுவரை 38 காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 பொதுமக்கள் மருத்துவமனைக்கு உழவு யந்திரங்களில் எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும், புதுமாத்தளன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்.
Comments