மனித பேரழிவை நோக்கிய நிலையில் வன்னி

vanni-front1சிறீலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஏறத்தாழ 300,000 மக்கள் தங்கியுள்ள 18-20 சதுரகி.மீ பரப்பளவுள்ள பகுதியை இராணுவத்தின் 53 ஆவது, 55 ஆவது, 58 ஆவது படையணிகளும், நடவடிக்கை படையணி 8 என்பனவும் சுற்றி வளைத்துள்ளதாக அனைத்துலக ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகளும் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் நிலையெடுத்துள்ளதாக படைத்தரப்பு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு பாதுகாப்பான பிரதேசங்களின் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (4) இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வன்னி படை கட்டளை தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளை தளபதிகளுடன் ஒரு அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப்படுத்துவதுடன், விரைவுபடுத்துவதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களில் இராணுவம் அதிகளவிலான இழப்புக்களை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பல ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ ஒரு டிவிசன் படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். எனினும் படையினர் தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைக்க முற்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பெருமளவான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெரும் தொகையான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அவை தொடர்பான ஆதாரங்களை படைத்தரப்பு வெளியிடவில்லை.

படைத்தரப்பை பொறுத்தவரையில் தற்போது மிகப்பெரிய உளவியல் போர் ஒன்றை நிகழத்தி வருகின்றது. அதாவது களமுனைகளில் படைத்தரப்பு அடையும் வெற்றிகளை விட இலத்திரனியல் ஊடகங்களில் அதிக வெற்றிகளை ஈட்டுவதற்கு முற்பட்டுவருகின்றது.

விடுதலைப்புலிகள் பெரும் அழிவு ஒன்றை எதிர்கொண்டு நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் தமிழ் மக்களின் உளவுரன்களை முற்றாக முறியடிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. அது மட்டுமல்லாது, அனைத்துலக நாணய நிதியத்தின் கடனுதவிகளை பெற்று தற்போது சீரிழிந்து போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் போரை விரைவாக முடிக்க வேண்டிய தேவை அரசுக்கு உண்டு.

போரை நிறைவு செய்துவிட்டதாக கூறி வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் அதிக நிதிகளை அனைத்துலக நாடுகளிடமும், அனைத்துலக அமைப்புக்களிடமும் இருந்து பெறுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆனால் அரசின் இந்த நகர்வுகளுக்கு முன்னால் ஏறத்தாள 300,000 மக்களின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன.

இராணுவத்தின் ஐந்து முன்னனி டிவிசன்களை தற்போதைய பாதுகாப்பு பிரதேசமான 20 சதுர கி.மீ பரப்பளவுள்ள தென்னமரங்கள் நிறைந்த கடற்கரை பிரதேசத்தை சூழந்து நிற்கின்றன. இந்த பிரதேசம் பல ஆயிரம் மக்களின் குருதியினாலும், கண்ணீரினாலும் நனைந்த பிரதேசம்.

அங்கு உயிர் நீத்த எமது உறவுகள் ஏராளம். அதிக சுடுவலுவுடன், ஏறத்தாள 40,000 பேரை கொண்ட இராணுவம் அதன் சிறப்பு அணிகள் சகிதம் இந்த பிரதேசத்திற்குள் உட்பிரவேசிக்குமாக இருந்தால் அதனால் ஏற்படுடப்போகும் பேரனர்த்தம் தொடர்பாக அனைத்துலகம் தற்போதும் மௌனமாக இருப்பது வேதனையானது.

ஆனால் அதனை தடுக்க வேண்டிய கடமை அனைத்துலகத்திலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் உண்டு. அனைத்துலகத்தின் மெதுவான நகர்வுகளுக்கு முன்னர் விரைவான படைத்துறை வெற்றி ஒன்றை பெற்றுவிட அரசு முயன்று வருகின்றது. ஆனால் அதனை விட விரைவாக செயற்பட வேண்டிய கடமையும், தேவையும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு.

Comments