சித்திரை புத்தாண்டில் யாழில் வேடிக்கை நிழ்ச்சிகள் நடத்த சிறிலங்கா அரசு திட்டம்: துணைபோக வேண்டாம் என பொது அமைப்புகள் கோரிக்கை

புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் வடக்கு - கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்க நிர்வாகத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற பொய்யான பிரசாரத்தை செய்வதற்காக சித்திரை புத்தாண்டு நாளன்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பலாத்காரமான ஏற்பாடுகள் அங்கு இடம்பெறுவதாக யாழ். அரச அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழு ஒன்றின் உதவியுடன் பாடசாலை மாணவிகள், அரச அதிகாரிகள் ஆகியோரை படைத்தரப்பு பலவந்தமாக அழைத்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சித்திரைப் புத்தாண்டான எதிர்வரும் 14 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் கலை நிகழ்ச்சிகளை நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் உள்ள ரூபவாஹினி கூட்டுத்தாபன அலுவலகத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நவீன படப்பிடிப்பு கருவிகள் யாழ்ப்பாணத்திற்கு சிறிலங்கா வானூர்தி படையினரின் வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அத்துடன் ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பணியாளர்கள் சிலரும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் சிறிலங்கா படைகளின் ஏறிகணை, பீரங்கி தாக்குதலில் ஒவ்வொரு நாளும் றூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.

வடக்கு - கிழக்கு உட்பட அனைத்துலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் உறவுகளை எண்ணி ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் தங்கள் தொழில்துறைகள் அனைத்தையும் கைவிட்டு சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன படுகொலைகளை வெளிப்படுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் செய்யவுள்ள பொய்யான பிரசார நடவடிக்கைகளுக்கு துணைபோக வேண்டாம் என யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Comments