கடந்த 1 ஆம் நாள் 53 ஆவது படையணி, நடவடிக்கை படையணி-8 என்பன தென்முனையில் இருந்து நகர, 58 ஆவது படையணி வடமுனையில் இருந்து நகர்ந்து பச்சைபுல்மோட்டை பகுதியை கைப்பற்றியிருந்ததாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.
53 ஆவது படையணியின் 5 ஆவது விஜயபா பற்றலியன், 6 ஆவது கஜபா பற்றலியன் என்பனவும், 58 ஆவது படையணியின் 14 ஆவது, 8 ஆவது, 20 ஆவது, 12 ஆவது கஜபா பற்றலியன்கள், 4 ஆவது கெமுனுவோச் பற்றலியன் என்பன நடவடிக்கை படையணி-8 மற்றும் 53 ஆவது படையணிகளுடன் பச்சைபுல்மோட்டை ஊடாக ஆனந்தபுரம் பகுதியில் கடந்த 2 ஆம் நாள் அன்று இணைப்பை ஏற்படுத்தி கொண்டன.
படையினரின் இந்த இணைப்புக்கு பின்புறமாக ஏறத்தாள இரண்டு சதுர கி.மீ பரப்பளவினுள் சில ஆயிரம் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்தனர். இதனை படைத்தரப்பு அறிந்திருந்தது. எனவே இந்த இணைப்பின் மூலம் விடுதலைப்புலிகளின் பெருமளவான அணிகளை முற்றுகைக்குள் கொண்டுவந்துள்ளதாக படைத்தரப்பு நம்பியது.
ஆனால் படையினரை முற்றுகைக்குள் கொண்டு வருவதே விடுதலைப்புலிகளின் திட்டமாக இருந்துள்ளது. அதாவது படையினாரின் பின்னனி நிலைகளுக்குள் ஒரு தொகுதி தமது உறுப்பினர்களை அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் வலிந்த தாக்குதல் படையினரை பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து இரு முனைகளால் தாக்கி அழிக்கும் உத்திகளை விடுதலைப்புலிகள் வகுத்திருந்தனர்.
எனினும் படைத்தரப்பு தனது பலத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த முற்றுகையின் நோக்கத்தை மறுதலையாக்க முயன்றிருந்தது. அதாவது விடுதலைப்புலிகளின் அணிகளை படைத்தரப்பும் பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவர முற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (4) இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வன்னி படை கட்டளை தளத்திற்கு அவசர விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளை தளபதிகளுடன் ஒரு அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப்படுத்துவதுடன் படையினாரின் பின்னனி நிலைகளுக்குள் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளை முற்றாக அழிப்பதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமை (5) அதிகாலை சமரை ஆரம்பிக்க இராணுவம் திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப பெருமளவான படையினரும், ஆயுதங்களும் அங்கு நகர்த்தப்பட்டன. சிறப்பு படையணிகள், வான்நகர்வு பிரிகேட் என்பன அங்கு கொண்டுவரப்பட்டன.
கேணல் ராஃப்ல் நுகேரா தலைமையிலான கொமோண்டோ பற்றலியன், கேணல் அதுல்ல கொடிப்பிலி தலைமையில் சிறப்பு படையணி, 5 ஆவது கவசவாகன படைப்பிரிவும் பெருமளவான டாங்கிகளும் அங்கு நகர்த்தப்பட்டதுடன், பிரிகேடியர் சவீந்தர் சில்வா, மேஜர் ஜெனரல் காமால் குணரட்னா, கேணல் ரவிப்பிரியா ஆகியோர் களமுனைகளை வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மேற்கொண்டிருந்தார்.
எனினும் படையினரின் திட்டத்திற்கு முன்னராக கடந்த சனிக்கிழமை நள்ளிரவு விடுதலைப்புலிகளின் அணிகள் தமது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் ஏறத்தாள 100,000 எறிகணைகளை படைத்தரப்பு பயன்படுத்தியதுடன், 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது.
ஓரு கட்டத்தில் தமது படையினரின் இழப்புக்களை கூட சிறீலங்கா படைத்தரப்பு பொருட்படுத்தவில்லை. அதாவது விடுதலைப்புலிகளின் நிலைகளுக்கு அருகாமையில் படைத்தரப்பு நின்றபோதும் அங்கு எறிகணை வீச்சுக்களையும், வான் தாக்குதல்களையும் படையினர் செறிவாக பயன்படுத்தியிருந்ததாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த மோதல்களில் இராணுவம் அதிகளவிலான இழப்புக்களை சந்தித்துள்ளது. ஆறு மணிநேர மோதலில் 1450 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பல ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அதாவது ஆறு மணிநேர சமரில் சிறப்பு படையணிகளை சேர்ந்த ஒரு பிரிகேட் படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
இருந்த போதும் படையினர் தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைக்க முற்பட்டு வருவதுடன் விடுதலைப்புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளின் பெருமளவான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெரும் தொகையான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்து வருகின்றது.
ஆனால் சமரில் விடுதலைப்புலிகள் பலர் கொல்லப்பட்ட போதும் பின்தளங்களில் நின்ற போராளிகளில் 90 விகிதமான போராளிகள் தாக்குதலை நிறைவுசெய்து கொண்டு தளம் திரும்பி விட்டதாகவே களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
படைத்தரப்பை பொறுத்தவரையில் தற்போது மிகப்பெரிய உளவியல் போர் ஒன்றை நிகழத்தி வருகின்றது. அதாவது களமுனைகளில் படைத்தரப்பு அடையும் வெற்றிகளை விட இலத்திரனியல் ஊடகங்களில் அதிக வெற்றிகளை ஈட்டுவதற்கு முற்பட்டுவருகின்றது.
விடுதலைப்புலிகள் பெரும் அழிவு ஒன்றை எதிர்கொண்டு நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் தமிழ் மக்களின் உளவுரன்களை முற்றாக முறியடிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. எனினும் அவர்களால் முன்வைக்கப்படும் ஆதாரங்கள் வலிமை குறைந்ததாகவே இருக்கின்றது.
கடந்த வாரம் 5 ஆம் நாள் அன்று நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும், அவர்களால் 100 இற்கும் குறைவான சடலங்களையே காண்பிக்க முடிந்துள்ளது. மேலும் அவர்கள் காண்பித்த சடலங்களில் பெருமளவானவை புதைக்கப்பட்ட பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட அடையாளங்களை கொண்டுள்ளதையும் காண முடிகின்றது.
தற்போதைய சமர்களை பொறுத்தவரையில் சமரில் கொல்லப்படும் தமது உறுப்பினர்களை களமுனைகளில் புதைத்து விட்டே விடுதலைப்புலிகள் தளம் திரும்புகின்றனர். மேலும் படையினாரின் எறிகணைவீச்சுக்காளால் கொல்லப்பட்ட பெருமளவான பொதுமக்களின் சடலங்களும் தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள ஆனந்தபுரம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன. அந்த சடலங்களில் பெருமளவானவற்றை தோண்டி எடுத்துள்ள இராணுவம் தனது பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்க முற்பட்டு வருகின்றது.
ஒரு பெரும் சமரில் விடுதலைப்புலிகள் அனைவரும் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்குண்டு கொல்லப்பட்டிருந்தால் அவர்களின் சடலங்கள் களமுனைகளில் சிதறிக்கிடக்குமே தவிர அதனை புதைப்பதற்கோ அல்லது எடுத்து செல்வதற்கோ தப்பி செல்லும் ஒரு சில விடுதலைப்புலிகளுக்கு நேரம் இருக்கப்போவதில்லை. மேலும் படையினாரின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளை மீட்பதற்கு கடற்புலிகள் முயன்றதாகவும் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் ஆனந்தபுரம் பகுதி முற்றுமுழுதாக நிலப்பகுதியால் சூழப்பட்ட பிரதேசம் அங்கு கடற்புலிகள் தரையிறங்க முடியாது.
6 ஆம் நாள் காலை வரை பதுங்குகுழிகளுக்கு அண்மையாக கொல்லப்பட்டு கிடந்த 15 இற்கும் குறைவான விடுதலைப்புலிகளின் படங்களையே இராணுவம் காண்பித்திருந்தது. அதன் பின்னரே உருக்குலைந்த சடலங்களை அது காண்பித்து வருகின்றது.
ஆயுதங்கள் தொடர்பாக படையினர் வெளியிடும் தகவல்களும் அவ்வாறானதே, அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் இடையில் பலத்த வேறுபாடுகள் உண்டு.
ஆனால் தற்போது களமுனைகளில் நிலவும் அசாதாரண அமைதியை நோக்கும் போது இராணுவம் மூச்சு விடுவதற்கு தேவையான கால அவகாசத்தை எடுத்துள்ளதாகவே தெரிகின்றது. ஏனெனில் கடந்த 5 ஆம் நாள் அன்று அதிகாலை சமர் ஓய்ந்து விட்டது. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட சமர்கள் எல்லாம் இலத்திரனியல் ஊடக சமர்கள் தான்.
இந்த பத்தி எழுதப்படும் 8 ஆம் நாள் வரையிலும் வன்னி பகுதியில் மோதல்கள் நிகழவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆழஊடுருவும் படையினாரின் தாக்குதல் ஒன்று கடந்த திங்கட்கிழமை (6) மாலை 2.00 மணியளவில் இராமநாதன்புரத்தில் நிகழந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சிறீலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகளின் பெண்புலி உறுப்பினர் ஒருவர் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ள படைத்தரப்பு தமது தரப்பு இழப்புக்கள் குறித்து தகவல் எதனையும் வெளியிடவில்லலை. இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளே இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன
இராணுவம் கூறுவது போல கடந்த வார இறுதிச் சமரில் விடுதலைப்புலிகள் பாரிய அழிவை சந்தித்திருந்தால் இராணுவம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும். பாதுகாப்பான பிரதேசங்களுக்குள்ளும் நுளைந்திருக்கும்.
ஆனால் தற்போதைய நிலையை நோக்கும் போது இராணுவம் இந்த மோதலில் சிதைவடைந்த தனது படையணிகளை மீள மறுசீரமைப்பதற்கு கால அவகாசத்தை எடுத்து வருவதாகவே கொள்ள முடியும்.
அண்மைக்கால சமர்களை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் மௌனத்தையும் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தொடர் மௌனம் படையினர் மத்தியிலும், அனைத்துலகத்திலும் பல குழப்பங்களையும், குழப்பமான கணிப்புக்களையும், கற்பனைகளையும் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் அதுவும் ஒரு அடிப்படை போரியல் உத்தி தான். ஏனெனில் எமது பலம் பலவீனம் தொடர்பாக எதிரி போடும் கணிப்புக்களில் தான் ஒரு போரின் வெற்றி தங்கியுள்ளது.
அதனை மறுவளமாக கூறினால் சமர்களில் ஈடுபடும் தரப்புக்களில் இரு வகைப்பட்டவர்கள் உண்டு. ஒன்று சமர்களங்களை ஆரம்பித்துவிட்டு வெற்றியை தேடுபவர்கள், இரண்டாவது படைத்துறை உத்திகளில் வெற்றிகளை கணிப்பிட்ட பின்னர் சமர்க்களத்திற்கு செல்பவர்கள். இவர்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை நீங்களே கணிப்பிட்டுக் கொள்ளுங்கள்.
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு (11.04.2009)
Comments