இரத்தக்களரியைத் தவிர்க மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

வன்னியில் தொடரும் போரினால் உருவாகக்கூடிய இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. போரின் பிடியில் சிக்கியுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக உதவி வழங்கும் நிறுவனங்கள் அதிகளவு கவலையை வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

"பொதுமக்களுடைய பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் இராணுவம் உட்புகுந்தால் அங்கு ஏற்படக்கூடிய இழப்புக்களையிட்டு நாம் கவலையடைகின்றோம்" என சிறிலங்காவுக்கான ஐ.நா.வின் இணைப்பாளர் நீல் பூன் தெரிவித்திருக்கின்றார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் பி.பி.சி. செய்தியாளரிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

வவுனியா முகாம் நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், "அங்கு முகாம்களில் உள்ளவர்கள் நடமாடுவதற்கு மேலும் இடம் தேவை என்றே நான் கருதுகின்றேன். அங்கு குறைந்தளவு இடத்தில் பெருந்தொகையானவர்கள் தங்கியிருப்பது அவர்களிடையே ஒருவிதமான விரக்தி மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கின்றது" எனத் தெரிவித்தார்.

"உலகின் பல பகுதிகளிலும் உள்ள அகதி முகாம்களுக்கும் நான் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளேன். புதிதாக அமைக்கப்பட்ட எந்த அகதி முகாம்களிலும் நிலைமை சற்று கடினமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் முழுமையாக இல்லாவிட்டாலும் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

"இருந்த போதிலும் இங்கு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது" எனக் குறிப்பிட்ட அவர், "இங்குள்ளவர்களுக்கு முதற்கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு ஒரு நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு காலத்துக்கு தாம் அங்கு தங்கியிருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவரும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"குறுகிய காலத்துக்கு வேண்டுமானால் அவர்களுடைய நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் நீண்டகாலத்துக்கு அவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" எனவும் தெரிவித்த ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி, இதனையிட்டு அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா. எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனக் கேட்கப்பட்டபோது, "ஒரு குறுகிய காலத்துக்காவது போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாம் கருதுகின்றோம்" எனப் பதிலளித்த அவர், இது அங்கிருந்து பொதுமக்கள் சுலபமாக வெளியேறிச் செல்வதற்கு வழிவகுப்பதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.

"இதன்பின்னர் அங்குள்ள பொதுமக்களை வெளியேறிச் செல்வதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்போம். போர் நிறுத்தப்பட்டால் பொதுமக்கள் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக இருக்கும் என்பதனை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்போம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கடும் போர் நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் இருப்பது நல்லதல்ல என்பதை சிறிலங்கா அரசாங்கம் உட்பட அனைத்துத் தரப்பினரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகின்றோம் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் இவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுப்பது சற்று சிரமமானதாகவே இருந்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Comments