தமிழ் மக்கள் தமது இனத்திற்காக தியாகம் செய்ய துணிந்தவர்கள்: 'த இன்டிபென்டன்ற்'

தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின் சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

21 வயதே நிரம்பிய சிவதர்சன் சிவகுமாரவேல் என்ற மாணவன் தனது உயிரை இழப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆதரவாளர்கள் கண்ணீருடன் எப்போதும் ஆதரவு வழங்க வெப்பமூட்டும் துணிகளுக்கு மத்தியில் அவர் கிடக்கின்றார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக உண்ணாநோன்பினை மேற்கொள்ளும் இரு மாணவர்களில் சிவாவும் ஒருவர்.

போரை நிறுத்துமாறு பிரித்தானியா சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பரீட்சைக்கு படிப்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பதனை கூட அவர்கள் புறக்கணித்து சாவை நோக்கி உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

கணணித்துறை மாணவரான 28 வயதுடைய பரமேஸ்வரன் சுப்பிரமணியன் எனப்படும் மற்றைய மாணவரும் கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் காலை 10:00 மணியில் இருந்து நீரோ அல்லது உணவினையோ அருந்தவில்லை.

தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்று இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படக்கூடாது என அவர்கள் தமது அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் நீரிழப்பினால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

என்னை காவல்துறையோ அல்லது மருத்துவ குழுவோ இங்கிருந்து அகற்றினாலும் எனது போராட்டம் தொடரும் எனவும், தனது தாயார் கூட உண்ணாநோன்பினை கைவிடுமாறு தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரையில் தான் அதனை கைவிடப்போவதில்லை எனவும் சிவா தெரிவித்துள்ளார்.

எமது மக்களை உலகம் கைவிட்டுள்ளது, எமது இருவரினதும் மரணமே இந்த போரின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் போராட்டம் கடந்த திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தை முடக்கியிருந்தது.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமானது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பிரித்தானியா பிரதமர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும், பிரித்தானியா விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் நேற்று இரவு வரையிலும் பிரதமர் அலுவலகம் கருத்துக்கள் எதனையும் கூறவில்லை.

இந்த இருவரும் உண்மையாகவே இறப்பை சந்திக்க துணிந்து விட்டனரா என்பதை கூறுவது கடினமானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது.

வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 26 வயது மாணவன் கடந்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்து இறந்திருந்தார். அதன் பின்னர் பிரித்தானியா பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக மற்றுமொருவர் தீக்குளிக்க முயற்சித்திருந்தார்.

இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கடந்த இரு மாதங்களில் ஆறு பேர் தீக்குளித்திருந்தனர். ஆனால் தற்போதைய முயற்சி பிரித்தானியாவின் இதயம் எனப்படும் பகுதியில் நடைபெறுகின்றது. அதாவது நாடாளுமன்றத்தின் வாசலில் அவர்கள் இறப்பை நோக்கி செல்வது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பரமேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆறு பேர் அண்மையில் வன்னியில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரின் தகவலை உறுதிப்படுத்த முடியாது.

ஏனெனில் போர் நடைபெறும் பகுதிக்கு சிறிலங்கா அரசு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை. பல வாரங்களாக வன்னியில் உள்ள தமது உறவுகளுடன் தனக்கு தொடர்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழுவினர் நேற்று மாலை அவர்களை அகற்ற முற்பட்ட போதும் அவர்கள் அதனை மறுத்து விட்டனர். அவர்களுக்கு அண்மையாக நோயாளர் காவு வாகனம் மூன்று மருத்துவர்களுடன் 24 மணிநேரமும் தயாராக உள்ளதாக மருத்துவக் குழுவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உணவும், நீரும் அருந்தாது இவ்வாறு இருப்பவர்கள் 10 நாட்களே உயிர்வாழ முடியும் என அதில் பணியாற்றும் இந்து குமரேந்திரன் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உண்ணாநோன்பு என்பது எமது கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் நிகழ்வு என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களின் இந்த போராட்டத்தை பலர் லெப். கேணல் திலீபனின் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். திலீபன், விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவர், அவர் 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பிருந்து மரணத்தை தழுவியிருந்தார்.

விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களை விடுதலைப்போராட்ட வீரர்களாகவே பார்க்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்களால் மட்டுமே போராட முடியும் என நம்புகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்யிருந்த தமிழ் மக்களின் தேசியக்கொடியை காவல்துறையினர் அகற்ற முற்பட்டிருந்தனர். அது பாரிய அசம்பாவிதங்களை தோற்றுவித்திருந்தது. ஆனால் நேற்று மாலை கொடிகள் வைத்திருப்பதை காவல்துறை அனுமதித்திருந்ததை காண முடிந்துள்ளது.

தமிழ் மக்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதையே நாம் பிரித்தானியா அரசிடம் கேட்கின்றோம். அவர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஏனெனில் யாரும் அதனை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments