வட்டுக்கோட்டை பிரகடனமே எமது அரசியல் அவா: கி.பி.அரவிந்தன்

வட்டுக்கோட்டை பிரகடனத்தை 32 ஆண்டுளுக்குப் பின்னர் மீளவும் புலம்பெயர் தேசத்தில் வழிமொழிந்து வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் அவா இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக முன்மொழிகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று முன்நாள் சனிக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர் பிரதிநிதிகளின் பேரவையில் தொடக்கத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் முழுவிபரம் வருமாறு:

ஈழத்தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளே,
சிறப்பு விருந்தினர்களே,
நண்பர்களே,

ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் ஓர் உச்சத்தை எட்டி நிற்கின்றது.

இரண்டு தேசியங்களை கொண்டு இயங்குவது இலங்கைத்தீவு என்னும் அரசியல் உண்மையும் உலகெங்கும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

அதேவேளையில் சிங்கள தேசத்தின் பெருந்தேசிய இனமேலாதிக்க அரசும், அதன் அதிகாரபீடமும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டத்தினை உணவுக்கும், மருந்துக்கும், உயிரைத் தக்கவைப்பதற்குமான அபயக்குரலாக மாற்றுவதில் வெற்றிபெற்று வருவதாக அறிவித்துள்ளது.

அறுபதாண்டு கால தொடர்ச்சியான சிங்கள தேசத்தின் தமிழினப் படுகொலை நிகழ்ச்சி நிரல், தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் விரைவுபடுத்தியமையை, அனைத்துலக சமூகம் தனது மௌனத்தினால் அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியும் நம்முன்னே உள்ளது.

1976 இல் ஈழத்துக் காந்தி என தமிழர்களால் சிறப்பிக்கப்படும் தந்தை செல்வா (சா.ஜே.வே. செல்வநாயகம்) தலைமையில் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 ஆம் ஆண்டில் மக்களின் ஆணையாக மாற்றமடைந்த வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அறைகூவலினை ஏற்று, 70 ஆம் ஆண்டில் முகிழ்ந்த புதிய தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்ட, விடுதலைப் போராட்டத்தின் கூர்முனையாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருப்பெற்றனர்.

அவர்களை பலமிழக்கச்செய்து அழிப்பதுடன், போராட்டத்தின் ஆதார சக்தியாகிய மக்களை சிதைப்பதையும் தங்கள் நோக்காக இவர்கள் கொண்டுள்ளனர் என்பதும் தற்போது சந்தேகமற நிரூபணமாகியுள்ளது.

1960-களின் தொடக்கத்தில் சிங்கள அரசினால் முன்னெடுக்கப்பட்ட, தமிழர் தாயகத்தினை சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் சிறைப்பிடித்து சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று மணலாறு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், வன்னி, என விரிவடைந்து மக்கள் வாழ்விடங்கள் துண்டாடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டும், குரல்வளை நசுக்கப்பட்டும், சிறிலங்கா அரசின் இராணுவமயமாக்கலில் சிக்கித் திணறுகின்றது.

இந்த வகையில் ஈழத் தமிழர்களின் தேசியத்திற்கான அடையாளத்தையும், வாழ்வுரிமைக்கான அத்திவாரத்தையும் இல்லாது ஒழிப்பதில் மேலும் நுட்பமான, நிறுவனமயமான கட்டமைப்புகளுக்கு ஊடாக பல்வேறு இன அழிப்பு வழிமுறைகளை சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக கையாள்கின்றது.

எமது தாயகத்தினையும் எம்மக்களையும் நிரந்தர அடிமைகளாக்கி மேலாதிக்கம் செலுத்துவதற்காக, தாங்கள் வரைந்துள்ள ஓர் அடிமைச் சாசனத்தினை திணிக்கும் நோக்குடன் தமிழர்க்கான ஒரு பொம்மைத் தலைமையை உருவாக்கவும் அவர்களுக்கு அனைத்துலக அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கவும் சிறிலங்கா அரசும் அதற்கு துணைபோகும் பிராந்திய சக்திகளும் முற்படுகின்றன.

இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ச் சமூகமாகிய நாம் இத்தகைய பல சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றை கடந்து செல்லவும் வரலாறு எமக்கு இட்ட கட்டளையினை நிறைவேற்றவேண்டிய உன்னதமான தருணத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம்.

ஈழத்தமிழர்கள், சிறிலங்கா அரசு, என்ற இருமுனை நிலைமாறி அனைத்துலகம் என்னும் மூன்றாவது தரப்பையும் உள்வாங்கியதாக எமது விடுதலைப் போராட்டம் பரிமாணம் பெற்றுவிட்ட வரலாற்றுக் காலகட்டத்திலேயே நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

தொடக்கத்தில் ஈழப் போராட்டத்திற்கான பின்பலமாக மட்டுமே நோக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர் வாழும் தேசங்கள், தற்போது போராட்டத்தை புதிய பரிணாமத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பிரதான அரசியல் தளமாகவும் மாறியிருக்கின்றன.

அத்துடன் போராட்டத்தை தாங்கி வலுவூட்டி, விடுதலைக்கான நிலைநோக்கிய பயணத்தின் பிரதான உரித்தாளிகளாகளாகவும் புலம்பெயர் தமிழர்கள் மாறியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் தாயகத்தில் அல்லலுற்று, அடிப்படையான மானிடத்தேவைகளும் மறுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்மக்கள் சார்பாக, இனப்படுகொலையில் இருந்தும் கொடூர போர் அனர்த்தத்தில் இருந்தும் விலகி ஐனநாயக விழுமியங்கள் கொண்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத் தமிழர்களாகிய நாம், ஒன்றிணைந்து குரல் எழுப்புவதும் தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் தர்க்கத்தினையும் தார்மீகத்தினையும் உலகின் முன் முரசறைந்து கூறுவதும் மிக அவசரமானதும் அவசியமானதுமான பணியாகவுள்ளது.

எந்தவொரு வேண்டுகோளும் உரிமைக்குரலும் அனைத்துலகத்தின் மனச்சாட்சியினை தட்டி எழுப்பி அதனூடாக அவர்களின் அங்கீகாரத்தினைப் பெறவேண்டுமாயின் அது பரந்த மக்களிடம் இருந்த திரண்டு எழுந்த அபிப்பிராயமாகவும் ஒருங்கிணைந்த குரலாகவும் கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய நடைமுறையில் இருந்து நமது போராட்டமும் வழிமுறையும் விதிவிலக்கு பெறமுடியாது.

ஆகவே, ஐனநாயகப் பண்பும் அதுசார்ந்த நடைமுறையும் எம்மிடம் இருந்தது என்பதையும், அந்த வழிமுறையிலேயே மக்கள் ஆணைபெற்ற எமது அரசியல் முடிவுகளை எடுத்தோம் என்பதையும் தெளிவுபடுத்தும் நோக்கத்துடனேயே இப்பேரவையை இங்கு கூட்டினோம்.

அந்தவகையில் புலம்பெயர் தேசங்களில் பேணப்படும் கட்டற்ற ஜனநாயகப் பண்புகளுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கான வெளிப்படைத்தன்மைக்கும் அமைவாக புலம்பெயர் தேசம் வாழ் ஈழத் தமிழர்களாகிய நாமும் அனைத்துலகத்தினை சாட்சியாகக்கொண்டு மீள்பிரகடனம் ஒன்றை வெளியிடுவதற்காகவே பேரவையாக இங்கு குழுமியுள்ளோம்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் நம்மில் பலரும் வாக்களித்ததின் மூலம் வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் ஆணையாக மாற்றினோம்.

அந்த ஆணையை நாம் வழங்கியதன் பின்னால்தான் பேரலையாக நாம் புலம்பெயர நிர்பந்திக்கப்பட்டோம்.

அதேபோல் மீளவும் புலம்பெயர் தேசத்தில் அப்பிரகடனத்தை வழிமொழிந்து வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் அவா இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக முன்மொழிவதுடன், முன்னணிக்கு வந்துள்ள எம் இளைய தலைமுறையினரிடம் பட்டயமாக இதனைக் கையளிக்கும் வரலாற்றுக் கடமையையும் நாம் இன்று நிறைவேற்றவுள்ளோம்.

அரசியல் சுதந்திரம், பொருளாதார சமத்துவம், சமூக சகோதரதத்துவம் என்னும் உயரிய விழுமியங்களினை மனித சமுதாயத்திற்காக உவந்தளித்த பிரெஞ்சு தேசத்தின் தலைநகராம் பாரிஸ் மாநகரில் 2009 ஆம் ஆண்டு 18 ஆம் நாளில் கூடியுள்ள ஈழத் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நாம் இன்று நிறைவேற்றப்போகும் தாயகத்திற்கான தேசியக்கடமையினைப் பற்றிய பூரண விளக்கம் கொண்டவர்களாகவும், தெளிந்த அறிவுடனும், முழுமையான மனவிருப்பத்துடனும் பங்குபற்றுகின்றோம் என்ற உறுதியுடன் இம்மாநாட்டை சிறப்புற நடாத்துவோம் என்றார் அவர்.

Comments