நீர்த்துப்போன ஈழப்பிரச்னை - ஓர் அலசல்

நியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் கையாண்டு, பாதிக்கப்படுபவர்களை விட மேலதிக மன உளைச்சலை பாதிக்கப்படுவோருக்காக போராடுபவர்கள்மீது திணிப்பது என தான் எப்போதும் பேரினவாதத்தின் தோழன்தான் என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது.

அப்பாவி முத்துக்குமரனின் அறியாமையிலிருந்தே தொடங்குகிறேன். ஈழப்பிரச்னை என்பது தமிழீழத்தில் இருந்து போராடுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அத்தியாவ‌சியம் எனில் தமிழகத்திலிருந்து போராடுபவர்களுக்கு அவசரம், அப்பாவித்தனம், அரசியல் என்கிற சமுக கட்டமைப்பைத் தாண்டியதுதான், தன் இன அழிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது.

ஈழப்பிரச்னைக்காக தமிழகத்தில் இதற்கு முன்னர் எழுந்த எழுச்சி இப்போது இல்லை. எனினும் இப்போதைக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் முன்னர் ஏற்பட்ட எழுச்சிக்கும் பொதுவாக இருப்பது அரசியல் தான் என்பதனை நன்கறிவோம். ஏனெனில் முன்னர் ஏற்பட்ட ஈழப்போராட்டங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளுங்கட்சியான அதிமுக (எம்.ஜி.ஆர்) எவ்வளவுதான் ஈழமக்களுக்காக ஆதரவளித்தாலும் தனக்கு மட்டுமே தமிழ் சொந்தம், தமிழன் சொந்தம், தமிழனின் பிரச்னைகளை தான் மட்டுமே பேசவேண்டும், தனக்காக போராடும் தலைவர் என தமிழனுக்கு என் பெயரே தெரியவேண்டும், தமிழனின் பிரச்னைகளை வைத்து தான் மட்டுமே அரசியல் பண்ணவேண்டும் என்கிறதான பிடிவாதம் அல்லது அடங்கமாட்டாத அச்சத்தின் வெளிப்பாடே எதையும் செய்யும் மடமை திமுகவிடம் இருக்கிறது என்பதை அன்றைய அரசியலில் மட்டுமின்றி இன்றைய நிலைபாடுகளிலும் வெட்டவெளிச்சமாக வெளிப்படுகிறது.

இப்போது அதே திமுக அதிகாரத்தில் இருக்கிறதென்பதால் எப்படி தமிழுணர்வு தன்னைவிட தன்னால் தாழ்த்தப்பட்ட கட்சிகளுக்கு வரலாம், தான் இருக்கையில் தன்னையல்லவா இந்த சில்லுண்டிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எப்படி போரடவேண்டுமென்று கேட்டிருக்கவேண்டும் அப்படி கேட்டிருந்தால் தன் ஆட்சிக்கு ஆபத்துவராமலும் அதே நேரத்தில் தமிழுணர்வு குன்றாமலும் எப்படி யாரிடம் கோரிக்கைவைத்து கடிதம் எழுதி போட்டுவிட்டு நாம் நம்வேலையை பார்ப்பது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு தன் தமிழுணர்வை பங்குபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கதியில்தான் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. காயத்திற்கு மருந்துபோடுவற்கு பதிலாக காயம்பட்ட இடத்தை தடவிக்கொடுத்தால் போதுமா எனன? தன் அதிகாரத்தை வைத்து ஈழமக்களுக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த அளவு போராடுபவர்களை தண்டிக்காமலாவது இருக்கலாம் அல்லவா! அதை விட்டு மனுக்களும், கோரிக்கைகளும், மனித சங்கிலிப் போராட்டங்களும், நிதி சேகரிப்புகளும் என எதற்கும் உதவாத செயல்பாடுகளினால் தன் தமிழுணர்வு அணைந்துவிடாமல் பாதுகாப்பாக நடந்துகொள்வ‌தாக‌ எண்ணி இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ம‌ண்தூவுகிற‌து.

ஈழ ஆதரவுப் பேச்சாளர்களை கைது செய்வ‌தானது ஈழமக்கள் மீது விழும் குண்டைவிட ஆபத்தானது. ஏனெனில் தலையில் குண்டுவிழுந்தால் உடனே இறந்துவிடக்கூடும்! ஆனால் அவர்களுக்காக போராடுபவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அடக்கமுயல்வதும், மீறிப்போராடினால் உன் சகவாழ்க்கை பாதிக்கப்படும், உன் குடும்பம் பாதிக்கப்படும், உன் சொத்துக்கள் பாதிக்கப்படும் அல்லது சேதப்படுத்தப்படும் என மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது ஈழத் தமிழர் தலையில் வண்டிக்கணக்கில் குண்டைப் போடுவதைவிட கொடுமையானது.

ஈழத்தில் இலங்கை பேரினவாதம் இன அழிவைத் தொடங்கினால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் எங்கெல்லாம் ஆதரவு அலைகள் பீறிட்டுக் கிளம்பும் என்று இந்திய உளவுப் பிரிவினர் முன்னதாக தங்கள் எசமானர்களுக்குத் தெரிவித்துவிடுகின்ற‌ன. எனவே இலங்கை அரசிற்கு தங்களால் என்னமாதிரியான உதவிகள் செய்யலாம் என்பதை பல மாதங்களுக்கு முன்னமே நடுவண் அரசும், மாநில அரசும் கூடி திட்டமிடத் தொடங்கிவிட்டன. அப்படி திட்டமிட்டப்படி இரண்டுபேரின‌வாதங்களும் செயல்படவும் தொடங்கிவிட்டன. அதில் நேரடியானது மத்திய அரசு இலங்கைக்கு படைகளையும், கருவிகளையும் அனுப்பிவைத்து முடிந்தமட்டும் தானே முன்னின்று போரை நடத்துவது அதே நேரம் மாநில அரசானது இதற்கு எதிரான குரல்களை நசுக்குவது என திறம்படச் செய்து ந‌டுவ‌ண‌ர‌சுக்கு துணை நிற்கிற‌து.

போராட்டம் கிளம்பும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்த தளங்கள் மூன்றுதான்: 1.மாணவர் போராட்டம், 2. வழக்கறிஞர்கள் போராட்டம், 3. எதிர்கட்சிகளுடன் தன்னால் எப்போதும் ஒதுக்கப்படுகிற தமிழார்வல‌ர் அமைப்புகள். எனவே இதை நன்கறிந்த ஆளும் அதிகாரம் இவற்றை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நீர்த்துப்போகச் செய்ய அனைத்து திட்டங்களையும் செவ்வனே தீட்டி அதன்படி நடைமுறைபடுத்தியும் வருகிறது. ஆளும் அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்தவைகள் தான் தீக்குளிப்புகள்! நல்லவேலையாக அதையும் உடன் தனது திட்டத்தில் இணைத்துக்கொண்டது.

அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்து உலக அளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய திரு.முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு முதலில் ஆடிப்போனாலும் பிறகு சமாளித்துக்கொண்டு தனது ஆதரவாளர்களைக் கொண்டு உடலை கைப்பற்றி மீண்டும் எரித்து சாம்பலையும் கரைத்துவிட்டு ஓய்ந்தது. இதில் முத்துக்குமாரின் கோரிக்கையான தன் உடலைக் கைப்பற்றி ஈழப்பிரச்னை தீரும்வரை போராட‌ வேண்டும் என்கிறது எப்படி அழகாக மறக்கப்பட்டது என்பதை நன்கறிவோம்.

கூடுதலாக தீக்குளிப்போர் குடும்பத்திற்கு பணம் வழங்கி நீர்த்துப்போக செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் உதவுவதில் உள்ள அரசியலை சற்று ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும். தொடர்ந்து தீக்குளிப்புகள் நடந்தால் அது பணத்திற்காகவே என கொச்சைப்படுத்தி போராட்டம் என்பது நீர்த்துப்போகச் செய்ய தோதாக இருக்குமல்லவா. இருந்தும் முத்துக்குமாரின் பெற்றோர் வாங்க மறுத்ததால் ஆளும் அதிகார வர்க்கம் ஆடிப்போகவில்லை. ஏனெனில் அதுவும் மிச்சமாகிவிட்டது. முத்துக்குமாரை தொடர்ந்து தீக்குளித்தவர்கள் எல்லாம் ஏழைகள்தான். அவனிடம் உணர்வு மட்டுமே இருக்கும் உணவு இருக்காது. நாம் தான் நமது 40 ஆண்டுகால அரசியலில் அதற்குண்டான வேலை எதுவும் செய்யவில்லையே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது. இவர்களுக்கு நட்சத்திரவிடுதியில் எவனுக்காவது ஆபத்தென்றால்தான் முகாமிட்டு பாதுகாப்பு கொடுப்பார்கள். அவர்கள் தேச‌ பக்தர்கள்! அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கவேண்டுமென கிளர்ந்து எழும்பும். இனி எத்தனை தீக்குளிப்புகள் நடந்தாலும் கவலையில்லை என கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே ஆளும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் என்ன என்பது புரிந்து இருக்கும்.

மாணவர் போராட்டம்:

மாணவர் போராட்டம் கிளம்பியதும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவார்ந்த சட்டத்தை நீட்டித் தடுத்து நிறுத்தப் பார்த்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனில் எதற்காக பொருளியல், அரசியல்,சமுகவியல் என பாடத்திட்டங்களை வைத்தார்கள் என விளங்கவில்லை. அதற்கு பதில் அதிகாரவர்க்கத்துடன் கைக்கோர்ப்பது முதல் கழுவி விடுவதுவரை என பாடத்திட்டங்களை அமைத்தால் இவர்களுக்கு நிறைய "வீராச்சாமிகள்" கிடைப்பார்கள் அல்லவா!

மாணவர்களை அடக்குவது அல்லது அவர்களுக்கு விடுமுறை என்கிற பெயரில் களைப்பது அல்லது அவர்தம் பெற்றோர்களை அழைத்து எதிர்காலம் கெடும் என்கிற அறிவுரை என்பதுபோல் அச்சப்படுத்துவது, இறுதியாக கல்லூரி அதிகாரங்களுடன் சேர்ந்து மதிப்பெண் குறைப்பு, ஒழுக்கக்கேடு என மிரட்டுவது வரை அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி இறுதியில் வெற்றியும் கண்டது என்பது தற்போதைய நிலையை வைத்து உணரமுடிகிறது.

வழக்கறிஞர்கள் போராட்டம்:

ஈழத்தமிழர் என்றில்லை எந்த போராட்டங்களாயினும் முதலில் களமிறங்கி பெரும் வீரியத்துடன் போராடுவது வழக்கறிஞர்கள்தான் என்பதை, தன் கடந்த கால அனுபவத்தில் நன்கு உணர்ந்த அதிகார வர்க்கம் வழக்கறிஞர்கள் போராட்டம் உச்ச நிலையில் இருக்கும் போது பொறியில் தேங்காய்வைத்து எலி பிடிப்பதுபோல் சுப்பரமணியம் சாமியை வைத்து நடத்திய நாடகத்தில் மாட்டிக்கொண்ட வழக்கறிஞர்களை அடித்து துவைத்து, இதெல்லாம் ஈழப்போராட்டத்தின் விளைவுதான் வழக்கறிஞர்கள் போராடியதால்தான் அவர்களுக்கு இப்படியானது என்று பிரச்னையை திசைதிருப்பிவிட்டது.

இதற்கு தகுந்தாற்போல் ஆளும் அதிகாரவர்க்கத்தால் மூளைச் சலவை செய்து அனுப்பப்பட்ட "கிருஷ்ணா கமிஷன்" வழக்கறிஞர்கள் மீதுதான் தவறு அவர்கள் ஆளும் அதிகாரத்திற்கு எதிராக போராடி இருக்கவேகூடாது என்கிற ரீதியில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன எழுதிக்கொடுத்ததோ அதை அப்படியே திருப்பிக் கொடுத்து, வழக்கறிஞர்களை கூண்டிலேற்றி வழக்கை மாற்றி அவர்கள் பக்கமே குற்றதை தள்ளிவிட்டது. தற்போது வழக்கறிஞர்கள் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடும்படியானதில் ஆளும் அதிகாரவர்க்கம் மனதுக்குள் கைத்தட்டி ஆராவாரம் செய்வதை இன்றைக்கு ஈழப்பிரச்னையில் வெகுதூரம் போய்விட்ட வழக்கறிஞர்களின் நிலையைப் பார்த்தால் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழுணர்வாளர் போராட்டம்:

சக அரசியல் கட்சிகளின் போராட்டத்தை அடக்குவதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் அவ்வளவு சிர‌மம் எடுத்துக்கொள்ளவிலை. தான் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய உணர்வு தேர்தல் நேரத்தில் கிளம்பினால் அல்லது கிளப்ப்ப்பட்டால் எப்படியும் தமிழின உணர்வும், ஈழப்பிரச்னையும் தானாக நீர்த்துப்போகும் எனறு தெரியாதா என்ன? அதுமட்டுமல்ல வாரிசு அரசியலுக்கு தயாராகிவிட்ட கட்சிகளும், இன்னும் பெருங்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கட்சிகளும், எப்போதும் ஈரத்துணிபோர்த்திய கோழியைப் போலிருக்கும் பொதுவுடமை கட்சிகளும், தன் இருட்டு இதயத்தில் மட்டும் இருக்கப் பழகிக்கொண்ட இதர கட்சிகளும் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்துவிடாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், தமிழகத்தில் தங்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாதிய ஓட்டு அரசியலும் தன்னைவிட்டால் இவர்களுக்கு அண்டிப்பிழைக்க வேறுவழியே இல்லை என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

அதற்குத் தகுந்தாற் போல் அரசியல் ஆதாயம் தேடும் சுயநல கட்சிகளும், அமைப்புகளும் ஈழப்பிரச்னைகளுக்கு போராடுவதைவிட்டு கையை உதறிக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கு ஓட்டு ஆதாயம் சேகரிக்கும்பொருட்டு இறங்கிவிட்டதால் இதற்காகத் தனியே திட்டம் எதுவும் போடாமலேயே நிலைமை தங்களுக்கு சாதகமாவது உணர்ந்து ஆளும் அதிகாரவர்க்கம் தனக்குள்ளேயே கைத்தட்டிக்கொண்டது. இதில் பாதிக்கப்பட்டது உண்மையான தமிழுணர்வுள்ள கட்சிகளும், தமிழுணர்வாளர்களும், தீக்குளித்தவர்களின் குடும்பங்களும், மனதிலும் உடலிலும் காயம்பட்டவர்களும்தான். இதுவும் ஒருவகை தனிமைபடுத்துதலே இதிலும் அதிகார வர்க்கத்திற்கு வெற்றிதான் எனலாம்.

ஊடகங்களின் நிலைப்பாடு:

இப்படிப்பட்ட நிலையில் ஊடகங்களின் பங்கானது எப்படியிருக்கிறது என்பதை பார்த்தோமானால் நமக்கு நாமே நொந்துக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஏனெனில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது என்று நம் ஊடகங்கள் சில நேரம் கூக்குரலிடுவதைப் பார்த்திருக்கலாம் அது எப்போது நிகழ்கிறது என்பதை நாம் சரியாக உணரவேண்டும். எப்போதேல்லாம் தங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவை குரல் கொடுக்கும். மற்றபடி மக்களின் மனதை நிமிடத்திற்கு ஒருதரம் மாற்றும் வல்லமை படைத்தவையாக இருந்தபோதும் பெரும்பாலும் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன திட்டமிடுகிறது என்பதனை வெளிப்படையாக நிறைய ஊடங்கள் வெளிப்படுத்துவதில்லை. சில வேலைகளில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன சொல்லிக்கொடுக்கிறதோ அதை பல ஊடகங்கள் பறை சாற்றுகின்றன எனலாம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைநிலையையும், அவர்களுக்காக போராடுபவர்களின் நிலைகளையும், அதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் போட்டுவைத்திருக்கும் தடைகளையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடமே இருக்கிறது. மாறாக இப்போது ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது எனில் எந்த ஒரு பிரச்னை கிளம்புகிறதோ அவற்றை சுடச்சுட வியாபாரமாக்கதான் முயற்சிக்கின்றன. எப்போதும் ஊடகங்கள் எழுதியிருக்கும் கதை வசனங்களையே மக்களும் தங்கள் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்கின்றனர். அடுத்த பிரச்னை எழும்வரை ஊடக‌ங்கள் எதை சொல்லுகின்றவோ அதையே நம்புகின்றார்கள். பிறகு ஊடகங்கள் புதிய பிரச்னைகளுக்கு தாவினால் மக்களும் நேற்றைய பிரச்னைகளை அடியோடு மறந்துவிட்டு அதை அம்போவென விட்டுவிட்டு புதிய பிரச்னைக்கு தாவிவிடுகின்றனர்.

இதனால் இதை உணர்ந்த ஆளும் அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளும், வியாபார சந்தையும் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்திக்கொண்டு தாங்கள் கூறும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கின்றன. உண்மையில் இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாம் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கற்பனையில் மிதப்பதை தங்களின் கற்பனை வளத்துடன் இணைத்து அதை அச்சாக்கி அதே மக்களிடமே விற்று காசாக்கி அந்த மக்களே அறியாவண்ணம் அவர்களை விவாதிக்க வைக்கின்றன.

இதில் மக்களின் மனநிலையும் ஊடகத்துடன் ஒத்துப்போகின்றன எனலாம். ஏனெனில் ஊடகங்கள் எதைப்பற்றி பேசுகிறதோ அதுதான் மக்களுக்கும் வேதவாக்காக அமைகிறது. மக்கள் தங்கள் நிலையிலிருந்து சிந்தித்து விவாதங்களையோ, போராட்டங்களையோ நடத்துவதென்பது இயல்பில் நடைபெறாமலேயே போய்விட்டது எனலாம். ஏனெனில் ஊடகங்கள் தங்கள் வியாபாரங்களை பெருக்கிக்கொள்ள இன்று கும்பகோணம் குழந்தைகளை பற்றி எழுதினால் மக்களும் அதையே பேசுவார்கள். அதேபோல் அரசியல் ஊழல்கள், தருமபுரி பேருந்து எரிப்பு, சக்கீலா படம், அரசியல் கொலைகள், மானாட மயிலாட, தொலைக்காட்சி தொடர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று இவற்றைப்போலவே ஈழப்பிரச்னையும் பேசப்படுகிறது.

எல்லாவற்றிக்கும் ஊடகத்தையே நம்பும் மக்களும் ஊடகம் தவிர்த்த சிந்தனைகளில் ஈடுபடுவதேயில்லை. குறிப்பாக ஆளூம் அதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது கட்சிகளோ தாங்கள் பிரச்னைகளை எந்த கோணத்தில் பார்க்கின்றவோ அதே கோணத்தில் தான் மக்களிடையே பரப்புகின்றனர்.

இத்தனை தடைகளையும் மீறி பெரும் பரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த ஈழமக்களுக்கான போராட்டங்கள், விவாதங்கள் இன்று தேர்தல் என்கிற மனநிலைமாற்று அரசியலால் நீர்த்துப்போய் கிடக்கின்றன. இந்த தொய்வைப் பயன்படுத்திக்கொண்ட ஆளும் அதிகாரவர்க்கமும் ஈழப் பேரினவாத அரசுடன் கைக்கோர்த்து இன அழிவை இந்த தேர்தலுக்குமுன் முடித்துவிடுமாறு அர‌ச தூத‌ர்க‌ளை அனுப்பி இர‌க‌சிய‌ம் சொல்கிற‌து.

கட்சிமாறல், ஆட்சிமாறலுக்கு வழிவகுக்கலாம்; அதுவே ஈழத்தமிழர்களுக்கு விடிவேற்படுத்துமா? ஈழ ஆதரவுக்கு கைகோர்த்துவிட்டு எதிரெதிர் அணிகளில் அடைக்கலம் கொண்டு வாக்காளர்களை ஒருபுறம் குழப்பிவிட்டு அதிலும் குளிர்காய எத்தனிக்கும் இந்த அரசியல் சாக்கடையின் முடைநாற்றம் ஈழத்தமிழர்களின் நாசிகளில் அருவெறுப்பாய், விடமாய் பரவிக் குமட்ட வைத்துள்ளது!

இந்த நாடகங்களை நமது வாக்காளர்கள் மெளனமாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய?

ஈழத்தமிழருக்காய் அவர் தம் விடிவுக்காய் யாருமில்லையே எனற ஏக்கத்தோடும் வேதனையோடும் இன்றைக்கு வாக்காளர்கள்!

நாளை வாக்களிக்கும்போது கண்டிப்பாக இது எதிரொலிக்கும்!.

- கவிமதி, துபாய் (kavimathy@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Comments