ஈழப் பிரச்னையில் ஐ.நா.சபை யார் பக்கம்?

இலங்கையில் இனப்படுகொலை, தற்காலிகப் போர் நிறுத்தம் என்று இந்தியா, கனடா போன்ற சில நாடுகளே குரல் கொடுக்க, அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் மௌனமாக இருப்பது ஏன்?

இதற்கான பதிலை ஐ.நா. விவகாரங்களை கவனிக்கும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், ''ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் மட்டுமே இத்தகைய தீவிரமான விஷயங்களில் இலங்கை அரசைக் கண்டிக்க முடியும்;

பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். இந்த கவுன்சிலில் 'இலங்கையில் போர் நிறுத்தம்' என்று ஆரம்பித் தாலே, சீனா தன் 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி, 'இது இலங்கையின் உள் நாட்டு விவகாரம். அதில்

தலையிட ஐ.நா. சபைக்கு அதிகாரம் இல்லை' என்று தடைபோடுகிறது. ஐ.நா. விதிகளின்படி ஐந்து நிரந்தர நாடுகளில் ஏதாவது ஒன்று வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால், கேஸை பற்றி விவாதிக்க முடியாது. நெதர்லாந்து, நார்வே போன்ற ஐரோப் பிய நாடுகள் பலமுறை இலங்கைப் பிரச்னையை பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயன்று தோற்றதற்கு இதுவே காரணம்.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இல்லாமல் போனாலும், மிகவும் மதிக்கப்படும் இந்தியா இதுவரை தன் சுண்டு விரலைக்கூட இலங்கைப் பிரச்னைக்காக அசைக்கவில்லை. இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் ஐம்பது ஆண்டுகளாக புலி வால் பிடித்த நாயர் கதையாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தைக் கையிலெடுத்தால், காஷ்மீர் பிரச்னையைப் பெரிதாக்க பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகியவை வரிசைகட்டி நிற்கும். 'காஷ்மீர், இந்தியாவின் பிரச்னை. அதை சர்வதேசப் பிரச்னை ஆக்கக் கூடாது என்று கூறும் இந்தியா, இலங்கைப் பிரச்னையில் தலையிடாமல் இருப்பதை பிரேமதாசா முதல் ராஜபக்ஷேவரை ரசித்தபடிதான் இருக் கிறார்கள்...'' என்றார்.

சீனாவுக்கு இலங்கை மீது என்ன இத்தனை கரிசனம்?

இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஆயுத நாடுகள். இரண்டும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டது சீனாவுக்கு அதிர்ச்சி. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அதிகமாக உலா வருவதற்கும் இந்தியாவே காரணம் என்று சீனா நம்புகி றது. தெற்காசியாவில் தன் பலத்தைக் காட்ட நினைக் கும் சீனா, இலங்கையின் உதவியை நாடியது. ஏராள

மான போர் விமானங்கள், உப கரணங்களை வட்டி இல்லாக் கடனாகவும் மானியமாகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வழங்கியது. பதிலாக திரிகோணமலை துறைமுகத்தைத் தாரை வார்த்துத் தரும்படி கேட்டது. உலகமயமாக்கல் என்ற பெயரில் திரிகோணமலை துறைமுகத்தை மேம்படுத்து வதாகக் கூறி, அதில் தன் விமானப்படை டிவிஷன் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்காவும் அஞ்சுகிறது. இந்த விஷயத்தில் இலங்கை-பாகிஸ்தான்-சீனா ஆகிய நாடுகள் கூட்டாகச் செயல்பட்டுவருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தடம்புரள வைக்கும் சக்தி சீனாவிடம் இருக்கிறது. ஆகவே, அமெரிக்காவும் ஐ.நா. சபையும் இலங்கைப் பிரச்னையில் அறிக்கை விடுவதைத் தவிர்த்து, ஏதும் செய்ய முடியாது. ஐ.நா. சபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுத்தால், அவர்களைத் தனிமைப்படுத்த இலங்கை முழுமூச்சாகச் செயல்படுகிறது.

ராதிகா குமாரசாமி என்னும் ஈழத்தமிழர் ஐ.நா. சபையின் சிறப்பு தூதுவர் என்ற பெரும் பொறுப்பில் இருந்தார். விடுதலைப்புலிகளை சாடிய அதே நேரம், தன் அறிக்கை களில் இலங்கை அரசின் அட்டூழியங்களையும் படம் பிடித்துக் காட்டினார். அவரை 'புலிகளின் ஆதரவாளர்; பயங்கரவாதிகளிடம் பணம் பெறுகிறார்' என்று பொய்ப் பிரசாரம் செய்து அவமானப்படுத்தியது இலங்கை அரசு. தற்போதைய ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கமிஷன் தலைவராக இருப்பவர் நவநீதம் பிள்ளை. தென்னாப்பிரிக்கத் தமிழரான இவர் ஒரு பிரபல நீதிபதி. இவரும் இலங்கை இனப் படுகொலையை எதிர்க்கிறார் என்று இலங்கை அரசு அவரைப் புலிகளின் ஆதரவாளர் என்று தூற்றிவருகிறது. சீனாவின் ஆதரவும் பணமும் ஐ.நா. சபையில் விளையாடுகிறது. இத னால் பயந்துபோன பல நாடுகள், பல உயரதிகாரிகள் 'நமக்கு ஏன் வம்பு...' என்று பயந்து பின்வாங்கி விடுகிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் இனப்படுகொலை பற்றித் தொண்டை கிழியப் பேசும் ஐ.நா. சபை, இலங்கைப் பிரச் னையில் மௌனம் சாதிப்பதற்கு முதுகெலும்பு இல்லாத பொதுச் செயலர் பான் கி மூன் ஒரு காரணம். முந்தைய பொதுச் செயலர் கோபி அன்னான் மிகவும் கறார் பேர்வழி. பல தடவை இலங்கை அரசைக் காட்டமாக விமர்சித்துள்ளார். சந்திரிகா குமாரதுங்காவைப் பலமுறை கடுமையாகப் பேசியுள்ளார்.

''உலக அரங்கில் இந்தியாவின் நிலை பரிதாபத்துக்குரியது. அதைக் கண்டு சின்னஞ்சிறு நாடுகளே கேலி செய்கின்றன. புலிகள் இயக்கத்தைத் தடை செய்து பிரபாகரனைக் குற்ற வாளி என்று அறிவித்த பிறகு, எப்படி போர் நிறுத்தம் கேட்க முடியும்? அதேசமயம் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் பிரதமர் அலுவலகம் அவ்வப்போது எங்களை 'ஏதாவது செய்யுங்கள்' என்று அல்லாடுகிறது. வாயைத் திறந்தாலே இலங்கை எங்களை 'புலிகளை ஆதரிக்கிறீர்களா' என்று மடக்குகிறது. ஈழத் தமிழர் பிரச்னை பற்றிப் பேச முடியாமல் வாய்ப் பூட்டு போட்டுவிடுகிறது'' என்று புலம்பினார் இந்திய வெளியுற வுத்துறை அதிகாரி ஒருவர்.

அமெரிக்காவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்டு பயந்த இலங்கை அரசு, PATTON BOGGS என்ற வாஷிங்டனைச் சேர்ந்த மிகப் பிரபலமான லாபி (LOBBY) நிறுவனத்தை மாதம் எண்பதாயிரம் டாலர்கள் (சுமார் நாற்பது லட்சம் ரூபாய்) சம்பளம் கொடுத்துப் பணியில் அமர்த்தியுள்ளது. இவர் களின் முழுநேரப் பணி அமெரிக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களை 'நன்கு கவனித்து' இலங்கை அரசுக்கு எதிராக அறிக்கைகள் கண்டனங்கள் வெளியாகாமல் பார்த்துக்கொள்வதுதான். புலிகளும் இதில் சளைத்தவர்கள் அல்ல. ரஷ் ஹோல்ட், பிராட் ஷெர்மன் போன்ற காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களை இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பச் செய்தார்கள். கனடாவில் வாக்குரிமை இருக்கும் ஈழத் தமிழர்கள் தங்கள் எம்.பி-க்களை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார்கள். பெருமளவு தேர்தல் நிதியும் திரட்டித் தருகிறார்கள்.

இப்படி இலங்கைப் பிரச்னையில் ஐ.நா. சபை, அமெரிக்க அரசு ஆகியவை கையைப் பிசைந்து கொண்டிருக்க... இலங்கையும் அதன் நேச நாடுகளும் கைகொட்டி ரசித்துக் கொண்டிருக்க... பாவம், வெந்து மடிவதோ பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் என்பதுதான் வெட்கக்கேடான விஷயம்

நன்றி:விகடன்

Comments