நோர்வேயில் ஆர்ப்பாட்டம்:ஒஸ்லோவில் போக்குவரத்துக்கள் இடை நிறுத்தம்!

நோர்வே வாழ் தமிழ் மக்களினால் இன்று ஒஸ்லோவில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையினை உடனே நிறுத்தக் கோரியும், போர் நிறுத்தம் உடனே செய்யவேண்டும் எனக்கோரியும், தமிழீழத்தினை அங்கிகரிக்க கோரியும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

(வீடியோ இணைப்பு)

வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அமைதியாகப் பாராளுமன்றத்தின் முன்பாகத் தொடங்கிய ஊர்வலம் யாராலும் கவனத்தில் கொள்ளப்படாததால் ஆவேசம் அடைந்த இளையோர்கள் ஒஸ்லோவின் முக்கிய வீதியில் அதாவது பாராளுமன்ற வீதியில் குதித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒஸ்லோ நகர முக்கிய பாதை எந்தவிதமான போக்குவரத்தும் நடைபெறமுடியாதவாறு தடைப்பட்டது. பேரணி நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர் மக்களைக் கலைந்து செல்லுமாறு கூறியும் யாருமே அசையாது அந்த வீதியில் அமர்ந்து விட்டனர்.

காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசப்போவதாக மிரட்டியும் தமிழ் இளையோர்கள் பயப்படவில்லை. பேரணியை அடக்கமுடியாமல் காவல்துறையினர் ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டதாகவும் அறியக்கூடியதாக இருந்தது. மிகக்குறுகிய நேரத்தில் அறிவித்தல் விடுத்தும் கிட்டத்தட்ட 1500 தமிழ் மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தள்ளனர்.

தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் தெரிவிக்கையில் அமைதிவழியில் இனிமேல் போரடி எந்த விதமான பிரயோசனம் இல்லையென்றும் எமது உணர்வை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லையென்றும் கூறினார் ஆகவே தமிழர்கள் தொடர்ந்தும் இப்படியான கவனயீர்ப்புப் போரட்டங்களை மேற்கொண்டால் மட்டுமே ஊடகங்களும் திரும்பிப்பார்ப்பதாகக் கூறினார.;

இதைத் தொடர்ந்து பேரணியில் சென்ற சில இளையோர்கள் E18 என்ற ஐரோப்பிய மத்திய வீதியையும் தடைப்படுத்த முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் பின்பு சில நிமிடங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்ப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது.

இன்றைய பேரணி பற்றிய செய்திகள் உடனடியாக எல்லா நோர்;வேஜிய ஊடகங்களிலும் வெளிவந்திருந்தமை கூறப்படக்கூடிய விடயமாகும். அனைத்து நோர்வேஜிய செய்தித் தளங்களிலும் பேரணி பற்றிய செய்திகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

(வீடியோ இணைப்பு)

Comments