முன்னர் நிவாரணத்துக்கான என வந்த கப்பல்களை ஆயுதக்கடத்தல்களுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதரகம், இந்த விடயம் தொடர்பாக தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தில் நாம் அக்கறை கொண்டிருக்கின்றோம். இக்கப்பல் தொடர்பாக பாரதூரமான கேள்விகள் உள்ளன. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் எமக்குத் தெரியும்" என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் இந்தக் கப்பல் நுழைந்ததும் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என வெளியான செய்திகளையும் தூதரகப் பேச்சாளர் மறுத்திருக்கின்றார். இந்தக் கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்பதையிட்டு அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.
கப்பல் சோதனை செய்யப்பட்டு மனிதாபிமான உதவிகள் மட்டுமே கப்பலில் உள்ளது என பிரித்தானிய அரசாங்கம் உறுதிமொழி தந்தால் அதனை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், சிறிலங்கா அரச தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்களை கப்பலில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்கள்.
மருந்து, குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, மா போன்றனவே இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்படுவதாகவும், சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கே இவை விநியோகிக்கப்படும் எனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
'வணங்கா மண்' கப்பலில் உள்ள அனைத்துக் கொள்கலன்களும் பிரித்தானிய அதிகாரிகளால் சோதனையிடப்பட்டவை எனவும் தெரிவித்த அவர், இவற்றை அனுமதிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
லண்டனில் இருந்து வன்னிக்குப் புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' கப்பலில் ஏற்றப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்காக அல்ல தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவே ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது ஒரு பாரதூரமான கரிசனைக்குரிய விடயம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளது.
Comments