ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை! இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்பேகாது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.
அக்கடிதத்தின் முழுவடிவம்:-
வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,
தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,
வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,
அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.
"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.
நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.
நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.
உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?
பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.
இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.
உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.
இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.
ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.
"ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. "இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.
தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.
என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.
வாழ்க தமிழ்
வெல்க தமிழர்
தமிழர்தான் புலிகள்
புலிகள்தான் தமிழர்
எவர் வந்து தடுத்தாலும்
விரைவில் மலரும் தமிழீழம்
இப்படிக்கு,
ஒரு தமிழிச்சி.
Comments