சுவிசில் பரப்புரைப் பொறுப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் உண்ணாநிலை போராட்டம்

சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாலும் நன்கு அறியப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் பரப்புரைப் பொறுப்பாளரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளருமான கிருஸ்ணா அம்பலவாணர் நீர் ஆகாரம் கூட அருந்தாது இன்று உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

பேர்ண் நகரில் உள்ள Hirschengraben, Bern (வெளிவிவகாரத்துறை அமைச்சின் அலுவலகத்தின் அருகில்) இன்று திங்கட்கிழமை காலை 10:45 நிமிடத்துக்கு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றார்.

ஈகச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக சுவிசின் பல மாநிலங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாக சுவிசில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.





- வன்னியில் தொடரும் இன அழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு

- வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி

- சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சிறப்பு விவாதத்துக்கு முயற்சி

- பிரிந்து செல்வதா இல்லையா என ஈழத் தமிழரின் கருத்தறிய ஐ.நா. தலைமையிலான பொது வாக்கெடுப்பு

- இவை எதுவும் சாத்தியமில்லாதவிடத்து, தமிழரின் சுயநிர்ணய உரிமையை சுவிஸ் அரசு உட்பட அனைத்துலக சமூகம் அங்கீகரித்தல்

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே கிருஸ்ணா அம்பலவாணர் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சுவிசின் பல மாநிலங்களிலும் இருந்து மக்கள் வருகை தருவதற்கு வசதியாக பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் 078 736 18 38 அல்லது 078 870 33 05 ஆகிய செல்லிடப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பேருந்து பயண விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.





உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கிய கிருஸ்ணா அம்பலவாணர் தனது உண்ணாநிலைப் போராட்டத்துக்கான காரணத்தினை விளக்கி சுவிஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு எழுதிய அறிக்கையின் விபரம்:

இன்று இலங்கைத் தீவில் உள்ள தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிகப் பெரும் மனித அவலம் இந்த உலகின் மானிட நாகரிகத்தின் வரலாற்றில் மீண்டும் குருதிக் கறைபடிந்த பக்கங்களாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழ்க் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பிராந்திய, பூகோள அரசியலின் நலன்களுக்காக வரலாற்றின் மறக்கப்பட்ட இன அழிப்பின் சாட்சிகளாகி உள்ளனர்.

இதுவரை தமது சக மானிட வர்க்கத்தின் அழிவுக்காக குரல் கொடுக்காத அனைத்துலகத்தின் மனச்சாட்சியைத் தொடும் ஓர் அமைதி வழி முயற்சியாக நான் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொள்ளத் துணிந்துள்ளேன்.

தமிழர் தாயகத்தில் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சியின் ஓர் பகுதியாக இதனை தொடங்குகின்றேன்.

இந்த வருட தொடத்தில் இருந்து இன்றுவரை மிகக் குறுகிய காலப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இணைத்தலமை நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சிறிலங்காவின் இறைமை மற்றும் பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை ஒடுக்கும் சிறிலங்கா அரசுக்கு துணை நிற்கின்றனர்.

அனைத்துலகத்தின் இப்போக்கு தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுவாக ஆழப்பதிந்துவிட்டது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமது பாரம்பரிய தாயகத்தில் சுதந்திரமாக தமது அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மானிடனுக்கும் உரித்தான உயிர் வாழுவதற்கான உரிமை கூடத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக சமூகம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக காட்ட முயல்வது தமிழ் மக்களின் மனங்களை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது.

இன்று இந்தியாவும் இணைத்தலைமை நாடுகளும் தமது போக்கினை மாற்றிக்கொள்ளா விட்டால் இலங்கைத்தீவில் தமிழர் தாயகம் மீண்டும் ஓர் செர்பனிகாவையும் ருவாண்டாவையுமே உருவாக்கத் துணை நிற்கும்.

இன்று தமிழர் தாயகத்தில் அனைத்துலக ரீதியில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் சிறிலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றமை குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது மிகவும் கடும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கருவறையில் இருக்கும் குழந்தையில் இருந்து அப்பாவிச் சிறார்கள் நோயாளிகள் அனைவருமே கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகள், மக்கள் வாழ்விடங்கள், அகதி முகாம்கள், பாடசாலைகள் அனைத்துமே வான் மற்றும் ஆட்லறி குண்டு வீச்சுகள் மூலம் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்ணக்கில் மக்கள் மிகவும் அவலமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறானதோர் மனிதப் பேரழிவு தமிழர் தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அனைத்துலக சமூகம் இம் மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது தார்மீகக் கடப்பாட்டை புறக்கணிக்க முடியாது.

சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ உதவிகளை நிறுத்துதல், அனைத்துலக ரீதியான தீவிர இராஐதந்திர முன்முயற்சிகளை முன்னெடுத்தல் மூலமாக இப்பேரவலம் நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட முடியும் எனத் தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சுவிஸ் அரசாங்கம் ஜெனீவா உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக முன்நிற்கும் அரசு என்ற முறையிலும் தமிழீழ விடுலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தும் இடையிலான பேச்சுகளை தனது நாட்டில் முன்னெடுக்க துணை நின்றதன் அடிப்படையிலும் நாம் சுவிற்சர்லாந்து அரசினை இந்த அனைத்துலக இராஐதந்திர முன்முயற்சிகளுக்கு ஊக்கமளித்து இம் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தனிமனித விழுமியங்களையும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதநேயச் சட்டங்களையும் போற்றிப்பேணும் சுவிஸ் அரசு எனது சாகும் வரையான உண்ணாநிலைப் போரை இடைமறிக்காது எனது அகிம்சை வழி தழுவிய முயற்சிக்கு ஒத்துழைப்புடன் செயற்படும் என நானும் எமது மக்களும் உறுதியாக நம்புகின்றோம்.

இது எனது தனி முயற்சிக்கப்பால் இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் ஒன்றுபட்ட ஒருமித்த நீதிக்கான அமைதிவழிப் போராட்டம் என்பதை சுவிற்சர்லாந்து அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என அனைத்து தமிழ் மக்களின் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறானதோர் புறச்சூழலில் பின்வரும் கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்துக்கும் குறிப்பாக சுவிற்சர்லாந்து அரசுக்கு முன்வைத்து நான் நீராகாரம் இன்றி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

- வன்னியில் தொடரும் இன அழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு

- வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி

- சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சிறப்பு விவாதத்துக்கு முயற்சி

- பிரிந்து செல்வதா இல்லையா என ஈழத் தமிழரின் கருத்தறிய ஐ.நா. தலைமையிலான பொது வாக்கெடுப்பு

- இவை எதுவும் சாத்தியமில்லாதவிடத்து, தமிழரின் சுயநிர்ணய உரிமையை சுவிஸ் அரசு உட்பட அனைத்துலக சமூகம் அங்கீகரித்தல்

இப்படிக்கு
உண்மையுடன்,
கிருஸ்ணா அம்பலவாணர்.

மேற்படி அறிக்கை உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கிய கிருஸ்ணா அம்பலவாணரால் மக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments