தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து அரச அலுவலகங்களையும் முடக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து அரச அலுவலகங்களையும் முடக்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டத்தை ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றக் கோரியும், இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவுனர் இராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பா.ஜ.கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், திருமதி தமிழிசை சவுந்திரராசன், பஷீர் அகமது, தாவூத் மியாகான், தியாகு, மணியரசன் உள்ளிட்ட பெருந்திரளான இன உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய வைகோ, டில்லியில் உள்ளவர்கள் தமிழகத்தைக் கலவர பூமியாக வைத்திருக்கத் திட்டமிட்டிருக்கின்றனர் எனக் குற்றம் சாட்டினார். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க எந்தத் தியாகத்தையும் செய்ய தொப்புள்கொடித் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments