வவுனியா முகாம்களில் 10 வயோதிபர்கள் மரணம்: யாழ். முகாமில் இரு வயோதிபப் பெண்கள் பட்டினியால் பலி

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்து அங்குள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கும் வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் கடந்த திங்கட்கிழமை மட்டும் 10 வயோதிபர்கள் மரணமடைந்திருப்பதாச் சுட்டிக்காட்டியுள்ளன.

நேற்று திங்கட்கிழமை இரவு வவுனியா முகாம்களில் இறந்த 10 வயோதிபர்களின் உடலங்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சவச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 1 ஆம் நாள் முதல் திங்கட்கிழமை வரையிலான நான்கு நாட்களில் மட்டும் 30 வயோதிபர்கள் வவுனியா முகாம்களில் இறந்துள்ளார்கள்.

இவ்வாறு மரணமடைந்த வயோதிபர்களுடைய உடலங்கள் அனைத்தும் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைச் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வயோதிபர்களில் சிலரது உறவினர்கள் வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், உடலங்களைப் பொறுப்பேற்கவோ மரணச் சடங்குகளைச் செய்வதற்கோ வசதிகளற்றவர்களாக அவர்கள் உள்ளனர்.

கடந்த சில வார காலப்பகுதியில் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களில் சுமார் இருநூறு வரையிலானவர்கள் முகாம்களில் மரணமடைந்த நிலையில் மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்களுடைய உடலங்கள் அனைத்தும் பூந்தோட்டத்தில் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்டன.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் நோய், சரியான பராமரிப்பு இன்மை, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உள ரீதியான பாதிப்பு போன்ற காரணங்களினால் வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் நாளாந்தம் 5 பேராவது பட்டினி காரணமாக மரணமடைவதாக வவுனியா நீதவானுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட,போசாக்கின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பலரும் வவுனியா மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதேவேளையில் யாழ்ப்பாணத்திலில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டு வயோதிபப் பெண்கள் பட்டினி காரணமாக மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

மிருசுவில் றோமன் கத்தோலிக்க தேவாலயம், கைதடி சைவச் சிறுவர் இல்லம் என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு வயோதிபர்களே மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இருவருடைய மரணங்கள் தொடர்பாகவும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ள நீதவான், அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் எனத் தெரிவித்திருப்பதாகவும் யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

மரணமடைந்த இருவரும் இராமலிங்கம் அன்னபூரணம் (வயது 78), செல்லையா பார்வதிப்பிள்ளை (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments