இன மானம் வென்றது என்று எதிர்வரும் 16 ஆம் நாள் இந்த உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்: இயக்குநர் சீமான்
திண்டுக்கல்லில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தமிழீழ ஆதரவு இயக்கப் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சென்னை வரவேண்டிய சோனியா காந்தி நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டார்.
சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பரிசு கொடுத்தோம். சோனியா காந்தியை இந்தியாவின் மருமகளாக ஏற்றுக் கொண்டோம். ஆனால், அவர் தமிழ் மக்களுக்கும், அவரின் மாமியாருக்கும் துரோகம் செய்து விட்டார்.
இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் இழவு வீட்டில் காங்கிரஸ்காரர்கள் வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் படும் அவதியால் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் மனநோயாளர்களாக மாறி விட்டனர். இந்தப் பெருமை காங்கிரஸ் கட்சியையே சேரும். இங்குள்ள காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள் ஒன்றுகூடி இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஒரே ஒரு நன்மையை எடுத்துக் கூற முடியுமா?
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணத்தை கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என நினைத்துக்கொண்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பணம் நம் பணம். நம்மிடம் கொள்ளையடித்த பணம். ஆனால், இன உணர்வை வாக்குகளில் காட்டுங்கள்.
இந்தத் தேர்தலில் இனமா, பணமா என மெய்ப்பிக்க வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. இனம்தான் வென்றது என்று 16 ஆம் நாள் நாம் உலகுக்குத் தெரிய வைக்க வேண்டும். அதற்காக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் முன்னதாக உரையாற்றிய திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, காங்கிரஸ்கட்சி 1962 தொடக்கம் தமிழகத்திற்கு துரோகம் செய்து வந்துள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என தமிழக உரிமைகளை காங்கிரஸ் கட்சி காவு கொடுத்துள்ளது.
6 மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் போரை நிறுத்தியிருந்தால் ஒரு லட்சம் தமிழர்கள் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள் என்று கூறினார்.
முன்னதாக இயக்குநர் ஐந்து கோவிலான் ஒருங்கிணைப்பில் 'கறுப்புக்குரல்' என்ற ஈழத் தமிழர்களின் அவலநிலை பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சிவா, சிபி சுந்தர், சிபி, கவுதமன், அறிவுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சாதிக்கு, மதத்திற்கு போட்ட ஒட்டை இம்முறை தமிழினத்திற்கு போடுங்கள் -சீமான் காணொளி
- சிறையில் இருந்து வந்து தமிழின உணர்வாளர் சீமான் ஆற்றிய நேர்காணல் --காணொளி
Comments