"2,000 தமிழர்கள் இன்று கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூறுவதா?": ஜெயலலிதா கேள்வி

"முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலகம் முழுவதும் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சையும் உலுக்குகின்ற பிரச்சினை. உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய பிரச்சினை. இந்த நிமிடத்தில் கூட, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, எந்த ஒர் உறுதியான முடிவையும் அறிவிக்காமல், கருணாநிதி கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் மக்களின் துயரங்களைப் போக்க, தனி ஈழம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வு என்று நான் பிரகடனம் செய்தேன். அத்தகைய தனி ஈழத்தை அமைத்துத் தர பாடுபடுவேன் என்றும் சூளுரைத்தேன். என்னுடைய இந்த உரிமைக் குரலுக்கு உலகெங்கும் இருந்து வந்திருக்கும் பாராட்டுக்களையும், நல்வாழ்த்துகளையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி, உடனே, தானும் தனி ஈழம் அமைக்க முயற்சிக்கப் போவதாகக் கூறினார். தனி ஈழம் என்பது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து, எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டைக் கூறியது.

இன்றைக்கு தீவுத் திடல் பொதுக்கூட்டத்தில், தனி ஈழம் அமைப்பது குறித்து கருணாநிதி பேசத் தவறியது ஏன்? தனி ஈழத்திற்கான எங்கள் பிரகடனத்தை குறை சொல்லிப் பேசிய கருணாநிதி, ஈழத் தமிழர் நலனுக்காக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கமாட்டார் என்பதற்கு, இன்று அவர், சோனியா காந்தி முன்னிலையில் பேசிய அர்த்தமற்ற, முன்னுக்குப் பின் முரணான, முனகல் பேச்சே சாட்சியமாகிறது.

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது உண்மை தான் என்பதை ஒப்புக் கொண்டார். தனி ஈழம் என்பது சாத்தியமில்லை என்றும் சொன்னார்.

இன்றைக்கு சென்னையில் பேசிய திருமதி சோனியா காந்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், அது தங்களுடைய வெற்றி என்றும் கூறி இருக்கிறார்".

வாக்காளப் பெருமக்களே!

"நேற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் பகுதியில், இலங்கை இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு நாளும் தமிழர் படுகொலை குறித்த செய்தி வந்து கொண்டிருக்கிறது. உண்மை இப்படி இருக்க, நாங்கள் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டோம், அது, எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவதற்கு சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் எப்படி மனம் வருகிறது?

சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் நான் சொல்கிறேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். ஒரு தேர்தலுக்காக, எங்கள் தமிழ் இனத்தை அழிக்காதீர்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், இலங்கையில் தமிழர்களை முற்றிலுமாக அழித்துவிட, சபதம் மேற்கொண்டது போல செயல்படும் ராஜபக்சவுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் நீங்கள். மன்னிக்க முடியாத இந்த துரோகத்தைச் செய்த உங்களை, தலைமுறை தலைமுறையாக எங்கள் தமிழ் இனம் நினைவில் வைத்து தண்டிக்கும்.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்புகிறது, அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று உலகமே மன்றாடியது. கேட்டாரா கருணாநிதி? காதுகளை மூடிக் கொண்டாரே!

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தமிழர்களுக்கு எதிராகத் தான் சென்று முடியும் என்று எல்லோரும் எச்சரித்தோமே, கேட்டாரா கருணாநிதி? கண்களை மூடிக் கொண்டாரே!

இங்கே மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்லுகிறேன். இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழ, அவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்க, உரிமைக் குடிமக்களாக அவர்கள் தலைநிமிர, தனி ஈழம் தான் ஒரே தீர்வு. இது எனது உறுதியான பிரகடனம். இதில் மாற்றம் இல்லை.

எப்படி கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்காள தேசத்திற்குள், இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே ஒரு புதிய நாட்டை, பங்களாதேஷ் என்ற தனிநாட்டை இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கினாரோ, அதைப் போல, இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைப்பேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கொஞ்சமும் நேர்மை இல்லாமல், தேர்தலையும், அரசியலையும் மட்டுமே மனதில் வைத்து, பல நாடகங்களை நடத்தி வரும் கருணாநிதிக்குத் தக்க பாடம் புகட்ட, இலங்கையில் தனி ஈழம் அமைய, அங்குள்ள தமிழர்களின் வாழ்வு சிறக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று, அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர்.

Comments