ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சோனியாவுக்கு 3 இடங்களில் கறுப்புக்கொடி: நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது

இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வருவதைக் கண்டித்து சென்னையில் 3 இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறவிருப்பதை அறிந்த சோனியா சாலை வழியைத் தவிர்த்து உலங்குவானூர்தி வழியாகத் தீவுத் திடல் சென்றார்.

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோன சோனியா காந்தி தமிழகம் வரக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்குத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, திரையுலகத் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம், தமிழக வழக்கறிஞர்கள், தமிழீழ போராட்டக் குழு பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் பழ. நெடுமாறன், பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன், இயக்குநர் ஆர். சுந்தரராஜன், ஓவியர்கள் மருது, வீரசந்தனம், தமிழறிஞர்கள் இறைக்குருவனார், கி.த.பச்சையப்பன், உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

சோனியா காந்தி, ராஜபக்ச மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன், "இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

5 லட்சம் தமிழர்கள் வாழ்விடங்களை இழந்திருக்கின்றனர். தமிழர்களுக்குச் செல்லும் உணவுப் பொருட்களை சிறிலங்கா அரசு தடுத்துவிட்டதால் நாள்தோறும் 15 தமிழர்கள் பட்டினியால் இறக்கின்றனர். ஒருபுறம் தாக்குதல், மறுபுறம் பட்டினி எனத் தமிழர்களை சிறிலங்காப் படை கொன்று குவிக்கிறது.

தமிழர்களின் படுகொலைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார். அவரை தமிழினத் துரோகிகள் சிலர் மாலை போட்டு வரவேற்பார்கள்.

இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் சோனியா காந்தி எந்தக் காலத்திலும் தமிழகம் வரமுடியாது" என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து தடையை மீறி கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதாகக்கூறி பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன் உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளையில் பனகல் மாளிகைக்கு அருகிலேயே மற்றொரு இடத்தில் புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, சென்னை நினைவரங்கத்தில் ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர், அந்த அமைப்பின் தலைவர் ஷீலு தலைமையில் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.

தமிழ் அமைப்புக்களின் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து சோனியாவுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வானூர்தி நிலையத்தில் இருந்து சாலை வழியாக செல்லாமல் உலங்குவானூர்தி மூலம் தீவுத் திடலுக்குச் சென்றுவிட்டார்.

Comments